24 மணி நேரம் தண்ணீர் சப்ளை செய்வதாக கூறி 7 கோடி நிதி ஒதுக்கி 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதன்பின்னர் கிடைத்து வந்த தண்ணீரின் அளவும் குறைந்தது

Vernacular Tuesday, March 08, 2016 - 10:10

கோயம்பத்தூரில் 24 மணிநேரமும் குடிதண்ணீர் சப்ளை செய்யும் திட்டத்தை அமல்படுத்த கேட்டு வீடுகளில், பொதுமக்கள் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 200 க்கும் அதிகமான குடும்பங்கள் இந்த போராட்டத்தில கலந்து கொண்டனர்.

இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கோயம்பத்தூர் மாநகராட்சி, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்வதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுசீலா கூறுகையில்” எங்களுக்கு குடிதண்ணீர் சரியாக கிடைத்து கொண்டிருந்த போது, இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு எங்களுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதுகுறித்து, ஆணையரிடம் நாங்கள் முறையிட்டோம். அப்போது அவர் எங்களை ஒரு வாரம் காத்திருக்கும்படி கூறினார். ஒரு வாரம்  தாண்டி மாதங்கள் கடந்த நிலையில், நாங்கள் வன்முறை  இல்லாமல் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.

கோவையின் கேஆர் நகர்,கவுண்டர் நகர், மணி நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 22 வது வார்டு பகுதிகளில் இந்த போராட்டம் நடந்தது. அப்பகுதியில் வந்த உள்ளூர் போலீசார், அங்கு வீடுகளில் தொங்கி கொண்டிருந்த கறுப்பு கொடியை அகற்றினர். மேலும் போராட்டம் நடத்திய பொதுமக்கள், போலீசார் தங்களை மிரட்டியதாக குற்றஞ்சாட்டினர். கூடவே, மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

“நாங்கள் இப்படி செய்வதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நினைத்தோம். ஆனால் நீண்ட வாக்குவாதங்களுக்கு பின், அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி தர முற்பட்டனர். ஆனால் எங்கள் தண்ணீருடன் அந்த 7 கோடி ரூபாய் எங்கு போனது ? “ என கேட்கிறார் சுசீலா.

இதனை தொடர்ந்து, மேலும் ஒருவார காலம், இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த பொறுக்கும் படியும், தான் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையர் உறுதியளித்தார்.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.