
By Parthiban
“நம்ம கேப்டன் கிங் ஆக வேண்டுமா.. கிங் மேக்கர் ஆக வேண்டுமா?” என்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த பொதுக்குழுவில் விஜயகாந்தின் மைத்துனரும், இளைஞரணி செயலாளருமான சுதீஷ் கேட்டார். கிங்.. கிங்.. என்று கூட்டம் ஆர்ப்பரித்தது. ஆனால் அந்த ஆர்ப்பரிப்புகளால் புல்லரிப்புக்கு ஆளாகி உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கக் கூடியவர் அல்ல தேமுதிக தலைவர் விஜயகாந்த். பெல் அடித்த பிறகும் எக்ஸ்ட்ரா ஷீட் வாங்கி சக தோழர்களுக்கு பீதியைக் கிளப்பும் மாணவனைப் போல கடைசி நிமிடம் வரை முடிவு சொல்லாமல் அவர் பரிதவிக்கவிட்ட கதையை தமிழகம் ஏற்கனவே பார்த்திருக்கிறது.
தாம் கிங் ஆவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பது விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும். அதனால் முதலமைச்சர் வேட்பாளர் என்ற மிட்டாயைக் காட்டி பாஜகவுக்கோ, மக்கள் நலக் கூட்டணிக்கோ அவரை அவ்வளவு சுலபத்தில் இழுத்துவிட முடியாது. “நான் முதலமைச்சர் வேட்பாளர் சரி, ஆனால் இந்த கூட்டணியோட மக்கள்கிட்ட போனா ஜெயிக்க முடியுமா” என்று தன்னை சந்திக்க வந்த மாற்று கட்சித் தலைவர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்போதைக்கு அவர் முன் இருக்கும் வெற்றி வாய்ப்பு திமுகவுடன் போவது மட்டுமே என்கிறார்கள் தமிழக அரசியலை நன்கு உணர்ந்தவர்கள்.
ஏன் திமுகவுடன் போக வேண்டும் ?
எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் இதுவரை திமுகவும், அதிமுகவும் தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன. அதன்படி பார்த்தால் அடுத்து திமுக ஆட்சிதான் என்று கழக உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு எளிதாக மக்களின் மனநிலையை எடை போட்டுவிட முடியாது என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் ஸ்டாலினுக்கும் தெரியும். அதனால்தான் கூட்டணிக் கதவை அவர்கள் இன்னும் பொறுமையாக திறந்தே வைத்திருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த முறை வென்றாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், விஜயகாந்த் தனக்கான தேவைகளை அழுத்தம் கொடுத்த கேட்டுப் பெற முடியும். அவரது ராசி எண் 5 என்பதால் இதுவரை கூட்டுத் தொகை 5 வரும்படிதான் தொகுதிகளை வாங்கி இருக்கிறார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் வாங்கியது 41 தொகுதிகள், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவிடம் வாங்கியது 14 தொகுதிகள். இந்த முறையும் பாஜகவிடம் 113 கேட்டுப் பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவற்றை விஜயகாந்த் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. தேமுதிக உள்வட்டாரங்களில் விசாரித்துப் பார்த்ததில் பாஜக பக்கம் போக கேப்டன் ரொம்பவே தயங்குவதாகவே சொல்கிறார்கள்.
பிப்ரவரி 5ந் தேதி டெல்லிக்கு சென்று அமீத் ஷாவை விஜயகாந்த் சந்திப்பார் என்ற தகவல் மீடியா வட்டாரங்களில் பலமாக ஓடியது. ஆனால் அன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மட்டும் நடத்திவிட்டு அமைதியாக வீட்டில் இருந்துவிட்டார் கேப்டன். கூட்டத்தில் பங்கேற்ற பல மாவட்டச் செயலாளர்களும், “என்ன செய்யனும்னு கேப்டனுக்கு நல்லாவே தெரியும், இந்த முறை அந்தம்மாவை தோற்கடிக்கிறது தான் ரொம்ப முக்கியம், அதற்கு ஏற்ப கேப்டனே ஒரு நல்ல முடிவை எடுக்கணும்” என்று மறைமுகமாக திமுக கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார்கள். மறுப்பு சொல்லாமல் விஜயகாந்த் அவற்றை காது கொடுத்து கேட்டதைப் பார்த்தால் அவர் மனதிலும் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
விஜயகாந்திற்கு திமுக என்ன தரும்?
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் அந்த கட்சிக்கு 50 – 55 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. கேப்டனின் ராசி எண் 5 என்பதால் அவர் 50ஐப் பெற்றுக்கொள்ளலாம். அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்டுப் பெறுவதைக் காட்டிலும், கேப்டன் தனக்கு தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 60 - 70 தொகுதிகளை வாங்கி 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை விட, சரியாக தேர்ந்தெடுத்து 50 தொகுதிகளை வாங்கி 30 தொகுதிகளை வெல்வதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். பிரதான கூட்டணி கட்சி என்பதால் அவர் கேட்கும் தொகுதிகளை தர திமுக அதிகமாகத் தயங்காது என்றே தோன்றுகிறது. துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் பங்கு என பல கோரிக்கைகள் தேமுதிக தரப்பில் முன்வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் தேமுதிக என்ற கப்பலை 2016 தேர்தல் கடலில், கேப்டன் எப்படி லாகவமாக செலுத்தி கரை சேர்க்கப் போகிறார் என்பதைப் பார்க்க வரலாறு மறுகரையில் காத்திருக்கிறது.
(Parthiban is a freelance journalist)