முப்பது ஆண்டுகளாக நீடித்த போராட்டம் எதையும் சாதிக்கமுடியாமல் படுதோல்வியில் முடிந்ததை தமிழினி வேதனையுடன் விவரிக்கிறார்

 Image: Tamil Diplomat
Vernacular Monday, March 21, 2016 - 19:29

“பன்றிகளின் முகத்திற்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இப்போது எழவில்லை. வெளியில் இருந்த விலங்குகள் பன்றிகளையும் மனிதர்களையும் மாறி மாறி பார்த்துத் திகைத்தன. யார் பன்றி, யார் மனிதன்? எல்லாமே ஒன்றாகத்தான் தெரிந்தது. "

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் மகளிர் அணிக்கு பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சிவகாமி சுப்ரமணியத்திற்கு,  ஜார்ஜ் ஆர்வெல்லின் புகழ்பெற்ற விலங்கு பண்ணயின் அந்த சாகாவரம் பெற்ற இறுதி வரிகள் தெரியாமலிருந்திருக்க கூடும்.

ஆனால் 2009 இல் உள்நாட்டு போர் முடியும் தறுவாயில், அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்ல முயன்ற அப்பாவி தமிழர்களை, அவர்களின் காலில் சுட்டு நிறுத்துங்கள் என மேலிடம் , இட்ட கட்டளைகளை அறிந்தபோது, அவரும் ஆர்வெல்லின் பண்ணை மிருகங்களைப் போன்று குழம்பிப் போயிருப்பார். யார் எதிரி, யார் நண்பன்? ஒடுக்குவது யார், விடுதலைக்கு முயல்வது யார்?  

கூர்வாளின் நிழலில் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அவரது சுயசரிதையில், தமிழினி அது போன்று பல சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார். அந்நூல் இலங்கை தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

“காலூன்றி நிற்க ஒரு இடமில்லை, வயிற்றுப்பசியைப் போக்க ஒரு பிடி உணவு கூட இல்லை, குடிக்க ஒரு துளி தண்ணீரும் இல்லை. போராளிகளின் பீரங்கிகள் பொதுமக்களின் கடைசி புகலிடங்களிலும் நிறுத்தி வைத்து, அரசு நிலைகளின் மீது தாக்குதல் நடத்தின. ராணுவத்தின் பதில் தாக்குதல்களும் சீற்றம் மிகுந்ததாய் இருந்தது. இடையில் சிக்கிய அப்பாவி சிவிலியன்களின் கதிதான் பரிதாபம்... மூன்றாண்டுகளுக்கு முன், இறுதிக் கட்ட யுத்தம் துவங்கியதிலிருந்து,  நிர்க்கதியற்ற பொதுமக்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்...இப்போது இலங்கை இராணுவமோ அவர்களை நல்ல முறையிலே வரவேற்று, ஏதோ உணவு கொடுத்து, முதலுதவி அளித்து, அவர்கள் தற்காலிகமாக தங்கிக்கொள்ள முகாம்களும் அமைத்துத் தருகின்றனர் எனும்போது, நம் மக்கள் தங்கள் சுயமரியாதையினையும் துறந்து, அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைய விரும்பியதில் தவறென்ன?

அவர்களைத் தடுப்பதற்கு சுடக்கூட தயங்கவேண்டாம் என விடுதலைப் புலிகள் தலைமை உத்திரவிடுமாயின் இனியும் நாங்கள் அவர்களுக்கு இரட்சகர்களாக இல்லை. நாங்கள் எங்கள் மக்களுக்கு எதிராக திரும்பி இருந்தோம்,” என்று வருந்துகிறார் தமிழினி.

ஈழப்போராட்டத்தில் சர்வ பரித்தியாகம் செய்து, முற்றிலுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சே பிளந்திருக்கும் அத் தருணத்தில். இனிமேலும் தலைமைக்குக் கட்டுப்படுவதில், போராடுவதில், பொருளில்லை என உணர்ந்து, புலிகளுக்கான சீருடையையும், சயனைடு கேப்சூலையும் வீசி எறிந்துவிட்டு, சூரிதாரை அணிந்துகொண்டு இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி, அலை அலையாக சென்றுகொண்டிருந்தவர்களுடன் இவரும் சங்கமமானார்.  

