கட் அவுட்களை வைக்க நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை அமல்படுத்த கேட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என போலீசார் கூறுகின்றனர்

news பேனர்கள் Thursday, February 11, 2016 - 18:11

அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்காக அக்கட்சியின் தொண்டர்கள் வீதி தோறும் வைக்கும் பெரிய பேனர்களும்,கட் அவுட்களும் தமிழக மக்களுக்கு பழகி போன ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் கோயம்பத்தூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் இத்தகைய கட் அவுட்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
கடந்த சனிக்கிழமை, கோயம்பத்தூர் அருகேயுள்ள சரவணம்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பேனரின் மீது பைக்கில் வந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் மோதி காயம் அடைந்துள்ளார். தொடர்ந்து பின்னால் வந்த வாகனம் ஒன்று அந்த பைக்கின் மீது மோதி  அது சுக்குநூறாக உடைந்துள்ளது.
 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குமார், நியூஸ் மினிட்டிடம் கூறியபோது, ரோட்டினை வழிமறித்து இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை ரோட்டின் ஒரு பாகத்தை அடைத்து கொண்டிருக்கின்றன.அந்த இளைஞர் பேனர் இருப்பதை கவனிக்காமல் வந்தார். முதலில் அவர் பேனரில் மோதி பின்னர் பின்னால் வந்த வாகனத்தின் மீது மோதினார். அரசியல் கட்சிகள் சாலைகளை மறித்து இப்படி கட்அவுட்களை வைக்க கூடாது. அது ரோட்டில் நடந்து செல்பவர்க்கும், வாகனங்களுக்கும் பிரச்சினை ஏற்படுத்தும்." என்றார் 
 
அந்த இளைஞர், கோயம்புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகின்றார்,இது தொடர்பாக அளிக்கப்பட  புகார் மனுவை போலீசார் வாங்க மறுத்ததாக அந்த கிராமத்தினர் குற்றஞ்சாட்டினர். 
 
இது தொடர்பாக கோயம்பத்தூர் மாநகராட்சி கவுன்சிலர் மீனா லோகநாதன் நியூஸ் மினிட்டிடம் கூறிய போது,"  ஒரு நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதாக இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு தகவலை பொதுமக்களுக்கு தெரியபடுத்துவதற்கோ பேனர் அவசியம் தான்.ஆனால் இந்தமாதிரி பேனர்கள் விளம்பரம் தேடி கொள்வதற்காக வைக்கப்படுபவை தவிர இவற்றால் வேறு ஒரு பயனும் இல்லை" என்றார்.
 
தொடர்ந்து அவர் பேசுகையில், "இது போன்ற பேனர்கள் எந்த காரணமும் இன்றி வைக்கப்படுகின்றன. இதற்காக நிறைய பணமும் செலவிடுகின்றனர். ஏன் அந்த பணத்தை வேறு ஏதாவது நல்ல நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளகூடாது ? " என கேட்கிறார்.
 
கடந்த டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா கட் அவுட்களை கிழித்ததாக கைது செய்யப்பட்ட சென்னை சமூக சேவகர் சந்திர மோகன் கூறுகையில்" இந்த பேனர்களால் பாதசாரிகளுக்கும்,இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக உள்ளது.இவற்றை வைப்பதற்கு நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை அமல்படுத்த போலீசுக்கோ அல்லது வருவாய் துறை ஊழியர்களுக்கோ எந்தவித தைரியமும் இல்லை.அவர்களிடம் கேட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறுகின்றனர். இதனால் தான் நாங்கள் கட் அவுட்களை கிழித்து எறிகிறோம்" என்றார்.

Show us some love! Support our journalism by becoming a TNM Member - Click here.