
பெங்களூரு, உல்சூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் திங்கள் அதிகாலை நடந்தது.
கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வாமன ஆச்சார்யா இதுகுறித்து ஒவ்வொரு மார்ச் மாதமும், இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து வருகிறது. எம்.ஜி ரோடு மற்றும் இந்திராநகர் ஆகிய பகுதிகளின் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீர்கள், இந்த உல்சூர் ஏரியில் வந்து கலக்கின்றன. அதனால் நீரில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனாலேயே மீன்கள் இறந்து கரையோரம் மிதப்பது சம்பவிக்கிறது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்.” பெங்களூரு மாசுகட்டுப்பாட்டு அமைப்பு இந்த கழிவு நீர் குறித்த விவகாரங்களை கையாளுகிறது. சரிவர கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணிக்காததால் ஏற்படும் பிரச்சினையே இது. அதனால் கழிவுநீர் சுத்திகரிப்பை உறுதிபடுத்த வேண்டும்” என்றார்.
உல்சூர் ஏரி 108 ஏக்கர் பரப்பினை கொண்டது. இந்த ஏரியை சுற்றி , தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பின்னரும், குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. கடந்த ஜூன் 2015 இல் 32 ட்ராக்டர்கள், ஏரியில் உள்ள முழு குப்பைகளையும் அகற்றி தூய்மை செய்தனர். அதனை தொடர்ந்து தடுப்புகளும் அமைக்கப்பட்டன