பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களாலும் மன அழுத்ததிற்கு பலர் உள்ளாகியுள்ளனர் என்கிறார்கள் இத்துறை கலைஞர்கள்

news சின்னத்திரை Monday, March 14, 2016 - 16:28

தமிழ் டிவி சீரியல் நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை, தமிழ் சின்னத்திரை உலகை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி ராடனின் தாமரை என்ற சீரியலில் நடிக்க சென்ற போதும் அவர் இயல்பாகவே இருந்துள்ளார். தனது நெருங்கிய நண்பர்களுடன், தனது வாழ்க்கையில் தான் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து பகிர்ந்து கொண்டாலும், எல்லா நாட்களையும் போல் சாதாரணமாகவே அவர் இருந்துள்ளார்.

அதன் பிறகு, மூன்று நாட்களுக்கு பின், ஞாயிற்றுக்கிழமையன்று அவர்  விஷம் கலந்த பானத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சாய் பிரசாந்தின் இந்த திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போன அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வேதனையில் மவுனமாகிவிட்டனர். அவருக்கு நெருங்கிய சிலர், குடும்ப பிரச்சினையாலும், பண நெருக்கடியாலும் கடந்த சில நாட்களாகவே அவர் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினர். ஆனால், சின்னத்திரையை சார்ந்தவர்கள், டிவி சீரியல்களில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து அதிக மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு, யாருடைய உதவியையும் பெற முடியாமல், இறந்து போவதை சுட்டி காட்டுகின்றனர்.  

தனது மனைவி சுஜிதாவுக்கு, இறக்கும் முன் சாய் பிரசாந்த் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், தனது இந்த முடிவுக்காக தன்னை அவர் திட்ட கூடாது என கூறியுள்ளார். மேலும் தனது மரணம், சுஜிதாவுக்கு எந்த பிரச்சினையையும் உருவாக்காது எனவும், சுஜிதாவின் நகைகளும், 5 லட்சம் ரூபாய் பணமும், அவருக்கு தனது குடும்பத்தினர் தருவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் இறந்த பிறகேனும், தன மீதுள்ள கோபத்தை விட்டுவிடும்படியும் தனது மனைவியுடன் அந்த கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார். கூடவே தனது மகள் ரக்ஷிதாவிற்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருந்ததாகவும் எழுதியுள்ளார்.

“யாருமே எனது மரணத்திற்காக சண்டையிட கூடாது. எனது மரணத்திற்கு நானே காரணம்” என குறிப்பிட்டுள்ள அவர், ராதிகா சரத்குமாரை அம்மா என குறிப்பிட்டுள்ளதுடன், அவருக்கும், அவரது ராடன் நிறுவனத்துக்கும் நன்றி கூறுவதாக எழுதியுள்ளார்.

 

 

சாய் பிரசாந்த், சின்னத்திரை உலகில் திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்தவர். புகழ்பெற்ற டிவி சீரியலான தாமரையில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டவர். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின், சுஜிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ரக்ஷிதா என ஒரு மகளும் உண்டு.

அவரது மரணம் குறித்து ராதிகா சரத்குமார் கூறுகையில்” தனது வாழ்நாள் முழுவதும், திறமைவாய்ந்த நபராக அவர் இருந்தார். நகைச்சுவை கலந்த மனிதராகவும், சிறந்த பலகுரல் கலைஞராகவும் இருந்தார்.சரத்குமாரின் ஒரு படத்தை வரைந்து அதை எங்களுக்கு அன்பளிப்பாகவும் தந்தார்.போன வாரம் தான் நான் அவரை பார்த்தேன். என்னால் இதனை நம்பவே முடியவில்லை” என கூறிய அவர், “ நடந்த சம்பவங்கள் அனைத்தாலும், திகைத்து போயுள்ளேன்.” என்றார்.

மேலும் அவர், சின்னத்திரையில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதாக கூறினார். இதனிடையே நடிகர் சங்கம் சார்பில், நடிகர்களுக்கு மன நல பாதிப்புகளிலிருந்து மீண்டு வர கவுன்சிலிங் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவி நடிகையான சியாமந்த கிரண் கூறுகையில், “சாய் பிரசாந்தை போன்றே பல நடிகர்கள் இது போன்ற மன அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நிரந்தர தொழிலாக இல்லை. நெகிழ்வுத்தன்மை உடையதாக இத்துறை உள்ளது. இத்துறையிலிருக்கும், மக்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகின்றனர். எல்லாராலும், சிறப்பாக செயல்படமுடியாது. சிலர் இப்போது சிறப்பாக இருக்கலாம், சிலர் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படலாம். சிலரால் அப்படி செயல்பட முடியாமலேயே போகலாம். ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை பல கலைஞர்களுக்கும் சரியாக கையாள தெரியவில்லை.” என்றார் அவர்.

மற்றொரு நடிகையான நீலிமா கூறுகையில், “ அவரது மரணம் குறித்து நான் எதுவும் கூடுதலாக பேச விரும்பவில்லை. அவர் போய்விட்டார். ஆனால் இது போன்று பலர் இன்னும் அழுத்தங்களுக்கு உட்பட்டு உள்ளனர். தனிப்பட்ட முறையிலும், பொருளாதார ரீதியாகவும், நாங்களும் ஒரு கலைஞராக, அழுத்தங்களுக்கு உட்பட்டு இருக்கிறோம்” என்றார்.

சியாமந்தா கூறுகையில், “ மகிழ்ச்சியை தக்க வைக்க குடும்ப உதவி கலைஞர்களுக்கு அவசியம். நீங்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில், குடும்பத்தினரும் சேர்ந்து குறை சொல்வது அவ்வளவு நல்லதல்ல. இதனை நிறுத்த வேண்டும். பெரும்பாலான மக்கள் இந்த துறை எங்களுக்கு எவ்வளவு கடினமானது என புரியாமல் உள்ளனர்.” என்றார்.

This is a translation from our English article.

Topic tags,