
லோக் அயுக்தாவின் மாதிரி சட்டமுன் வரைவு, பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய வல்லுனர்கள் கருத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாதிரி சட்ட முன் வரைவு வெளியீட்டு நிகழ்ச்சியில், கர்நாடக முன்னாள் லோக்அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, பத்திரிக்கையாளர் ஞானி சங்கரன், ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி பூர்ணலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறும்போது, “ லோக்அயுக்தாவால் ஒரு வலுவான சக்தியாக செயல்பட முடியும். முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எடியூரப்பா வழக்கை போல், தவறு செய்யும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். ஆனால் நிர்வாகத்தில் இருப்பவர்கள், இதனை தவறாக பயன்படுத்தவும் கூடும் “ என கூறினார்.
இந்த சட்டமுன்வரைவானது, முதலமைச்சர் முதல் உள்ளூர் கவுன்சிலர்கள் வரை, எழுப்பப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு, எவரிடமும் அனுமதியின்றி விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கிறது.
இது அரசின் நிதியுதவியுடன், சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக இருக்கும்.
அடிப்படை ஆதாரங்கள் இருப்பின், பெயரில்லாத புகார்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, சூ மோட்டோ அடிப்படையில் விசாரிக்கப்படும்.
சுதந்திரமான விசாரணை அமைப்பை, லோக்அயுக்தாவின் கீழ் உருவாக்குவதற்கு பதில், ஏற்கனவே இருக்கும் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகத்தை லோக்அயுக்தாவுடன் இணைப்பதற்கும் இந்த சட்டமுன்வரைவு ஆவன செய்கிறது.
இந்த தொண்டு நிறுவனம், இந்த சட்ட முன்வரைவை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் கொண்டு போய் விவாதிக்க திட்டமிட்டுள்ளது.