பின்னர் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு, இறுதியாக விடுதலையும் செய்யப்பட்டார். அதன்பிறகு , அன்புமிக்க, அவரது உணர்வுகளை நன்கு புரிந்துகொண்ட நல்ல மனிதர் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் அவரால் புதிய வாழ்க்கை துவங்கமுடியவில்லை, மகிழ்ச்சி நீடிக்கவில்லை, கணைய புற்றுநோய் அவரை அரிக்கத் துவங்கிவிட்டதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  அந்த கொடூரமான நோயுடன் போராடிக் கொண்டே வேகவேகமாக தன் வரலாற்றை எழுதிமுடித்த தமிழினி, கடந்த அக்டோபரில் சிகிச்சை பயனளிக்காமல் மறைந்தார்.

அவரது கணவர் ஜெயக்குமரன், அவரது எழுத்துப் பிரதியினை சரிபார்த்து  இப்போது அப் படைப்பினை வெளியிட்டிருக்கிறார்.

பிரபாகரனின் பல்வேறு தவறுகளை பகிரங்கமாக போட்டுடைக்கும் ’கூர்வாளின் நிழலில்’ விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது இயற்கைதானே.

இணையதளங்கள் முழுவதும் ஜெயக்குமரனை இலங்கை அரசின் கையாள் எனச்சாடும் கட்டுரைகள். இன்னும் சிலரோ ஒரு படி மேலே சென்று இதுகாறும் அவர்களே ஏற்றி போற்றி வந்த தமிழினியையே கடிந்துகொள்கின்றனர்.

போர்க்களத்தில் சயனைட் அருந்தி வீர மரணம் எய்தாமல், தப்பித்து வந்து சரணடைந்து, அரசு தயவில் மறுவாழ்வும் பெற்று, பின்னர் தேசியத்தலைவரின் மகிமையைக் குறைக்கும் வண்ணம் எழுதுவானேன் என கொதிக்கின்றனர். அவரது நம்பகத்தன்மையினையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.   

ஆனால், வேலுபிள்ளை பிரபாகரனே கேப்சியூலை கடிக்காமல், ஆயுதங்களையும் கைவிட்டு, சரணாகதி அடைந்தபோதுதானே கொல்லப்பட்டார் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர் பிரபாகரன் துதிபாடிகள்.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, சக்திவாய்ந்தவராக இருந்தார். இதனால் மூத்த கமாண்டர்களை கூட அவர் மதிக்கவில்லை. இளஞ்சிறுவர்களை கட்டாயப்படுத்தி, புலிப்படையில் சேர வைத்தார். இவரது, அடாவடிகளெல்லாம் அந்தந்தப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியினை உருவாக்கியது மட்டுமல்ல, போதிய பயிற்சி இல்லாது களத்தில் இறக்கப்பட்ட பல சிறுவர்கள் விரைவிலேயே பலியாயினர், இன்னும் பலர் சரணடைந்தார்கள் என்கிறது தமிழினியின் சுயசரிதை.

தவிரவும் ஒரு கட்டம் வரையில் ஆண்டன் பாலசிங்கம் பிரபாகரனின் அணுக்க நண்பராக இருந்தார். அவரும் தவறாக வழிகாட்டியதில்லை. ஆனால் பாலசிங்கம் சிகிச்சைக்காக லண்டன் சென்ற பிறகு, தவறான ஆலோசகர்கள் மத்தியில் மாட்டுப்பட்டார் பிரபாகரன்.

2002ல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் போது ஈழம் திரும்பிய பாலசிங்கம், அரசுடன் ஒத்துழைத்து அமைதியை உருவாக்கவேண்டும் என வற்புறுத்தியபோது, அவரை அலட்சியப்படுத்தினார் தம்பி பிரபாகரன்.  விரக்தியுடன் லண்டன் திரும்பினார் பாலசிங்கம்.  இயக்கத்திற்கு அது பெரும் பின்னடைவாக அமைந்தது.

போர்க்களத்தில் தனது யுத்த தந்திரங்களினால் பல வெற்றிகளை ஈட்டி, உலகின் கவனத்தை ஈர்த்தபிரபாகரனுக்கு, அமைதி பேச்சுவார்த்தைகளின்போது எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.   வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கிறார் தமிழினி. 

சரியாகச் சொல்லவேண்டுமானால் அவரது நூல்  புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. ஏற்கனவே தெரிந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது.

விடுதலை புலிகளின் இயக்கத்தை பொறுத்தவரை, அது மிகவும் கட்டுப்பாடு மிகுந்தது. அதன் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாசத்தை காட்ட வேண்டியது மிகவும் முக்கியம். கேள்வி கேட்போரின் உயிருக்கு உத்திரவாதமில்லை, இவையெல்லாம் பலருக்கும் தெரிந்ததுதான்.

