தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: ரோகித்தை போல் செந்தில் குமாரும், கோகுல் ராஜும் ஏன் பேசப்படவில்லை?

தத்துவங்கள் இல்லாத அரசியலும், வலுவற்ற தலித் இயக்கங்களும், செயலற்ற மாணவர் அரசியலும் தமிழகத்தில் தலித் பிரச்சினைகள் கண்டு கொள்ளபடாத நிலைக்கு தள்ளியுள்ளன.
தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: ரோகித்தை போல் செந்தில் குமாரும், கோகுல் ராஜும் ஏன் பேசப்படவில்லை?
தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: ரோகித்தை போல் செந்தில் குமாரும், கோகுல் ராஜும் ஏன் பேசப்படவில்லை?
Written by:

தமிழகத்தில் இரு தலித் இளைஞர்களின் மரணத்தை பற்றியும், தமிழக அரசியல் அதனை எடுத்து கொண்டவிதத்தை பற்றியும் கூறும் மூன்று தொடர்களில்  இரண்டாவது தொடர்

செந்தில்குமார், ரோகித் வெமுலா, கோகுல்ராஜ் ஆகிய மூன்று பேரின் கதையுமே ஒரு பொதுவான தளத்தை மையப்படுத்தி உள்ளன.அதாவது, மூன்று பேருமே தங்கள் மீது திணிக்கப்பட்ட ஜாதீய எல்லைகளை உடைத்தெறிய முற்பட்டனர்.ரோகித் வெமுலா பல்கலைகழக அதிகார மையத்திற்கு எதிராக அரசியலை கையிலெடுத்து முன்சென்றார் எனில், கோகுல்ராஜ் ஒரு மாணவ தொழில் முனைவோராக சமூகத்தில் சொல்லும்படியான ஒரு அந்தஸ்தை பெறுவதற்காக உழைத்தார். செந்தில் குமாரின் கனவோ, அப்துல் கலாமை போன்று ஒரு அறிவியல் அறிஞராக மாற வேண்டும் என்றிருந்தது. தனது இந்த கனவு நிறைவேறும்போது, தனது சமுதாயத்தில் உள்ளவர்கள் பன்றி மேய்த்து கொண்டிருக்கவேண்டிய நிலையை இல்லாமல் மாற்றிய அமைப்பேன் என தனது பெற்றோரிடம் அவர் அடிக்கடி கூறுவாராம்.அவரது முக்கியமான இலக்கே பணியாண்டி என்ற ஜாதி பெயரை பூமியிலிருந்தே அகற்றுவது தான்.

ரோகித்தின் மரணத்தை தொடர்ந்து தலித்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஐதராபாத் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு மாணவர்களின் உரிமையை பாதுகாக்க ‘ரோகித் சட்டம்’ என்றொரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.தமிழ்நாட்டில் , சென்னை பல்கலைகழக மாணவர்கள் சார்பில் ரோகித் வெமுலா நினைவு சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், கோகுல்ராஜ் மற்றும் செந்தில்குமார் மரணத்தையொட்டி தமிழக அரசியல் மற்றும் பொது சமூகத்தின் கொந்தளிப்பு மிக குறைவாகவே இருந்தது.ரோகித்தும், செந்தில் குமாரும் ஒரே பல்கலைகழகமான ஐதராபாத் பல்கலைகழக மாணவர்களாக இருந்த போதும் ஏன் இருவரது மரணத்திற்கும் எதிரான குரல்களிடையே வித்தியாசம் உள்ளது ? என்ற கேள்விக்கு சில காரணங்கள் உள்ளன.

ரோகித்தை போன்று செந்தில் எந்த அரசியல் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாதவர். ஆனால் ரோகித் மாணவர் அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டவர். இதனாலேயே அவருக்கு மாணவ அரசியலில் தோழர்கள் பலர் இருந்தனர். இது அவரது மரணத்திற்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கவும், ரோகித்திற்கு ஆதரவாக மாணவர்கள் ஒன்று திரளவும் காரணமாக இருந்தது.

“ஒரு ஆந்திராகாரர் அல்லாமல் ஒரு தமிழராக செந்தில்குமார் இருந்ததால், அத்தகைய ஆதரவு கிடைக்கவில்லை” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுள் ஒருவரான ரவிக்குமார். இவர் 2008 இல் செந்தில் குமாரின் பெற்றோருக்கு உதவியவர்.

