கருணாஸ் மூலம் முக்குலத்தோர் வாக்குகளை கவர அதிமுக தலைமை திட்டம்

news Sunday, April 03, 2016 - 16:31

 கருணாஸ், அதிமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தினர் நியூஸ் மினிட்டிடம் கூறியதாவது, நகைச்சுவை நடிகரான கருணாஸ் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். அதோடு இது தொடர்பான பத்திரிக்கை குறிப்பு அதிமுக தலைமையகத்திலிருந்து விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறினர்.

கடந்த சனிக்கிழமையன்று, நடிகர் கருணாஸ் அதிமுகவின் முன்னணி தலைவர்களை சந்தித்து, தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக உறுதி கூறியதாகவும், முக்குலத்தோர் வாக்குகளை கவர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியுள்ளார். கூடவே முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இருப்பினும்,2016 தேர்தலில் போட்டியிடவாய்ப்பளிப்பது பற்றி, அதிமுக தரப்பில் எந்தவித உறுதியும் கருணாஸிற்கு வழங்கப்படவில்லை. கடினமாக உழைக்கும்படி, அறிவுரை கூறப்பட்டதாக கருணாஸ் தரப்பில் கூறப்படுகிறது. கருணாஸ், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்.இந்த சமூகத்தில் அதிமுகவிற்கு நன்கு செல்வாக்கும் உண்டு. கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவர முடியும் என அதிமுக கருதுகிறது.

சமீபத்தில் தான் இயக்குனரும், நடிகருமான சுந்தர்ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.