ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கேட்டு தமிழக அரசு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, அந்த கடிதத்தை ஆதரித்திருந்தார்.
ஆனால், அவர் ஆதரித்த மறுநாள், அவரது வாரிசும், திமுக பொருளாளருமான முகஸ்டாலின் ‘இது ஒரு அரசியல் நாடகம்’ என விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், தமிழக அரசு, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் கருத்தினை கேட்டு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதம் வெளியான சில மணிநேரங்களில், திமுக தலைவர் கருணாநிதி, அந்த கடிதத்தை ஆதரித்து, இரட்டை ஆயுள்தண்டனையாக, 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஜெயில்வாசம் அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கைவிட்டார்.
ஆனால் திமுக பொருளாளரான முக ஸ்டாலின், அவரது தந்தைக்கு நேரெதிர் கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவின் இப்படிப்பட்ட அணுகுமுறை வரும் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்படும் நாடகம் என கூறியிருந்தார்.
இதுகுறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சரஸ்வதி நியூஸ் மினிட்டிடம் கூறும் போது, “ திமுகாவால் தான் இப்படிப்பட்ட அரசியலை செய்ய முடியும். அவர்கள் வரும் தேர்தலை எதிர்கொள்ளவே பயப்படுகிறார்கள். எங்களை விமர்சிக்கும் ஸ்டாலினால் ஏன் தனியாக செயல்பட முடியவில்லை ? ஏன் அவரது தந்தை மீண்டும் போட்டிட வேண்டும் என விரும்புகிறார் ? “ என கேட்டார்.
மேலும் கூறிய அவர்.” இந்த குற்றவாளிகளை தீவிரமாக எதிர்க்கும் காங்கிரசுடன் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள். அதனால், இது அவர்களது அரசியல் விளையாட்டு. எங்களுடையது அல்ல” என்றார்.
அதோடு, இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதாகவும், அம்மா அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என விரும்புவதாகவும், இது தேர்தலையொட்டி செய்யப்படுவதில்லை என்றும் கூறினார்.
பாரதீய ஜனதா தலைவர் பிரகாஷ் ஜாவேட்கர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்த கருத்தை கேட்டு கடிதம் எழுதியதன் மூலம் பிஜெபி மற்றும் காங்கிரஸ் மீது, ஜெயலலிதா அரசு ஒரு கல்லை எறிந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை இதனை எதிர்க்கவும் செய்துள்ளது.
இந்த விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு மனித தன்மையுடன் கூடிய அணுகுமுறை தேவை என பிஜெபி தமிழக தலைமை கருத்து கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.