ஜல்லிக்கட்டு வேண்டும். தலித்துகளுக்கு பொது வழி வேண்டாம்: தமிழ்நாடென்னும் முற்போக்கு மாயை

கருவறையும் சுடுகாடும்
ஜல்லிக்கட்டு வேண்டும். தலித்துகளுக்கு பொது வழி வேண்டாம்: தமிழ்நாடென்னும் முற்போக்கு மாயை
ஜல்லிக்கட்டு வேண்டும். தலித்துகளுக்கு பொது வழி வேண்டாம்: தமிழ்நாடென்னும் முற்போக்கு மாயை
Written by:

By Stalin Rajangam

                மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட திருநாள் கொண்டச்சேரி என்கிற கிராமத்தில் 100 வயதை நிறைவு செய்த செல்லமுத்து என்கிற தலித் முதியவரொருவர் 03.01.2016-ம் நாள் மரணமெய்தினார்;. அவ்வூரில் தலித் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுப் பாதை பயன்பாட்டுக்கு உரியதாக இல்லாததால் கிராமத்தின் பொதுப்பாதை (பொதுப்பாதை என்றால் அதில் தலித்துகள் செல்ல முடியாது என்பது தானே நம்மூர் சாதி விதி) வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல தலித் குடும்பம் விரும்பியது. அதனை சாதி இந்துக்கள் தரப்பு அனுமதிக்காது என்னும் பட்சத்தில் பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்ள விரும்பிய அம்முதியவரின் பேரன் கார்த்திக் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதியவரின் பிணம் பொதுப் பாதை வழியாக கொண்டுச் செல்ல சட்டப்படி எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு உறுதியானது. அதோடு பிணத்தை பொதுப்பாதை வழியாக கொண்டுச் செல்ல நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் கூறியது.

                இதன்படி இரண்டுதரப்பையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சாதி இந்துக்கள் தரப்பு தீர்ப்பை ஏற்க மறுத்து பிணத்தை பொதுப்பாதை வழியே கொண்டுச் செல்லவிடமாட்டோம் என்று கூறியது. சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய அதிகாரிகளோ சாதி இந்துக்களை வழிக்கு கொணர விரும்பாமல் புதிதான பாதையொன்றை அமைத்து பிணத்தை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் தலித் தரப்பு இதை ஏற்க மறுத்தது. தொடர்ந்த போலீஸாரின் இம்முயற்சியை கண்டித்து முதியவரின் உறவினர்கள் தீக்குளிக்க முயன்றனர். இறுதியாக 60 தலித்துகளை கைதுசெய்த அரசு, முதியவரின் பிணத்தை நீதிமன்றம் சொன்ன பொதுப்பாதை வழியில் அல்லாமல் புதிய பாதைவழியாகவே கொண்டு சென்று புதைத்துள்ளது. அதாவது அரசு எந்திரமே சட்டத்தை மீறியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. கிராமத்தில் அதிக காலம் வாழ்ந்து முடித்த பெரியவர் ஒருவருக்கு கிராமத்தினரும் அதிகாரிகளும் வழங்கிய மரியாதை இதுதான் போலும். சாதி சார்ந்த பிரச்சினை ஒன்றை அரசு அணுக விரும்பும் விதத்திற்கான உதாரணம் தான் இது. மேலும், நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தன் மூலம் சட்டத்தை மதிக்காத சாதி இந்துக்கள் தரப்பு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. மாறாக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிய நடைமுறைபடுத்த மறுத்தற்கு எதிராக போராடிய தலித்துகள் மீது தடியடி மற்றும் கைது நடந்திருக்கிறது.

                பிராமணர்களின் புனித அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்  ஆகலாம் என்கிற சட்டத்தை இயற்றிய மாநிலம் என்று தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு தமிழகம் பற்றி ஒருவித வியப்பு இருக்கலாம். இது உண்மைதான். இதன்படி, அரசும், கட்சிகளும், மக்களும் பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும். தமிழகம் பற்றி வெளியே புலப்படும் எதார்த்தம் உள்ளே இல்லை என்பது தான் உண்மை. இது மாநிலத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் மட்டும் அல்ல. உள்ளூர் அளவில் சாதிகளுக்கிடையே உருவாகிவரும் பெரும் கொந்தளிப்பின் வெளிப்பாடு இது. தலித்துகளிடையே வாழ்வியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஒத்துக் கொள்ள முடியாதவர்களாகவும், அதற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிறவர்களாகவும் ஆதிக்கசாதியினர் மென்மேலும் இறுக்கம் பெற்று வருகின்றனர். தலித்துகளை பொதுப்பாதையில் அனுமதிப்பது அவர்களுடைய விழிப்புணர்வை அங்கீகர்ப்பதாகவும், தங்கள் ஆதிக்கத்திற்கு பங்கம் நேருவதாகவும் ஆதிக்க வகுப்பினர்  கருதுவதால் சட்டத்தையும் கூட புறக்கணிக்க தயங்குவதில்லை. தங்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் சாதிப்பெருமைகளுக்கு மேலானதாக சட்டத்தை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள்.

