வெளியில் சொன்னால் உனது தாயையும் சகோதரியையும் துன்புறுத்துவோம் என மிரட்டியதாகவும் தகவல்

 10
news Monday, March 14, 2016 - 10:01

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மகன் முகேஷ் (17). இரண்டு தினங்களுக்கு முன் இரவில், இவரது வீட்டிற்கு திடீரென வந்த 6 போலீசார், முகேஷை பிடித்து சென்றுள்ளனர்.

எதற்கு அழைத்து செல்லப்படுகிறோம் என தெரியாமல் தத்தளித்த, முகேஷை ஆறு போலீசாரும் கடுமையாக தாக்க துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து முகேஷின் அம்மா சுமதி (37) நியூஸ் மினிட்டிடம் கூறுகையில் ” 11 ஆம் தேதி இரவு 11 மணி இருக்கும் 4 போலீசார் எங்கள் வீட்டின் உள்ளே நுழைந்து எங்கள் இளைய மகன் முகேஷ் எங்கே என கேட்டனர். நாங்கள், என்ன காரணம் என தொடர்ந்து கேட்டபோது அவர்கள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனது கணவரையும் அவர்கள் கடுமையாக தாக்கினார்கள். எங்கள் மகனை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என கேட்ட போது அவர்கள் மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்வதாக கூறினர்”

அதனை தொடர்ந்து இரவு 11 மணி முதல் 1 மணி வரை முகேஷின் வீட்டினர் முகேஷை தேடியுள்ளனர். “ நாங்கள் எங்கள் மகனை அபிராமிபுரம் போலீஸ் ஸ்டேஷன், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன், வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷன் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால் எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மணியளவில் எங்கள் மூத்த மகன் விக்னேஷ் எங்களுக்கு போன் பண்ணி முகேஷ் வீட்டிற்கு காயங்களுடன் திரும்பியதாக கூறினான்.” என்றார்.

நடந்த சம்பவத்தை மேலும் விளக்கி கூறிய சுமதி, “ முகேஷின் இரு கண்களையும் கட்டியுள்ளனர். அவனது கைகளையும் பின்புறமாக கட்டி வைத்துள்ளனர். அவர்களது உரையாடலின் மூலம் வேளச்சேரி ரயில்வே ட்ராக் அருகில் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான். அப்போது திடீரென வந்த ஒரு போன் கால் அவர்கள் தவறான நபரை பிடித்து வந்ததாக கூறியுள்ளது. அப்போதும், அவர்கள் அவனது தலையிலும், கை,கால், முதுகு பகுதிகளிலும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் முகேஷ் கெஞ்சி கேட்டதும், கையில் 10 ரூபாயை கொடுத்து செல்லும் படி கூறியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே எனவும், சொன்னால் உனது தாயையும், சகோதரியையும் துன்புறுத்துவோம் என கூறியுள்ளனர்.” என்றார்.

7 ஆம் வகுப்பு படிப்புடன் இடை நின்ற முகேஷ் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவர்கள் ஒட்டு மொத்த குடும்பவும் துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகரில் ஒரே அறையில் வசித்து வருகின்றனர். முகேஷ், அவரது மூத்த சகோதரர் விக்னேஷ், தந்தை என மூன்று பேரும் மவுன்ட் ரோட்டில் உள்ள புதுப்பேட்டையில் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள்.

உடனடியாக முகேஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். “ நாங்கள் அங்கு சென்ற போது விடியற்காலை 4 மணியளவில் டாக்டர்கள், அவன் நலத்துடன் இருப்பதாக கூறி டிஸ்சார்ஜ் செய்ய முற்பட்டனர். அதற்கான குறிப்பில் எனது மகன் 4 பேரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அதில் போலீஸ்காரர்களை பற்றி எழுதவில்லை. எங்களுக்கு எக்ஸ் ரே ரிப்போர்ட்டையோ, சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டையோ கூட அவர்கள் தரவில்லை.” என்றார்.

தற்போது முகேஷ் சோழிங்கநல்லூரில் ஒரு கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த குடும்பத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.