"தவறு செய்து விட்டேன் " நீதிபதி கர்ணன் சசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒப்புதல் கடிதம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருபவர் நீதிபதி கர்ணன். இவரை சமீபத்தில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அந்த பணிமாற்றல் உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதி கர்ணன் மறு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்நிலையில், தான் பிறப்பித்த உத்தரவு தவறு தான் என ஒப்பு கொண்டுள்ளார் நீதிபதி கர்ணன்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதிகள் ஜெ.எஸ்.ஹேகர் மற்றும் பானுமதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: பல்வேறு சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பிற நீதிபதிகளால் கேலிக்குள்ளாக்கப்பட்டதால், மன குழப்பத்தில் இருந்தேன்” என கூறியுள்ளார்.
மேலும் “ கடந்த பிப்ரவரி,15, 2016 அன்று நான் எனது மன குழப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, இப்படி ஒரு தவறான உத்தரவை பிறப்பித்துவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, அவர் தான் தொந்தரவுகள் மற்றும் அவமானப்படுத்தப்பட்டதாக இரு சம்பவங்களை சுட்டி காட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தலித் மற்றும் பழங்குடி ஆணையத்தின் தலைவருக்கும் மற்ற முக்கிய பிரமுகர்களுக்கும் புகார் கடிதம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
ஊடகங்களும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய மோசமான நடத்தையில் ஈடுபட்ட நீதிபதிகளின் பெயர்களை கூறமுடியுமா என ஊடகங்கள் கேட்ட போதும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக நீதிபதி கர்ணன், தனக்கு இடப்பட்ட மாற்றல் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தவுடன், சுப்ரீம் கோர்ட் அவரது உத்தரவுக்கு தடை விதித்ததுடன், அவருக்கு விசாரிக்க எந்த வழக்குகளும் கொடுக்க கூடாது என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