செந்தில்குமாரின் பிரச்சினையில் வகுப்புவாத பிரச்சினைகள் எழவில்லை. ஆனால் ரோகித் வெமுலாவின் விவகாரத்தில், யாகூப் மேமனை தூக்கிலிட்டதும், அதனையொட்டி முசாபர் நகர் பாக்கி ஹாய் என்ற ஆவணபடத்தை திரையிட்டதும் விவாதமாக்கப்பட்டது. ஒட்டுமொத்த மதசார்பற்ற சக்திகளும் ரோகித் வெமுலாவிற்கு ஆதரவாக நின்றிருந்தனர். ”செந்தில் குமாரின் மரணத்தில் எந்த தத்துவங்களும் மோதி கொள்ளவில்லை.” என கூறும் ரவிக்குமார் ரோகித் வெமுலாவின் விவகாரத்தை விட செந்தில்குமாரின் பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார். ஏனென்றால், செந்தில் குமார் பல்கலைகழக வளாகத்தில் தினந்தோறும் நடக்கின்ற அதேவேளையில்  அனைவராலும் கண்டுகொள்ளப்படாத ஜாதீய ஒடுக்குமுறைக்கு பலியாகியுள்ளார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் சயின்ஸில் பேராசிரியராக பணி புரிந்து வருபவரும், சமீபத்தில் ஐதராபாத் போராட்டங்களில் பங்கெடுத்தவருமான லட்சுமணனும் ரவிக்குமாரின் மேற்கூறப்பட்ட கருத்தை ஒத்துகொள்கிறார்.” செந்தில்குமார் விவகாரம் தனிப்பட்ட முறையில் வேதனையளிக்க கூடியது. அதனை பொதுவான இயக்கமாக நடத்தபடவில்லை” என கூறினார்.

அதுமட்டுமல்லாது, ரோகித் வெமுலாவால் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு போராட்ட களத்திற்கு திரள அது ஒரு முக்கிய கருவியாக இருந்தது. இதுகுறித்து லட்சுமணன் கூறும் போது ” அந்த கடிதம் ஒவ்வொரு சாதாரண மனிதனின் மனசாட்சியையும் தொடும் வகையில் இருந்தது” என்றார்.

பல்கலைகழக மாணவர்களின் அரசியலில் பாரதீய ஜனதாவின் அரசியல் தலையீடு, மதசார்பற்ற மாணவர்களை எளிதாக ஒன்று திரளவும் பாரதீய ஜனதாவிற்கு எதிராக இயக்கங்களை முன்னெடுத்து செல்லவும் வழிவகுத்தது.

ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற விவகாரங்களில் அதற்கேயுரிய சில பிரச்சினைகள் உள்ளன. கோகுல்ராஜ் விவகாரத்தில் அது நன்கு வெளிப்பட்டது.

முதலாவதாக, தமிழகத்தில் மாணவர்களுக்கான அரசியல் எதுவுமே இல்லை. பேராசிரியர் லட்சுமணன் இது குறித்து கூறுகையில் ” 1972 இல் கருணாநிதிக்கு எதிராக அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த போராட்டத்திற்கு பின், தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவர் அரசியல் இயக்கங்களும் நிர்மூலமாக்கப்பட்டன. மாணவர் குழுக்கள் அனைத்தும் ஒரு ரசிகர் மன்றத்தை போன்றே செயல்படுகிறது. முக்கிய  அரசியல் கட்சிகளின் துணை இல்லாமல் எந்த சமூக பிரச்சினைகளையும் முன்னெடுத்து செல்ல கூடிய சுதந்திரமான மாணவர் அரசியல் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.”  என்றார்.

இரண்டாவதாக, தலித் இயக்கங்களில் கூட ஒரு ஒற்றுமை காணப்படுவதில்லை என கூறுகிறார் ஜாதிக்கு எதிரான தொண்டுநிறுவனமான எவிடென்சை சேர்ந்த கதிர். தொடர்ந்து அவர் கூறுகையில் “ அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்டவர் எந்த துணை ஜாதியை சேர்ந்தவர் என்பதை பார்த்து தான் தலையிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர் அருந்ததியர் என்றால் மற்றவர்கள் அதில் தலையிடுவதில்லை.பறையர் எனில் மற்ற கட்சியினர் அவர்களின் பிரச்சினைக்காக சேருவதில்லை” என்றார். “ எங்குமே ஒரு கூட்டு சிந்தனையை பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தான் பெயரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வருகிறார்கள் “ என கோகுல்ராஜின் சகோதரர் கூட இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில் “ இரண்டு தலித் கட்சிகள் எனது சகோதரனின் விவகாரத்தில் உதவ வந்தன. இரு கட்சிகளுமே அதனை வைத்து அரசியல் லாபத்தையே கணக்கிட்டு கொண்டன” என்றார்.

