
கன்னியாகுமரி மாவட்டம். சுற்றுலாத் தலத்திற்கு பெயர்போன மாவட்டம். இங்குள்ள அடிப்படை, மற்றும் அவசரமாக தீர்வு காண வேண்டிய பிரச்சினை என்ன? என இங்கு வசிக்கும் ஒருவரிடம் கேட்டால், மோசமான நிலையில் இயங்கும் அரசு பஸ்களையும், அவை இயக்கப்படும் சாலைகளையும் குறிப்பிட்டு சொல்வார். குண்டும் குழியுமாக பழுதடைந்த சாலையில் மோசமான பஸ்சை இயக்கினால் அதில் பயணம் செய்யும் பயணிகள் இரட்டிப்பு வேதனைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட அந்த பஸ்கள் ஒவ்வொரு குண்டும், குழிகளிலும் ஏறி இறங்கும் போதும், அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பிரச்சினைகளை இலவசமாகவே பெற்றுவிடலாம்.
குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள், முறையான தகுதி சான்றிதழ் ( Fitness Certificate – FC ) பெறாமலேயே இயக்கப்படுகின்றன என சுட்டி காட்டுகிறார் சமூக சேவகர் ஜெனித். “ தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி, குமரி மாவட்டத்தில் , திருவட்டார் டிப்போவில் மட்டும் இயக்கப்படும் அரசு பஸ்களின் தகுதி சான்றிதழ் பெற்ற தேதியை கேட்டோம். அவற்றில் அவர்கள் அனுப்பிய மொத்தம் 84 பஸ்களில் 79 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 25 க்கும் அதிகமான பஸ்கள் ஒருவருடம் கழிந்தும் தகுதி சான்றிதழ் பெறவில்லை. ராணிதோட்டம் டெப்போவில் இதே போன்று 20 க்கும் அதிகமான பஸ்கள் தகுதி சான்றிதழ் பெறாமல் உள்ளன” என கூறும் ஜெனித், மேலும் கூறுகையில் “ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற போக்குவரத்துதுறை விதி கூட தற்போது பின்பற்றபடுவதில்லை.” என்கிறார்
முறையாக தகுதி சான்றிதழ் பெற முடியாததன் பின்னணி குறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் விசாரித்த போது “கடந்த காலங்களில் புதிய பஸ்களை பாடி கட்டி இயக்கத்திற்கு உடனுக்குடன் விடுவது வழக்கம். ஆனால் தற்போது அத்தகைய நிலை இல்லை. எத்தனை பஸ்கள் பாடி கட்டப்பட்டுள்ளதோ, அத்தனை பஸ்களும், இயக்க வைக்க முதலமைச்சரின் நாளுக்காக பல மாதங்கள் வரை காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. புதிய பஸ்கள் முதன் முறையாக இரண்டு ஆண்டுகளின் முடிவில் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்பது விதி. இவ்வாறு ஒரே நாளில் இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் ஒரே நாளில் தகுதி சான்றிதழுக்காக தயார் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. போதிய நிதி மற்றும் ஊழியர்கள் இல்லாததாலும் அதன் உதிரிபாகங்கள் இல்லாததாலும் அவற்றை குறிப்பிட்ட அந்த நாளில் தகுதி சான்று பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது” என கூறுகின்றனர்.
இப்படியிருக்க, குமரி மாவட்டத்தில் பல பஸ்கள் 15 ஆண்டுகள் கடந்து 20 ஆண்டுகள் பழமையான பஸ்கள் கூட இயக்கப்படுவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை, பிற மாவட்டங்களில் ஓடி களைத்து கண்டம் பண்ணப்பட்டவை. அவற்றை போக்குவரத்து கழக நிர்வாகம் ஒரு புதிய சேசை கொடுத்து மூன்று பழைய பஸ்கள் என வெளிமாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெற்று குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து இயக்குகிறது. இவற்றில் முக்கியமான பழுதுகள் ஏற்பட்டால் கூட சரி செய்யபடுவதில்லை. “ பஸ்களை ரீகண்டிஷன் செய்யும் போது முக்கிய உதிரிபாகங்களான பிரேக் லைனர் , ரெவிட் , ஈடூ வால்வு போன்றவை கூட மாற்றப்படுவதில்லை. இன்னும் சொல்லபோனால் பிரேக் லைனரை கட்டுப்படுத்தும் சிலேக் அட்ஜஸ்டர் குமரி மாவட்டத்தில் இயங்கும் 870 பஸ்களில் 600 க்கும் அதிகமான பஸ்களில் முறையாக மாற்றப்படுவதில்லை. இந்த சிலேக் அட்ஜஸ்டர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டியவை. புதிய வண்டிகளில் இவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்ததக்க வகையில் இருக்கும். அவற்றை மாற்றுவதற்கு கூட ஸ்பேர் பார்ட்ஸ்கள் இல்லாத நிலைக்கு போக்குவரத்து கழக நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.” என்கிறார்கள் போக்குவரத்து கழக ஊழியர்கள்.
