தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: “ எங்கள் மகனை படிக்க வைத்து கொன்றோம்” என கதறும் தாய்

“நாங்க படிக்க கூடாதா ? நாங்க கீழ் ஜாதியிலிருந்து வந்தவங்களா இருப்பதால் வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்கு முன்னேற கூடாதா ?"
தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: “ எங்கள் மகனை படிக்க வைத்து கொன்றோம்” என கதறும் தாய்
தமிழகத்தில் தலித் பிரச்சினைகள்: “ எங்கள் மகனை படிக்க வைத்து கொன்றோம்” என கதறும் தாய்
Written by:

தமிழகத்தில் இரு தலித் இளைஞர்களின் மரணத்தை பற்றியும், தமிழக அரசியல் அதனை எடுத்து கொண்டவிதத்தை பற்றியும் கூறும் மூன்று தொடர்களில்  முதலாவது தொடர்

ஆகஸ்ட் 2007. சூரிய ஒளி பிரகாசமாக வீசி கொண்டிருந்த ஒரு காலை நேரம்.ஐதராபாத் பல்கலைகழகத்திலிருந்து பழனிச்சாமியின் மகன் செந்தில்குமாருக்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. போனில் அழைத்தவர் செந்தில்குமார் அந்த பல்கலைகழகத்தின் இயற்பியல் துறையில் சேர்ந்து தனது ஆய்வு படிப்பினை தொடர, கல்வி உதவி தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“ அவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். அந்த மகிழ்ச்சி, உலகத்தையே அவன் வென்றதை போன்றிருந்தது” என சொல்கிறார் பள்ளிகூட வாசலில் ஒருமுறை கூட அடியெடுத்து வைக்காத செந்தில்குமாரின் தந்தை பழனிச்சாமி.

பழனிச்சாமி சேலத்தை அடுத்த ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர். பன்றி வளர்க்கும் தொழிலை அப்பகுதியில் செய்து வருகிறார். தனது மகனின் ஆய்வு படிப்பிற்கான கல்வி உதவி தொகை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு சாதனை.போனில் பேசியவர் செந்தில்குமாரை மறுநாள் மாலை 3 மணியளவில் பல்கலைகழகத்திற்கு நேரில் வந்து அட்மிஷன் போட சொல்லியிருந்தார். தவறினால் இந்த வாய்ப்பை இழக்க வேண்டி வரும் என்றும் கூறினார்.

“ அவசரமான சூழலில் எங்களிடம் எந்த பணமும் இல்லை. பிச்சை எடுத்தது போல் எனக்கு தெரிந்த சிலரிடம் சென்று எப்படியோ ஒரு 5000 ரூபாய் திரட்டி கொண்டு வந்தேன். அந்த பணத்தை கொடுத்து அவனை ஐதராபாத்திற்கு அட்மிஷன் போட அனுப்பினேன்.அவன் சந்தோஷத்தால் ஒரு அரசனை போன்று நடந்தான். “ என தாயார் தெய்வானை. கூறினார்.

“இரண்டு நாளைக்கு பின் அதிகாலை அவன் வீடு திரும்பினான். அவனது வருகைக்காக நான் தேநீர் கடையில் அதிகாலை 4 மணிக்கு போய் காத்திருந்தேன்.பஸ்சிலிருந்து இறங்கிய அவன் என்னை கண்டதும், தனது கையின் பெருவிரலை உயர்த்தி காட்டினான்.” என தனது நினைவுகளை அசை போட்டார் பழனிச்சாமி. தொடர்ந்து அவரால் பேசவியலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். “ஒவ்வொருமுறையும் நான் அவன நினைக்கும்போது என்னால அழுகையை நிறுத்த முடியல. என்னோட அன்புமகன் என்னை விட்டு போயிட்டான்”. என கூறினார்.

செந்தில்குமாருக்கு ஒரு கனவு இருந்தது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமினை போல் ஆக வேண்டும் என விரும்பினான். ஆனால் அவன் பல்கலைகழகத்தினுள் நுழைந்த போது அவனது கனவுகள் சின்னாபின்னமாக நொறுக்கப்பட்டது. அவன் தேர்வில் தோல்வியடைந்ததாக சொல்லி கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டதால், அவனுக்கு ஒரு ஆய்வு வழிகாட்டியும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து பல மாதங்களாக பேராசிரியர்கள் செந்தில்குமாரிடம் பாகுபாடினை காட்டி வந்ததை தொடர்ந்து, தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்த செந்தில்குமார், பிப்ரவரி 24, 2008 அன்று பல்கலைகழக வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில்  விஷம் அருந்தி தற்கொலைசெய்து கொண்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பல்கலைகழகம் சார்பில் விசாரணை நடந்தது. அதில் அறிவியல் துறைகளில் தலித் மாணவர்களுக்கு எதிராக கலாச்சார பாகுபாடு காட்டப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

பன்றி மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் அவரது குடும்பத்தினர், செந்தில்குமாரின் உடலை ஐதராபாத்திலிருந்து கொண்டு வருவதற்கு 50000 ரூபாய் வரை செலவு செய்தனர்.இச்சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் கடந்த பின்னும் ஐதராபாத்திலிருந்து செந்தில்குமாரின் உடைமைகளை இதுவரை கொண்டு வர முடியவில்லை. “ அவன் தினசரி டைரி எழுதும் பழக்கம் உள்ளவன். அவன் எழுதிய டைரியை பெறுவதற்கு  2 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்தோம். பிறகு அந்த முயற்சியை கைவிட்டோம்.” என கூறுகிறார் செந்தில்குமாரின் சகோதரர் சரவணன். இவர் தற்போது இறைச்சி கடையொன்றில் வேலை செய்து வருகிறார்.இழப்பீடாக பல்கலைகழகம் 5 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளது.ஆனால் பல்கலைகழக தரப்பிலிருந்து எந்தவித இரங்கல் செய்தியும் விடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேசிய சரவணன் “ நாங்கள் இப்போதும் செந்தில்குமாரின் படிப்புக்காக பெறப்பட்ட கடனை அடைத்து கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