நிரோமி டி சொய்சா என்றொரு கிறிஸ்தவ தமிழ் பெண் ஒருவர், விடுதலை புலிகளின் இயக்கத்தில் செயல்பட்டு, பின்னர் அந்த  இயக்கத்தை கைவிட்டு, ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறியவர், தான் அனுபவித்த கொடுமைகளையும், விடுதலைப்புலிகளின் எல்லையற்ற மமதை, அகங்காரம், குரூரம் அனைத்தையும் Tamil Tigress எனும் நூலில் விவரித்துள்ளார்.

ஆனாலும் தமிழினியின் தன்வரலாறு முற்றிலும் வேறு வகையானது. இலங்கை இனப்போர் குறித்த எழுத்துக்களில் அது ஒரு மைல் எனலாம். ஏனெனில் அவர் பிரபாகரனை மிக அண்மையிலிருந்து பார்த்தவர், தலைமை எப்படி செயல்படுகிறது என்பதை நன்கறிந்தவர்.

அவ்வளவு நெருக்கமாக இருந்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒரு நபர், எதற்காக இந்தப் போராட்டம், எதற்காக இவ்வளவு இரத்தம் சிந்தினோம், எல்லாம் விழலுக்கிறைத்த நீர் என்ற முடிவுக்கு வருகையில் அவரது நினைவுகூறல், விமர்சனம் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன.

மற்ற போராளி இயக்கங்களை அழித்தொழித்தது, பாலியல் ஒழுக்கவிதி மீறல்களுக்கு மரண தண்டனை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றியது, இலங்கை அரசால் 2002 இல் முன்எடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளை முட்டாள்தனமாக முறியடித்தது, அத்தகைய நிகழ்வுகள் குறித்து தமிழினி மிக வேதனைப் பட்டுள்ளார்.

இருப்பினும், தமிழ் ஈழம் ஒருநாள் வென்றெடுக்கப்படும், அப்போது  ஜனநாயகம் மலரும், தமிழ்மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் மற்றவர்களைப் போல் இவரும் கட்டுப்பாடு மிகுந்த போராளியாக செயல்பட்டுள்ளார்.  

ஆனால் சர்வ நாசம் என்றானபோது, தனது நினைவுகளை, விமர்சனங்களை ஒரு நூலாக்குவது என்பது அவரது உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாயிருந்திருக்கக்கூடும். 

புத்தகத்தை காலச்சுவடு எனும் பிரபல தமிழக பதிப்பகத்தின் வழியே வெளியிட்டுவிட்டார் ஜெயக்குமரன். இப்போதோ அவர் மீதும் தமிழினிமீதும் கண்டனக்கணைகள், குற்றச்சாட்டுக்கள், எழுதியது தமிழினியே அல்ல என்கின்றனர் சிலர். இடைச்செருகல்கள் ஏராளம் என்று வேறு சிலர். நூல் வெளியிட்டிருப்பதற்கு மோசமான உள்நோக்கம் இருப்பதாக தாக்குதல்கள்.  

ஆனால் ஜெயக்குமரன் சற்றும் மனம் தளரவில்லை.

“இந்த நூல் எழுதுவது என்பது அவரது முடிவு. சொற்களும் சொற்றொடர்களும் அவருடையதுதான். ஒரு இடத்தில் கூட இதை எழுதலாமா அதை விட்டுவிடலாமா என்று அவர் என்னைக் கேட்கவே இல்லை. ’எழுதுவது நான், ஆனால் நூல் வெளியாகும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். உங்களைத் தான் தூற்றப்போகின்றனர்,’ என்று மட்டும் வருந்தினார்.

”அப்படித்தான் நடக்கிறது இப்போது. அபத்தமாக, அற்பத்தனமாக ஏதேதோ சொல்கின்றனர். சேற்றை வாரியிறைக்கின்றனர்.  ஆனால்  எனக்கு அது பற்றி கவலை இல்லை. இந்த உலகம் உண்மையை அறிய வேண்டும் என அவர் விரும்பினார். அவரது விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். அந்த திருப்தி எனக்கிருக்கிறது. எந்த ஒரு நிலையிலும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இல்லையெனில் நாம்  மீண்டும் தண்டிக்கப்படுவோம். அப்படி நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே இந்த நூல்...” என்கிறார் ஜெயக்குமரன் அழுத்தந்திருத்தமாக.

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.