இதனால் பெரும்பாலான பஸ்கள் பிரேக் இல்லாமலேயே ஓடி கொண்டிருக்கின்றன. பஸ்களின் மோசமான நிலையை அறிந்து டிரைவர் பஸ்ஸை இயக்க மறுத்தால் குறிப்பிட்ட அந்த டிரைவருக்கு பணி வாய்ப்பு மறுக்கபடுகிறது. இதற்கு அஞ்சி பல டிரைவர்களும், கண்டம் பண்ணபட வேண்டிய பஸ்களை உயிருக்கு பயந்து மெதுவாக இயக்குகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளுக்கு பயணம் செய்ய முடியாத நிலையே உள்ளது. இன்னும் சில டிரைவர்கள் , தங்கள் உயிரையும் உடைமையும் பாதுகாக்க தங்கள் சொந்த செலவிலேயே இது போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி மாட்டிவிடுவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகின்றனர்.
தகுதி சான்றிதழ் பெற செல்லும் அரசு பஸ்கள் கூட முறையாக பழுது நீக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எபிலைசியஸ் ஜோயல். “ பொதுவாகவே தகுதி சான்றிதழ் பெற செல்லும் வாகனங்கள் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து முழு அளவில் சர்வீஸ் செய்து, அவற்றை முழுவதுமாக பழுது நீக்கிய பின்னரே தகுதி சான்றிதழ் பெற கொண்டு செல்லப்படும். நீங்கள் புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு தகுதி சான்றிதழ் பெறப்பட்டதாக கூறப்படும் பஸ்ஸில் ஏறி பாருங்கள். அதன் சீட் ஆடி கொண்டிருக்கும். மழை காலத்தில் மழை நீர் பஸ்சினுள் ஒழுகும். எப்சிக்காக சென்று ஒரு வாரம் கூட ஆகாமலேயே, பிரேக் இல்லாமல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ள பஸ்கள் ஏராளம்” என குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் “ கடந்த ஆண்டு பிரேக் பிடிக்காமல் சுங்கான் கடை குளத்தில் விழுந்து டிரைவர் பலியான 309 பஸ் கூட தகுதி சான்றிதழ் பெற்று சில வாரங்களே ஆனது தான். போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்களை முறையாக ஆய்வு செய்யாமலேயே தகுதி சான்றிதழை கொடுத்து விடுகின்றனர். இதனால் தினந்தோறும் ஆங்காங்கே பஸ்கள் விபத்துக்குள்ளாகி செய்தியாகி கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது “ என்கிறார்.
அரசு பஸ்களின் இத்தகைய நிலையை குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பஸ்கள் நஷ்டத்தில் இயங்குவதால் ஏற்படும் நிதி இழப்பை சுட்டி காட்டுகின்றனர். தமிழக அளவில் சராசரியாக கி.மீ ., ஒன்றுக்கு ரூ. 18 வருமானமாக கிடைக்கிறது .ஆனால் செலவு கி.மீட்டருக்கு ரூ .22 ஆக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மாதம் ரூ. 400 கோடி வரையில் போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இந்த நிலை குமரி மாவட்டத்தில் கி.மீட்டருக்கு ஆறு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பஸ்களை அன்றாடம் இயக்க தேவையான டீசல் செலவுகள் ,தினசரி செலவுகள் மற்றும் நீதிமன்ற நஷ்டஈடுகள் போன்ற செலவுகளுக்கே போக்குவரத்து கழகம் திண்டாட வேண்டிய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். அதோடு மானிய தொகைகள் அரசு தரப்பில் இருந்து சரிவர வரவில்லை என கூறுகின்றனர். இலவச பஸ் பாஸ் மூலம் 6000 கோடி ரூபாய் தமிழக அளவில் போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக கொடுக்க வேண்டிய நிதியை அரசு கொடுக்கவில்லை. இது போன்றே டீசல் மானியம் 1500 கோடி ரூபாயும் வரவில்லை என்கின்றனர்.
போக்குவரத்து கழகத்தின் அதிகப்படியான செலவை ஈடுகட்ட, நிர்வாகத்தினர் தொழிலாளிகளின் நலநிதிகளை கொடுக்காமல் அவற்றை எடுத்து செலவு செய்வதாக தொழிலாளிகள் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குமரி மாவட்ட மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளதால், லாப நோக்கமின்றி அரசு, மலைப்பாங்கான இம்மாவட்டத்தின் தன்மையை கருத்தில் கொண்டு எல்லா தடங்களிலும் தரம் வாய்ந்த பஸ்களை இயக்க வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.