அவளது பெற்றோர் மீண்டும் அவளை தங்களுடன் எடுத்து செல்ல மறுத்துவிட்டனர்

news Tuesday, March 08, 2016 - 18:05

ஆஷிகா எனும் குழந்தை, தான் பிறந்த ஆறு வாரங்களுக்கு பின், தனது பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளது. வெறும் ஆறே வார குழந்தையான ஆஷிகாவை பெற்றோர் வெறுக்க காரணம் பாலினத்தை அடிப்படையாக கொண்டதல்ல. அந்த குழந்தை டவுன் சின்டரம் எனப்படும் மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆஷிகாவின் பெற்றோர், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களாக வசதியுடன் இருந்தாலும், அவர்கள் ஆஷிகாவை காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு குழுவிற்கு, தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிறகு 3 வாரங்களுக்கு பின் அதாவது ஜனவரி 24 இல் அந்த குழந்தை செங்கல்பட்டில், குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் கீழுள்ள ஒரு வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

“அந்த குழந்தையின் பெற்றோர்கள் எங்களை நிர்பந்தித்தனர். அந்த குழந்தையின் பாட்டியும், தாத்தாவும் கூட எங்களை நம்பவைப்பதற்காக எங்கள் அலுவலகத்திற்கு வந்தனர்.” என்கிறார் குழந்தைகள் நல்வாழ்வு குழு உறுப்பினர் சகீருதீன் முகம்மது. 

மேலும் அவர் கூறுகையில், அந்த குழந்தை டவுன் சிண்டரம் நோயால் பாதிக்கப்பட்டதால்,பெற்றோர்கள் இந்த குழந்தையை அப்புறப்படுத்த விரும்பினர்.கூடவே, மருத்துவர்கள் கூட, இந்த நோயை குணப்படுத்த அதிக பணம் செலவாகும் என பெற்றோர்களிடம் கூறியுள்ளனர் “ என கூறினார் சகீருதீன்.

குழந்தைகள் நல்வாழ்வு குழு, சிறார் நீதி சட்டப்படி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் தேவையான அரவணைப்பையும் கண்காணிக்கும் ஒரு அமைப்பு. அந்த சட்டத்தின்படி, ஒரு குழந்தை, அதன் பெற்றோரால் கவனிக்க முடியவில்லை என கொண்டுவரப்பட்டால், அதனை அரசு சான்றிதழ் பெற்ற பராமரிப்பு இல்லங்களில் வைத்து பராமரிக்க வழிகாட்டுகிறது.

“ நாங்கள் குழந்தையை அவர்களுடன் வைத்திருக்க, கவுன்சிலிங் கொடுத்து பார்த்தோம்.இருப்பினும் அவர்கள் அதற்கு மனமில்லாமல் இருந்தார்கள். அரசு, அந்த குழந்தையை பராமரிக்க, அவர்களை விட சிறந்த முறைகளை கையாளும் என அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.” என்றார் சாகீருதீன்.

குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் தலைவர் மருத்துவர் மணிகண்டன், இந்த நேரங்களில் குழந்தைகளுக்கு மருத்துவமனையை விட வீடுகளே பராமரிப்பதற்காக தேவைப்படும்.” அந்த குடும்பத்தினர், கணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால், குழந்தையை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்க இயலாது” என கூறினர்.

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, ஆஷிகாவின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருந்தது.” அவள், ஆம்புலன்சில்  உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் ஒரு மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டாள்.”

சமூக சேவகர் தீபக் நாதன் கூறும்போது” உணர்ச்சியற்ற பெற்றோர்களே இது போன்ற செயல்களை செய்வர். ஒரு குறைபாடுள்ள குழந்தைக்கு குடும்பத்துடன் இருக்க உரிமை உள்ளது. உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளன. தற்போது இந்த குழந்தை கூட அரசு இல்லத்தில் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அரசு அவளை தனிக்கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இப்படிப்பட்ட குழந்தைகளை கவனிக்க ஒரு கொள்கையும் அரசிடம் இல்லை.” என்றார்.

சென்னையை மையமாக கொண்ட ஸ்ரீ அருணோதயம் சேரிட்டபிள் ட்ரஸ்ட் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளை பராமரித்து வருகிறது. சென்னையிலிருந்து மட்டும், ஒவ்வொரு  மாதமும் இரண்டு முதல் மூன்று கைவிடப்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் அங்கு கொண்டு வந்துவிடப்படுகிறார்கள்.

அதன் நிறுவனர் அய்யன் சுப்பிரமணியன், தருமபுரி,ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பராமரிப்பு செலவுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்றார். தொடர்ந்து கூறுகையில்,” இந்த மாவட்டங்களில் உள்ள பல பெற்றோர்கள் பராமரிப்பு செலவு, ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதால் இத்தகைய குழந்தைகளை பராமரிக்க விரும்புவதில்லை. இது போன்ற குழந்தைகளை பராமரிக்க,  நல்ல தைரியமும், போதிய வசதியும், கூடவே அதிக கவனமும் தேவை. அதனால் தான் பல பெற்றோரும், குழந்தைகளை இங்கு வந்து விட்டு செல்கின்றனர். என்றார்.

இருப்பினும் சில வழிமுறைகள் உதவும் என்கிறார் அய்யன் சுப்பிரமணியன். “ பெற்றோர்கள் முன்கூட்டியே குழந்தைகளின் இந்த பிரச்சினைகளை குறித்து தலையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தல், பிசியோதெரபி முறைகளை குறித்த நேரத்தில் பெற்று கொண்டால், குழந்தைகளுக்கு ஒரு குறிப்பட்ட அளவு பயிற்சியை கொடுக்க முடியும். கைவிடுவதும், தவிர்ப்பதும் நல்ல தீர்வாக அமைந்துவிடாது. தகுந்த மருத்துவரையோ, அல்லது ஆலோசகரையோ கலந்து ஆலோசிப்பதே சிறந்த தீர்வை தரும்.” என்றார்.

ஆஷிகாவை தற்போது பராமரிப்பவர்கள், மிகவும் கவனமாக பராமரிக்கிறார்கள். அவளது எதிர்காலத்தை குறித்து மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். தற்போது அவளின் உடல் நலமும் தேறி வருகிறது. உயிர்காக்கும் கருவிகளின் உதவியும் தேவையில்லை. “ ஆனால் அவள் பலவித பிரச்சினைகளில் உள்ளாள். எங்களால் ஒரு உறுதியையும் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். அந்த இல்லத்தில் ஒரு குழந்தைகள் நல மருத்துவரும் உள்ளார். குழந்தைகள் நல குழுவின் கீழுள்ள ஒரு சிறந்த இல்லத்தில் வைத்து தான் அவள் பராமரிக்கபடுகிறாள். எல்லாம் நன்றாக அமையும் என நம்புகிறோம்” என கூறினார் மணிகண்டன்.

இருப்பினும், அவள் முழுவதும் குணமடையும் வரை, அவளது எதிர்காலம் கவலைக்குரியதாகவே இருக்கும். மணிகண்டன் மேலும் கூறுகையில்  “ நாங்கள் அவளை சிறப்பாக பராமரிப்போம். சிறப்பு பள்ளி கூடத்தில் அனுப்பி படிக்க வைப்போம். அனைத்துமே அவளது உடல் நிலையை பொறுத்து தான் “ என்றார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.