“ நாங்க படிக்க கூடாதா ? நாங்க கீழ் ஜாதியிலிருந்து வந்தவங்களா  இருப்பதால் வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்கு முன்னேற கூடாதா ? குளமாகிய கண்ணீருடன் கேள்விகளை அடுக்கினார் தெய்வானை. தொடர்ந்து பேசிய அவர் “ எங்க வறுமையை போக்க கல்வி அவசியம்னு பலரும் சொல்றாங்க. ஆனா நான் என்னோட மவனை படிக்க வெச்சு இழந்தேன். அவனுக்க படிப்புக்கு வாங்கிய கடனை நாங்க இப்போதும் அடைச்சிக்கிட்டு இருக்கோம். இப்போது எங்க கையில எதுவுமே இல்ல.”

தற்போது பழனிச்சாமியின் குடும்பத்தில் எவருக்குமே கல்வி கற்க ஆர்வம் இல்லை. அவரது மகளும் செந்தில்குமாரின் சகோதரியுமான காமாட்சியின் மகன்கள் முறையே 14 மற்றும் 16 வயதான குணசேகரனும்,சூர்யாவும் பள்ளி படிப்பை இடை நிறுத்திவிட்டனர். ஒரு விசைத்தறி கம்பெனியில் வேலைக்கு செல்கின்றனர்.” என்னோட பேரன்களையும் அவங்க கொன்னுட்டா நாங்க என்ன செய்ய முடியும் ? “ என்ற கேட்ட தெய்வானையிடம் “ நீங்க அவங்கள படிக்க வைக்க வேண்டும்” என நான் கூறிய போது தெய்வானையின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “ நாங்க எங்க ஒரு மவன படிக்க வெச்சோம்.அதனால இப்போ நாங்க அவன இழந்துகிட்டு நிக்கிறோம். இப்போ நான் கல்வியையும், எழுத்துக்களையும் வெறுக்கிறேன்.” என்றார் தெய்வானை.

சரவணனிடம் பேசிய போது “ குறைந்தபட்சம் நான் இவங்கள தினசரி பார்க்கவாவது முடியும். பாதுகாக்கவும் முடியும். அவங்க என்னோட சகோதரன கொன்னுட்டாங்க..ஆனா எங்க குழந்தைகள கொல்ல முடியாது.”

செந்திலின் கல்வி செலவுக்கு அந்த குடும்பத்தினர் மிகவும் போராடியுள்ளனர். சரவணனும்,காமாட்சியும் பள்ளி கூடத்தை விட்டு இடை நின்ற போது , செந்திலை தொடர்ந்து படிக்க வைக்க வலியுறுத்தியவர் அந்த பள்ளிகூட தலைமையாசிரியர் தான். அதனால் அந்த குடும்பத்தினர் தங்களால் முடிந்தவற்றை எல்லாம் செய்துள்ளனர்.

“நான் பல இடங்களிலும் போய் பன்றியின் மலத்த அள்ளி, அதை கொண்டு போய் விற்பேன். வெளியில்  யாருக்கும் தெரியாமல் இருக்க என்னோட சாரியை கொண்டு முகத்த மூடி இருப்பேன். அப்படி கிடைக்குற பணத்த கொண்டு செந்திலுக்கு பீஸ் கட்டினோம் ” என கூறினார் தெய்வானை.

செந்தில் இறந்த போது இருவர் மட்டுமே உதவிக்கு வந்தனர். ஒருவர் தலித் தலைவர் ரவிக்குமார். மற்றொருவர் ஜாதி எதிர்ப்பாளரும், எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவருமான கதிர். கதிர் செந்திலின் உடலை கொண்டு வருவதற்கு தேவையான பயண செலவுக்கு பணம் கொடுத்து உதவினார். ரவிக்குமார் இந்த தற்கொலை மீது விசாரணை நடத்தி போதிய இழப்பீட்டை பெற்று தர உதவினார். “

“எல்லோரும் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு எதிராக குரல் கொடுக்குறாங்க. செந்தில் சாகும் போது ராகுல் காந்தியின் காங்கிரஸ் மத்தியில ஆட்சியிலும், கருணாநிதி தமிழ்நாட்டுல முதலமைச்சருமாக இருந்தாங்க.” என கூறிய சரவணன் தொடர்ந்து கூறுகையில் “ நாங்க திமுக அமைச்சர் ஒருவர பார்த்தோம். அவர் செந்தில் ஐதராபாத்தில இறந்ததுக்கு நான் என்ன செய்யணும்னு கேட்டார் “ என்றார்.

செந்தில் இறந்த வேளை திமுகவினரின் ஆதரவு கிடைக்காதது தெய்வானையை மிகவும் பாதித்தது. ஏனென்றால் தெய்வானை உள்ளூர் திமுகவினரால் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு நிறுத்தப்பட்டார். குறிப்பிட்ட அந்த வார்டு தலித்களுக்கான வார்டு என்பதால் தெய்வானையும் அதனால் எந்த அதிகாரமும் இல்லாமல் இருப்பினும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.

“ யாருமே என்ன பார்க்க வரல. தலித்களுக்க மேல அக்கறையோட இருக்குறது யாரு ?” என நீண்ட பெருமூச்சுடன் கேட்டு முடித்தார் தெய்வானை.

Translation by John Moses.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com