தமிழக சட்டமன்ற தேர்தலின் முக்கிய திருப்புமுனையாக திமுக- தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

news TN2016 Wednesday, March 02, 2016 - 14:53

இதுகுறித்து திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை இறுதிநிலையை அடைந்துவிட்டது.விரைவிலேயே இரு கட்சிகளுக்குமிடையே  கூட்டணி குறித்த முடிவு வெளியாகும் என கூறினார்.

“ அவர்கள் 90 சீட்டுகள் வரை கேட்டனர். ஆனால் நாங்கள் 54 முதல் 59 சீட்டுகள் வரை தருவதாக ஒப்பு கொண்டுள்ளோம். ஒன்றிரண்டு நாட்களில் சீட்டுகள் சம்பந்தமான இறுதி முடிவுக்கும் வந்துவிடுவோம்” என கூறினார்.

இந்த கூட்டணியை உறுதிபடுத்த கலாநிதி மாறனும் நேரடியாகவே விஜயகாந்திடம் பேசி சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கலாநிதி மாறன் ஏன் இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும் என நியூஸ் மினிட் தரப்பில் கேட்ட போது, “ விஜயகாந்திற்கும், கலாநிதி மாறனுக்கும் நிறைய பொதுவான நண்பர்கள் உள்ளனர். அதனால் இதில் அவர் தலையிட்டார்” என கூறப்பட்டது.

“சில குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்ந்து விவாதித்து கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு, திமுக கூட்டணி வென்றால், தேமுதிக அரசில் பங்கு கேட்ககூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.ஆனால் அவர்கள் உள்ளாட்சிகளில் பங்கு பெற்று கொள்ளலாம். கூடவே மேயர் பதவிகளும் வழங்கப்படும். எண்ணிக்கை எவ்வளவு என இனி தான் தீர்மானிக்க வேண்டும்” என மற்றொரு திமுக தலைவர் கூறினார்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக 41 சீட்களில் போட்டியிட்டது. அதிமுக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்ற பின், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இரு கட்சிகளுக்குமிடையே கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சிலவாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக தரப்பினர் தேமுதிக தங்கள் கூட்டணியில் சேரும் என நம்பிக்கையுடன்  இருந்தாலும், தேமுதிக  தரப்பில் எந்த உறுதியும் இதுவரை  வழங்கப்படவில்லை 

கடந்த மாதத்தில், நடந்த தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த், தான் இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டு சேரபோவதில்லை என கூறியதுடன், கிங் மேக்கராக இல்லாமல் தான் கிங்காக இருப்பேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கரும், விஜயகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணிக்காக சந்தித்திருந்தார்.

அதற்கு முன்னர், இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக அரசியல் மாற்றத்தை உருவாக்க, மக்கள் நல கூட்டணியுடனும் விஜயகாந்த் பேசியிருந்தார்.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.