அப்துல்கலாம் பெயரில் கட்சி. குடும்பத்தினர் எதிர்ப்பு

news Kalam Legacy Wednesday, March 02, 2016 - 11:30

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சி துவங்கியிருப்பதற்கு, அப்துல் கலாமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பொன்ராஜ் நியூஸ் மினிட்டிடம் பேசியபோது “ கலாம் ஐயா ஒரு பொதுவான தலைவர்.யார் வேண்டுமானாலும் அவரது பெயரை பயன்படுத்தி கொள்ளலாம். அவருக்கு எந்த வாரிசுகளும் இல்லை. காந்தி, காமராஜர், அண்ணா போன்றோரை போல கலாமும் ஒரு பொது மனிதர்” என்றார்.

கடந்த ஞாயிறு அன்று, பொன்ராஜ், அப்துல்கலாம் லட்சிய கட்சி என்ற பெயரிலான அரசியல் கட்சியை ராமேஸ்வரத்திலுள்ள பேய் கரும்பில் வைத்து துவங்கினார்.

அப்துல்கலாமுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாததால் இப்படி ஒரு அரசியல் கட்சியை துவங்குவதில் மகிழ்ச்சி இல்லை என கலாமின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

“அப்துல்கலாம் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தவர் அல்ல. வி.பொன்ராஜ் இதற்காக எந்த அனுமதியையும் குடும்பத்தினரிடமிருந்து பெறவில்லை. அவரது மூத்த சகோதரரான ஏபிஜெஎம் மரைக்காயரிடம் கூட கேட்கவில்லை” என அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ பொன்ராஜ் தான் ஒரு அரசியல் கட்சி துவங்க போவதாக எங்களிடம் கூறியிருந்தார்.ஆனால் அந்த கட்சிக்கு அப்துல்கலாமின் பெயரை தான் பயன்படுத்த போவதாக கூறவில்லை. மரைக்காயர் இதனை கடுமையாக எதிர்க்கிறார். கலாமின் பெயரையுடைய இந்த கட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனில் முறையிடவும் உள்ளார்” என கூறினார்.

மேலும் குடும்பத்தினர் கலாமின் பெயரை எந்தவித அரசியல் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி கொள்வதை விரும்பவில்லை என கூறினார்.

இருப்பினும் பொன்ராஜ், அப்துல்கலாமின் குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை.” யார் வேண்டுமானாலும் வருத்தப்பட்டு கொள்ளட்டும். நான் அதற்காக எதையும் செய்ய முடியாது .அவரது சகோதரர் மரைக்காயர் உட்பட பலரை நான் தொடர்பு கொண்டேன். இரண்டு கட்சிகள் பதிவு செய்ததில் நான் ஒன்றை தேர்வு செய்தேன்.” என்றார்.

கட்சியின் நோக்கத்தை பற்றி அவரிடம் கேட்டபோது” நான் எனக்கு சொந்தமாக எந்த அரசியல் கட்சியும் துவங்கவில்லை. இது ஒரு இளைஞர் அமைப்பு, அதற்கு என்னை தலைமையேற்க வலியுறுத்தினர். அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்ட பல மாணவர்கள் என்னை பல மாதங்களாகவே நிர்பந்தித்து கொண்டிருந்தனர். நான் ஒரு கட்சியும் துவங்கவில்லை. அந்த இளைஞர்கள் இந்த கட்சியை துவங்கியுள்ளனர்.” என்றார்.

இந்த அரசியல் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக கூறினார். அத்துடன் அரசியல் புரட்சி மட்டுமல்லாமல் அறிவு சார் புரட்சியையும் தமிழகத்தில் இந்த கட்சி கொண்டு வரும் என்றும் கூறினார்.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.