கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 2000 வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன

Vernacular Sunday, February 28, 2016 - 20:07
இந்தி தெரியாத தமிழர்களுக்கு புரியும்படியாக , ஸ்மிருதி இரானியின் பாராளுமன்ற உரையை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது தமிழக பாரதீய ஜனதா.

தேவையான இடங்களில் உணர்ச்சிகளை காட்டும் தொனியிலும், நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும், முக குறிப்புகளுக்கு ஏற்றவகையில்  டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெருமளவு வரவேற்பினையும் பெற்றுள்ளது.

 இதுகுறித்து தமிழக பாரதீய ஜனதா பிரச்சார மேலாளர் எஸ்.ஜி. சூரியா கூறுகையில்” ஸ்மிருதியின் பேச்சை கேட்க,மொழி ஒரு தடையாக இருக்க வேண்டாம் என நினைத்தோம். ஆகவே தான் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோவை உருவாக்கினோம்.” என்றார்.

இதனால், பிரச்சார குழு இந்தி தெரிந்தவர்களின் உதவியுடன் அந்த பேச்சை மொழிபெயர்த்து, அதனை டப்பிங் கலைஞர் உதவியுடன் டப்பிங் செய்துள்ளனர்.

சூரியா மேலும் கூறுகையில் “ நாங்கள் ஸ்மிருதி இரானியின் இந்தி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்பவர்களை கொண்டு டப்பிங் செய்யவே திட்டமிட்டோம். ஆனால் அது சரிபட்டு வரவில்லை. அதனால் மற்றொரு டப்பிங் கலைஞரை தேர்வு செய்தோம்.” என்றார் .

ஒரேநாள் இரவில் கிடைத்த வரவேற்பில், சூரியாவும் அவரது குழுவினரும் திக்குமுக்காடி போயினர். ஆனால் இதுபோன்று எல்லா பேச்சுகளையும் டப்பிங் செய்ய முடியுமா என்றால் அது சற்று கடினம் தான்.

“ தொழில்நுட்பத்தை தற்போது எவரும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதால், எங்கள் டப்பிங் வீடியோக்களை, எங்கள் அரசியல் எதிரிகள் தவறாக பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக பயப்படுகிறோம். நல்ல நோக்கத்திற்காக நாங்கள் உருவாக்கும் வீடியோக்கள் எங்களுக்கே எதிரானதாக உருவாக நாங்கள் விரும்பவில்லை.” என்றார் சூரியா.

கடந்த 12 மணி நேரத்தில் அந்த வீடியோ 2000 க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ளது. “ அமெரிக்காவிலிருந்து சிலர் எங்களது இந்த முயற்சிக்கு நன்றியையும், பாராட்டுதலையும் கூறியுள்ளனர். இனிவரும் காலங்களில் கிடைக்கும் வரவேற்பினை பொறுத்து இது போன்ற முயற்சிகளை முன்னெடுப்போம்” என்றார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.