
அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக பாதுக்கப்பட்ட குடிநீரை விற்றதாக ஜெய்ப்பூரை சேர்ந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அத்துடன் ராஜஸ்தான் மாநில நுகர்வோர் ஆணைய தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.
புகார்தாரர் மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு வெளியே இருந்து குடிதண்ணீரை வாங்கினார் எனவும், உள் நோக்கத்துடன் தங்கள் மீது புகார் கூறியுள்ளார் எனவும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிர்வாகத்தினர் கூறிய வாதத்தை நீதிபதி ஜெ,எம்.மாலிக் தலைமையிலான பெஞ்ச் ஏற்க மறுத்தது.
இதுகுறித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில்” சந்தர்ப்பசூழல்கள் மற்றும் அதனடிப்படையிலான உண்மைகளை ஆராயும்போது மாநில நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என உறுதிபடுத்துகிறோம். மனுதாரர் (பிக் சினிமாஸ் மற்றும் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் லிமிட்டெட்) தனது வாடிக்கையாளரிடமிருந்து முறையற்ற வகையிலும், சட்டவிரோதமாகவும் அதிகபடியான பணத்தை வசூலித்துள்ளார். எனவே மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்” என்றார்.
மேலும் மனுதாரர் தரப்பு குடிநீர் விற்கப்பட்ட ஆக்குவபினா பாட்டிலில் இருவிதமான அதிகபட்ச சில்லறை விலை போடப்பட்டிருந்தது என கூறப்பட்ட வாதத்தை நிரூபிக்க தவறிவிட்டது எனவும் அதேவேளை மனுதாரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது எனவும் கூறினார்.
நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறுகையில், குடிதண்ணீர் உற்பத்தியாளரான பெப்சி கம்பெனி தரப்பில் நேர்மையற்ற வணிகம் நடந்ததற்காக எந்தவித ஆதாரமும் இல்லை. அதுமட்டுமல்ல அவர்கள் இந்த வழக்கின் ஒரு பிரதியாகவும் இல்லை.ஆகவே அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டிய தேவை உருவாகவில்லை என கூறியுள்ளார்.
முன்னதாக, மனோஜ் குமார் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிக் சினிமாசிற்கு கடந்த ஆகஸ்ட் 11,2012 அன்று சினிமா காண சென்றுள்ளார். அங்கு குடிநீர் வாங்கி குடிக்க சென்ற போது அதிகபட்ச சில்லறை விலையான 16 க்கு பதில் 30 ரூபாய் குடிதண்ணீரின் விலையாக அவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது.குமார் இதனை எதிர்த்து புகார் பதிவு செய்ய புகார் பதிவு புத்தகத்தை கேட்டபோது அது அவருக்கு வழங்கப்படவில்லை. அதோடு திரையரங்கு ஊழியர்கள் மனோஜ் குமாரிடம் முரட்டுத்தனமாக நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, மனோஜ் குமார் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கை எதிர்த்து வழக்கு தொடுத்தார். மாநில நுகர்வோர் ஆணையம் வழக்கினை விசாரித்து மனோஜ்குமாரிடமிருந்து அதிகமாக வசூலித்த 14 ரூபாயை திருப்பி கொடுக்கவும், மேலும் மனோஜ் குமாருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 6500 ரூபாயும் வழங்கும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவினை எதிர்த்து மல்டிபிளக்ஸ் திரையரங்கு செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது மேற்கண்ட உத்தரவை தேசிய குறைதீர் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Translated version of PTI