                இவ்வாறு உள்ளூர் அளவில் பெருகி வரும் சாதி முரண்களை புரிந்து கொள்வதற்கான,எதிரிகொள்வதற்கான பேச்சும், உபகரணங்களும் தமிழகத்தில் சிறிதும் இல்லை என்பது தான் இன்னும் அவலம். தமிழகத்தின் கடந்தகால சாதி எதிர்ப்பு சொல்லாடல்கள் பிராமண அதிகாரத்தை கட்டுப்படுத்தியதை தாண்டி தலித் உரிமையாக மாறவில்லை என்பதற்கு இதுவொரு உதாரணம். மேலும் பிராமண எதிர்ப்பு அரசியலின் விளைவுகளை பெற்ற சமூகத்தவர்களே இன்றைக்கு இவ்வுரிமை மறுப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அண்மைக்காலமாக பெருகியிருக்கும் கௌரவக் கொலைகள், சாதி ஒடுக்கு முறைகள், தலித்துகளுக்கெதிரான அரசியல் கூட்டமைப்பு என்கிற தொடர்  பின்னணியில் வைத்து இச்சம்பவத்தை மட்டுமல்ல, இதற்கு எதிராக யாரும் பேச மறுப்பதையும் கூட பார்க்க வேண்டும்.

                இன்றைய தமிழக அரசியல் சொல்லாடல் என்பது முற்றிலும் கடந்தகால சமூக சீர்திருத்த நோக்கிலிருந்து விலகியிருக்கிறது. முழுக்க உடனடி அரசியல் நலன் சார்ந்ததாக மாறியிருக்கிறது. குறிப்பாக இன்றைய தேர்தல் அரசியலானது எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளை சேர்ந்ததாக மாறியிருக்கும் நிலையில் அவர்களை பகைத்துக் கொள்ளும் எந்த செயலிலும் அரசும் அரசியல் கட்சிகளும் ஈடுபட மறுக்கின்றன. இங்கும் அதுதான் நடந்துள்ளன. உள்ளூர் அளவிலான முரண்பாடுகளில் பெரும்பான்மையினரை திருப்திபடுத்தி ஓட்டு வாங்க விரும்புவதால் சட்டத்தை நடைமுறைபடுத்தாமல், நடைமுறைபடுத்தக் கோரும் தலித்துகளையே அரசு ஒடுக்குகிறது.

                1990களில் இப்பகுதியில் குடிதாங்கி என்கிற கிராமத்தில் இதே போன்று தலித் பிணத்தை எடுத்துச் செல்லும் வழியை ஆதிக்க வகுப்பினரான வன்னியர்கள் அனுமதிக்க மறுத்த போது அதே வகுப்பைச் சேர்ந்த ராமதாஸ் அப்பிணத்தை சுமந்து சென்ற வரலாறு இருக்கிறது. ஆனால் இது அத்தகைய காலம் அல்ல. அதே ராமதாஸ் தான் தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோர் கூட்டமைப்பை இப்போது உருவாக்கியுள்ளார். சமூகம் பல்வேறு காரணிகளை ஒட்டி சாதிமயமாகும் போது கட்சிகளும் அரசும் தங்கள் தேவைக்காக சமூக விருப்பத்திற்கேற்ப சாதிமயமாகிறார்கள். பிறகு தொடர் அதிகாரத்திற்காக சாதியை பயன்படுத்தவும் பழகிக்கொள்கிறார்கள். இந்த சம்பவத்திற்காக பேசாத பல தலைவர்களும், இதே நேரத்தில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு பற்றி பக்கம் பக்கமாய் அறிக்கை எழுதி கொண்டிருந்தார்கள். ஏனெனில் சாதி எதிர்ப்பு சவாலானது. உடனடி பலனைத் தராது. ஜல்லிகட்டு போன்ற பொதுவான பண்பாட்டுப் பேச்சுகள் உணர்ச்சிகரமானது. எளிமையானது. உடனடி அரசியல் பலனைத் தரும். எனவே பின்னதை  தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். 

Read this article in English here.

(Stalin Rajangam is a Dalit scholar based out of Tamil Nadu).

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com