
வரும் டிசம்பர் மாதத்தில் சென்னை மீண்டும் ஒரு கனமழையை சந்திக்க நேர்ந்தால் 2015 இல் சந்தித்த நிலையை சென்னை மக்கள் மீண்டும் அனுபவப்படலாம். அதே நேரம், இந்த நிலையை குறித்து புகார் சொல்வதற்கு தார்மீகரீதியான உரிமை இல்லாதவர்களாக இருப்போம்.
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், சென்னை மாநகரத்தில் அதற்கு முன்னர் எத்தகைய தவறுகள் நடந்ததோ அவை இன்னும் தொடர்வது ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
ஈஞ்சம்பாக்கம் கடற்கரைப் பகுதி ஆக்கிரமிப்புகளை எதிர்த்து, செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் மாபியாக்களை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திவரும் சுற்றுச்சூழலியாளர் சேகர், சோழிங்கநல்லூரையொட்டிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அதிக அளவில் கட்டுமானப்பணிகளை நடத்த வழியமைத்து கொடுத்துள்ளதன் மூலம் அரசே முன்னின்று அதனை நிரப்பி வருவதாக கூறுகிறார்.
நீராதாரங்களை அழித்து, அவற்றின் மீது கட்டுமான பணிகளை நடத்தியதன் விளைவாகவே கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சென்னை வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதுகுறித்து சேகர் நியூஸ் மினிட்டிடம் மேலும் கூறுகையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, ஜூலை 1 முதல் அரசு இந்த சதுப்பு நிலத்தை நிரப்ப துவங்கிவிட்டதாக கூறுகிறார். மேலும் தொடர்ந்து கூறுகையில் “இந்த நிலமானது ஒரு மீனவ குக்கிராமத்திற்குரியது. நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக, இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகிறோம். ஆனால், திடீரென, நில ஆக்கிரமிப்பாளர்கள், கடல் மணலையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி இவற்றை நிரப்புவதை நாங்கள் நேரில் பார்த்தோம். இந்த சதுப்பு நிலத்தை நிரப்பும் பணி தற்போது படு வேகமாகவே நடந்து வருகிறது.” என்றார் அவர்.
மேலும், இது தொடர்பாக தான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறக்கேட்டு பல மிரட்டல்கள் தனக்கு வருவதாக சேகர் கூறுகிறார்.
அதே வேளை, பொதுமக்களின் மறதியும், இது போன்ற பிரச்சினைகளில் அக்கறையின்றி இருப்பதும் மிகவும் கவலையளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
“இயற்கையான ஒரு நிலத்திற்கு நாம் பொருளாதார மதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அதனை இறுதி நிலைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால், ஆங்கில ஆட்சிக்காலத்தில் சதுப்பு நிலங்கள், பயன்படுத்தவியலாத வீணான நிலங்கள் என குறிக்கப்பட்டன. ஏனெனில், அவற்றிற்கு அவர்கள் பொருளாதார மதிப்பை வழங்காததே காரணம்.” எனக் கூறும் சுற்றுச் சூழலியாளர் ஸ்வேதா நாராயண் “ நாம் ஒரு மாற்றத்தையோ அல்லது இது போன்ற நிலங்களின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ளுவதற்கான முயற்சியையோ இதுவரை எடுக்கவில்லை. அதற்கான பார்வைகள் இல்லாத்தால், ரியல் எஸ்டேட் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகளை பற்றியே கவனித்து கொண்டிருக்கிறோம்.” எனக் கூறுகிறார்.
சென்னையை சேர்ந்த மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் “ எப்படி ஒரு சதுப்பு நிலத்தை கொலை செய்வீர்கள் ? “ என தனது முகநூல் பதிவில் கேள்வி எழுப்பியதை தொடர்ந்தே, பள்ளிக்கரணை சதுப்பு நீலத்தை மீட்பதற்கான கவனம் எழத் துவங்கியது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகள் கடந்த 2015 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள். இந்த வெள்ளப்பெருக்கிற்கு, இங்கிருந்த சதுப்புநிலம் முழுவதுமாக ரியல் எஸ்டேட் நிலமாக மாற்றப்பட்டு ஐ.டி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதே முக்கிய காரணமாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஸ்வேதா கூறுகையில், வல்லுனர்கள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்காக ஒரு முடிவுடன் வரும்போது, அரசு இந்த பிரச்சினையை தொடர்ந்து நீடிக்க செய்து, மாநகரத்தை சீரழிக்கும் வகையிலான தீர்மானங்களை எடுக்கிறது என்கிறார்
“குறுக்கு வழிகளும், பொறியியல் தீர்வுகளும் இயற்கை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஒரு போதும் நல்ல தீர்வாக அமைய போவதில்லை. அவை அதற்கு பதிலாக வேறொரு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்” என கூறினார் ஸ்வேதா.