மூன்றாவதாக, தலித்களுக்கு மத்தியில் தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பிக்கை இருந்தாலும், உண்மையில் சரியான ஒரு அரசியல் இயக்கம் குரல் கொடுப்பதற்காக  இதுவரை இல்லை.மதுரையை மையமாக கொண்டு முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் என்னிடம் கூறும்போது “திருமாவளவன் எவ்வளவு பிரபலமானவராக மாறியுள்ளார் என்பதை பாருங்கள். அவரது பேச்சில் ஒரு நம்பிக்கை உருவாகிறது. இது வட மாநிலங்களில் நீங்கள் காண முடியாது” என்றார். ஆனால் இது தவறாக கூறப்படுவதாக கூறுகிறார் சமூக சேவகர் கதிர் “ தலித்களுக்கு உண்மையில் குரல் கொடுக்க கூடிய நல்ல ஒரு அரசியல் கட்சியில்லை.வாக்கு வங்கி அரசியல் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. தமிழகத்தின் உள்ளே உள்ள தலித் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதாக இருந்தால், ஆதிக்க ஜாதியினரின் வாக்கு வங்கியை இழக்க கூடும் என்ற எண்ணத்தால், தமிழ்நாட்டின் வெளியே நடக்கும் தலித் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள்” என்றார் அவர்.

நான்காவதாக, தமிழக அரசியல் முற்றிலுமாக ஊழல் மயமாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார் லட்சுமணன்.” இங்கே அரசியல் என்பது அரசியல் அற்ற தன்மையாக மாற்றப்பட்டுவிட்டது. எந்த கொள்கைகளும் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை  ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கையில் மாற்றி வழங்குவது மட்டுமே நடைபெறுகிறது” என்றார். கூடவே தமிழை மையப்படுத்தியுள்ள அடையாள அரசியல் இங்கு வேகமாக வளருகிறது. இதனால் இயற்கையிலேயே மற்றவர்களின் மீது  பகையுணர்வும் உருவாகிறது என்றார்.

தமிழக ஊடகங்கள் தலித்துகளுக்கு எதிரான வழக்குகள் நீர்த்துபோவதில் முக்கிய பங்காற்றியுள்ளன என்கிறார் கதிர். ஊடகம் இங்கே ஒரு பக்க சார்பானதாக மாறிவிட்டது. அவர்கள் வடக்கில் உள்ள தலித் பிரச்சினைகளை எழுதுகிறார்கள்.ஆனால் அவர்கள் கொல்லைப்புறத்தில் நடப்பவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.செந்தில் குமாரின் விவகாரத்தை ஏன் எந்த தமிழ் ஊடகங்களும் கையிலெடுக்கவில்லை ? கோகுல் ராஜ் வழக்கில் சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடும்போது தமிழக ஊடகங்கள் போதுமான அளவில் தொடர்ந்து செய்திகள் வெளியிடவில்லை. இது ஒரு முறைப்படுத்தப்பட்ட பிரச்சினை” என்கிறார்.

இதற்கும் அப்பால், ரவிக்குமார் பேசும்போது தலித் இயக்கங்களில் போதுமான அளவு கலாச்சார மூலதனம் இல்லை. “ தலித் மாணவர்கள், நிச்சயமாக சமூகத்தில் தலித்களின் உரிமைகளுக்கான தேவையையும், முக்கியத்துவத்தை பற்றியும் மக்கள் புரிந்து கொள்ளகூடிய சூழலை உருவாக்க வேண்டும். தொடர்ந்து அவர் கூறுகையில் “  மதசார்பின்மையை பற்றி பேச கலாச்சார மூலதனம் உள்ளது. ஆனால்  ஜாதி பிரச்சினைகளுக்கு அவை எதுவுமே இல்லை ”. என்றார்

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com