பண வலிமை , கூட்டணி குழப்பம் மற்றும் வாக்கு பிரிப்பு இவை தான் தோல்வியின் காரணம் என தொண்டர்களின் கருத்து

Tamil TN 2016 Wednesday, May 25, 2016 - 15:06

அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே, தங்கள் எம்.எல்.ஏக்களுக்காக காத்திருந்த திமுகவின் தொண்டர்களிடையே மௌனம் நிலவியது. அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினை, ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் 8 வது வரிசையில் அமர வைத்ததை பலரும் கோபத்துடன் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, கட்சி இம்முறை தோற்றதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்தபோது, அதிமுக பணம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது என்ற வாதமும் எழுந்தது.

 

“பணத்தின் வலிமை. இவையெல்லாம் பணத்தின் வலிமை தான்.” என கூறினார் தென்காசியிலிருந்து வந்த ஒரு உறுப்பினர்.அவர் மேலும் கூறுகையில் “ நாம் எங்கும் பணம் கொடுக்கவில்லை. நமது சொந்த வலிமையை பயன்படுத்தியே வெற்றி பெற்றிருக்கிறோம். அதுவே நல்ல விஷயம். நாம் பல தொகுதியில் 1000 வாக்குகளுக்கும் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறோம்.” என்றார் அவர். இஞ்சி டீ விநியோகிக்கப்பட்ட நேரத்தில் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்த அவர், கூட்டணி அமைப்பதிலும், சீட் பங்கிடுவதிலும் இருந்த பிரச்சினைகளுக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார். “ ஏன் பல தொகுதிகளில் நாம் தோற்றோம் ? நமது சொந்த பலத்தில் போட்டியிட்டிருந்தாலோ அல்லது சிறிய கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்து போட்டியிட வைத்திருந்தாலோ கூட நாம் அதிக சீட்டுகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்.” என கூறினார்.

 

இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னங்கள் மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகமானவை. வீட்டு சுவர்களிலோ, பாறைகளிலோ சின்னத்தை வரையாமலேயே இந்த இரு சின்னங்களும் மக்கள் மத்தியில் ஆழ பதிந்து அவர்கள் முடிவெடுக்க உதவிகரமாக இருக்கின்றன.மனித நேய மக்கள் கட்சி, ஐ.யு.எம்.எல் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும், அவர்கள் எவரும் திமுகவின் சின்னத்தில் போட்டியிடவில்லை.

மற்றொரு தொண்டர் இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்தை கிண்டலடித்தார். “மக்கள் நலக்கூட்டணி நாம் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது” என கூறினார் விழுப்புரத்திலிருந்து வந்த தொண்டர் ஒருவர்.” நாம் என்ன நினைத்தோமோ அதனை அவர்கள் சரியாகவே செய்தார்கள். நம்மை விட்டு 500 வாக்குகளாவது பிரித்து, நாம் தோல்வியடைய வழி வகுத்துவிட்டனர்.” என கூறினார் அவர்.

 

பணவலிமையை குறித்த விவாதம் மீண்டும் திரும்பிய போது, “ கட்சி தலைமையின் தெளிவான வழிகாட்டுதலின்றி நம்முடைய ஆட்களில் சிலர் பணம் கொடுத்துள்ளனர். அவற்றை நிரூபிக்க ஒரு வழியும் இல்லை.” என ஒருவர் கூற, ராயபுரத்திலிருந்து வந்த மற்றொரு தொண்டர் அதனை மறுத்து பேசினார். “ நாம் அதனால் தான் வெற்றி பெற்றோம் என்கிறீர்களா ? நான் அப்படி நினைக்கவில்லை” என்றார் அவர்.

 

தொடர்ந்து பேச்சு ஸ்டாலினை குறித்து நகர்ந்தது. “ நாமெல்லாம் எப்படி முன்னோக்கி செல்வது என விவாதித்து கொண்டிருக்கிறோம். இது தளபதியின் நேரம். அவர் ஒருவர் தான் நாம் முன்னோக்கி செல்வதற்கான வழி. நாங்கள் அவருக்காக காத்திருக்கிறோம்” என்றார் ஒருவர்.

 

இந்த தேர்தல் ஸ்டாலினுக்கு முக்கிய திருப்புமுனையாக இருந்தது என்கிறார் மதுரையை சேர்ந்த ஒரு மூத்த தலைவர். “ தனது தந்தையால் உடல்நலம் காரணமாக நேரில் செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் அவர் நேரில் சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் “  என கூறினார்.

 

முக ஸ்டாலின் சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டதும், தொண்டர்கள் கலைந்து செல்ல துவங்கினர். “ முக ஸ்டாலின் தமிழக அரசியலின் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்த கூடியவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாங்கள் மனதார அவரை வரவேற்கிறோம்.” என்றார் திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன். தொண்டர்களால் பணம் விநியோகம் செய்யப்பட்ட தகவல்களை குறித்து அவரிடம் கேட்ட போது, கட்சி தலைமைக்கு அது தெரியாமலிருந்திருக்கலாம் என்றார். “ வெற்றி பெற்ற வேட்பாளர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். பணவலிமையால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுக்கு அந்த மாதிரி பணமும் இல்லை” என்றார் அவர்.