
இரயிலில் பயணம் செய்யும் போது, உங்களுக்கு தரப்படும் போர்வையை மூடுவதற்கு முன் துர்நாற்றம் வருகிறது என சிந்திப்பவர்களில் நீங்களும் ஒரு நபரா ? ஆம். ஏனென்றால் அந்த போர்வையை, துவைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்பதே உண்மை.
மாநிலங்களவையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஒப்பு கொண்டு கூறிய தகவல் தான். வெள்ளிக்கிழமையன்று அவர் அவையில் கூறும்போது, போர்வைகள் சுகாதாரமற்றவை என்பதுடன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் துவைக்கப்படுகின்றன என்றார்.
மாநிலங்களவையில், ரயிலில் வழங்கப்படும் துணிகளின் சுகாதாரம் மற்றும் தரத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது இதனை அமைச்சர் கூறினார்.
இருப்பினும், கம்பளி போர்வைகள் மட்டுமே இரண்டு மாதத்திற்கு ஒருமுறை துவைக்கபடுகின்றன என கூறிய அமைச்சர், தலையணை உறைகளும், பெட்ஷீட்டுகளும் தினசரி துவைக்கபடுவதாக கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் படுக்கைகளை தாங்களே கொண்டு செல்வது தான் இந்த சூழலில் பொருத்தமாக இருக்கும் என்றார். கூடவே, மனோஜ் சின்காவின் வெளிப்படுத்தலுக்கு பின் இதுவே சிறந்த அறிவுரையாக இருக்கும் என கூறினார்.
அமைச்சர் சின்கா மேலும் கூறுகையில், ரயில்வேயில் 25 க்கும் அதிகமான இயந்திர சலவைகள் நிறுவப்பட உள்ளதால்85 % பயணிகள் தூய்மையான துணியை பெற முடியும் என்றார்.
இதனையடுத்து ரயில்வே தரப்பில், தனது பாதுகாப்பிற்காக, போர்வைகள் அடிக்கடி துவைக்கபடாததால், அதன் கூடவே ஒரு சுத்தமான ஷீட் ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ரயில்வே தரப்பில் கூறுகையில், கிருமிகளை கொல்வதற்காகவும், துர்நாற்றத்தை போக்கவும் போர்வைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை தூய்மைபடுத்தபடுகின்றன எனவும் கூறியுள்ளது.