
வானியல் மையத்தினர் புதன்கிழமையன்று, 25 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தை போன்ற வெள்ளபெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கனமழைக்கான வாய்ப்புகளை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 24 மீட்பு படகுகளுடன் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் கூடவே, டிசம்பர் வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்களும் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின், ஒவ்வொரு மண்டலங்களிலும், வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. இதனிடையே, வானிலை மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
“காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு பகுதியை நோக்கி இன்று மாலைக்குள் நகரும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம், வடதமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது வழக்கத்துக்கு மாறான ஒன்று அல்ல. நாங்கள் ஏற்கனவே இதை கணித்தது தான். அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர், சாதாரண முன்னெச்செரிக்கைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.நாளையும் கூட மிகக்குறைந்த அளவில் மழை இருக்கலாம். ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரையை விட்டு அதற்கு முன்னரே அகன்று விடும்” என்றார் வானியல் ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர்.
டிசம்பர் மாத வெள்ள பெருக்கின் போது பணியாற்றிய அதிகாரிகள், அவர்கள் பணியாற்றிய அதே இடங்களில் மீண்டும் பணியாற்றி வருகின்றனர்.
அனைத்து சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடவே, அவ்வாறு தேங்கி நின்றால் அவற்றை வெளியேற்றுவதற்கான தண்ணீர் பம்புகளும் செயல்பட கூடிய நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரங்கள் ஏதேனும் முறிந்து விழுந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சிக்கு தெரியபடுத்த 1913 என்ற ஹெல்ப்லைன் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்படுபவர்களுக்கு அம்மா உணவகமும் உணவுகள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடுமையான காற்று வீசும் என வானியல் ஆய்வு மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மோசமான நிலையில் நிற்கும் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி வருகின்றனர்.
சுரங்க பாதைகளில் வெள்ளம் தேங்கிவிடுவதற்கான சூழலை தவிர்க்க அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கணேசபுரம், பெரம்பூர் ஹை ரோடு, வில்லிவாக்கம் , செங்குன்றம் சுரங்கபாதைகள், கெங்கு ரெட்டி சுரங்க பாதை என அனைத்து சுரங்க பாதைகளுக்கு அருகிலும் மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட மருத்துவகுழுவினரும், தயாராகவே வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் குறித்த எல்லாவித பிரச்சினைகளுக்கும், கட்டுப்பாட்டு எண் 1070 ஐ தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.