
மதுரையை சேர்ந்த 15 வயது சிறுவன் மாரிமுத்து. மும்பையில் உள்ள ஒரு பேக்கறி கடையிலிருந்து தப்பியோடி மதுரை வந்துள்ளான். கடுமையான தீக்காயங்களுடன் வந்து சேர்ந்த அவனை கடந்த வியாழக்கிழமை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம், மதுரையை சேர்ந்த 15 வயது சிறுவன் மாரிமுத்துவின் தாய், தான் வாங்கிய 20000 ரூபாய் கடனை அடைப்பதற்காக, அவனை ஒரு குடும்ப நண்பருடன் மும்பைக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு, இந்த சிறுவன், அங்குள்ள பேக்கறி கடையில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளான் என கூறுகிறார் சர்வதேச நீதி பேரவையின் உறுப்பினரான குறளமுதன்.
“ எனக்கு தலைவலியாக உள்ளது என கூறி நான் படுத்திருந்தேன். அப்போது கடையின் முதலாளி என்னை பார்த்து, அடிக்க துவங்கினார். என்னை மோசமான வார்த்தைகளால் திட்டிய அவர், சூடான எண்ணெயை எனது கைகளிலும், கால்களிலும் ஊற்றினார். இதனை தொடர்ந்து,நான் அங்கு கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தேன். அத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல தக்க சமயத்திற்கு காத்து கொண்டிருந்தேன்.” என ஒரு மாதத்திற்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை விவரித்து சிறுவன் மாரிமுத்து கூறினான்.
தொடர்ந்து பள்ளிக்கு படிக்க செல்ல ஆர்வம் உண்டா என கேட்ட போது “ நான், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் அங்கேயே வேலைக்கு செல்ல வேண்டும். எனக்கு வேறு ஒரு வழியும் இல்லை” என மாரிமுத்து கூறினான்.
அவனது அம்மா ஒரு மாதத்திற்கு முன்தான் இறந்துள்ளார். அவனது தந்தையோ ஒரு குடிகாரர். அதனால், பள்ளியில் படிக்கும் அவனது இரு தம்பிகளையும் அவன் தான் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
“ இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் பலர் நாட்டின் பல பகுதிகளில் பேக்கறி கடை நடத்தி வருகின்றனர். இங்குள்ளவர்கள் பேக்கறி கடைக்கு கைராசியானவர்கள். இதனால் எண்ணற்ற டீன்ஏஜ் சிறுவர்களும், அந்த பேக்கறி கடைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.” என்கிறார் குறளமுதன்.
மதுரை போலீசில் இது தொடர்பான ஒரு புகார் தரப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.