துணை நீதிபதி வீட்டில், பெண் ஊழியரை வேலை செய்ய சொல்லி துன்புறுத்திய சம்பவம். - ஓர் அலசல்

தினமும் நீ ஏன் அதை செய்தாய் ? ஏன் அதை செய்யவில்லை ? என துணை நீதிபதியின் மனைவி திட்டுவார்
துணை நீதிபதி வீட்டில், பெண் ஊழியரை வேலை செய்ய சொல்லி துன்புறுத்திய சம்பவம். - ஓர் அலசல்
துணை நீதிபதி வீட்டில், பெண் ஊழியரை வேலை செய்ய சொல்லி துன்புறுத்திய சம்பவம். - ஓர் அலசல்
Written by:

ரேஷ்மிக்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது 47 ஆகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்த பெண்மணி, 10 ஆண்டுகளாக நீதிமன்ற ஊழியராக  பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 10 மாதங்களாக, அவரது வேலை மிகவும் துன்புறுத்தல் மிகுந்ததாக மாறியுள்ளது.

அவரது அலுவலக பணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தனது அலுவலக வேலைகளையும் தாண்டி, கூடுதலாக, அவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம்  துணை நீதிபதி செல்வத்தின் வீட்டு வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

“அவர்கள் என்னை, அவர்களது வீட்டை கழுவது முதல், துணி துவைத்தல், சமையல் செய்தல் என அனைத்து வேலைகளையும் செய்ய சொன்னார்கள். ‘நீ ஏன் இதை செய்தாய் ? நீ ஏன் இதை செய்யல’ என்று துணை நீதிபதியின் மனைவி ஒவ்வொரு முறையும் என்னை திட்டினார். நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வேலை செய்ய வேண்டியதாக இருந்தது.

இந்த பிரச்சினையின் பக்கமாக ஊடகங்களின் கவனமும் திரும்பியது. அவர் மேலும் கூறுகையில் “ நான் வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய முடியாது என துணை நீதிபதி செல்வத்திடம் நான் கூறிய போது தான் பிரச்சினையே வெடித்தது. அவர் என்னிடம் மிக கடுமையாக கோபப்பட்டதுடன், நான் துணி துவைத்து கொடுக்கவில்லை என கூறி எனக்கு மெமோவும் தந்தார்.”

மறுநாள், அவர் துணை நீதிபதி செல்வத்தின் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. அவர் அந்த மெமோவை துணை நீதிபதியின் தனி உதவியாளரிடம் காட்டிய போது, அவர் அவரை சமாதானம் செய்தார். அதனை தொடர்ந்து 4, பிப்ரவரி 2016 அன்று, அந்த மெமோவுக்கு பதிலளிக்கும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் ரேஷ்மி.

துணை நீதிபதி செல்வத்தின் மனைவி, ரேஷ்மியிடம் நடந்து கொள்ளும் முறை அவருக்கு பிடிக்கவில்லை. எதை செய்தாலும், துணை நீதிபதியின் மனைவி கண்டபடி திட்டுவார். சிலவேளைகளில் ரேஷ்மியும் பதிலுக்கு எதையாவது பேசுவார். ஆனால் பிப்ரவரி 1 ஆம் தேதி, கிடைக்கபெற்ற மேமொவிற்கு பின், துணை நீதிபதியின் மனைவியின் வீரவசனங்களுக்கு ரேஷ்மி பதில் கூறுவதில்லை.

ஏன் நீங்கள் நீதிபதிக்கு எதிராக புகார் அளிக்க கூடாது என கேட்டதற்கு “ நான் இது பற்றி யோசித்து வருகிறேன். விரைவில் இதுகுறித்து ஒரு நல்ல முடிவு எடுப்பேன். என்னை போன்றே பல ஊழியர்கள், பிற நீதிபதிகளின் வீட்டில் வீட்டு வேலைகளை பார்த்து வருகின்றனர்.” என்றார்.

இந்த வேலையை விட்டுவிட்டு, ஏன் நீங்கள் வேறு வேலைக்கு செல்ல கூடாது என கேட்டபோது” இது அரசு வேலை. இங்கு நான் 15000 ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறேன். இதை விட கூடுதலாக யார் சம்பளம் தருவார் ? “ என கேட்டார்.

ரேஷ்மியை பொறுத்தவரை, இந்த வேலை அவருக்கு மிகவும் முக்கியம். அவரது குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இவர் ஒருவரே. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒருவர் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். மற்றொருவர் கல்லூரியில் படிக்கிறார்.அவரது கணவருக்கு சமீபத்தில் தான் அறுவைசிகிச்சை நடந்துள்ளது. அதற்கு 3 லட்சம் ரூபாய் கடன் எடுத்துள்ளார்” கிடைக்கும் 15000 ரூபாயில் 7000 ரூபாய் கடன் அடைக்க செலவாகிவிடுகிறது. மீத தொகையை கொண்டு தான் குடும்பம் நடத்தவேண்டிய நிலையில் உள்ளேன். “ என்றார்.

இந்த பிரச்சினை குறித்து நியூஸ் மினிட் சார்பில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவிடம் கேட்ட போது, “ அலுவலக உதவியாளர்களை, நீதிபதிகள் தங்கள் வீட்டில் வேலை செய்ய வைப்பதை பற்றி தெளிவாக விளக்காததே பிரச்சினைக்கு காரணம். அவ்வாறு செல்லும் உதவியாளர்கள், அது தங்கள் அலுவலக வேலை என்றே நினைத்து விடுகிறார்கள். இது போன்ற செய்கைகள் எங்கும் காணப்படுகின்றன. சத்தியமங்கலம் நிகழ்வை போன்று, எப்போதாவது ஒரு புகார்கள் வருகின்றன.” என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில்,” நவம்பர் 1992 இல் ஊழியர்கள் ஒரு கூட்டம் போட்டு, தலைமை நீதிபதி காந்தகுமாரியை, நீதிபதியின் வீட்டில் வேலைக்கு செல்லும் போது, எந்த மாதிரியான வேலைகள் செய்ய வேண்டும் என விளக்கும்படி கேட்டு கொண்டனர். ஆனாலும், சக நீதிபதிகளின் அழுத்தத்தால் அதை அவர் சரிவர விளக்கவில்லை. அப்போது அவர் அனுப்பிய சர்குலரில் “ சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரி அவர்களுக்கு கொடுக்கும் வேலையை அவர்கள் செய்ய வேண்டும் “ என குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ இது போன்ற சம்பவங்களுக்கு அதிகபட்சம் ஒரு மெமோ கொடுத்து, பின்னர் ஒரு எச்சரிக்கையும் விடப்படுகிறது. சில நேரங்களில் அவை வாய்மொழி எச்சரிக்கையாக கூட இருந்துவிடுகின்றன. ஒரு நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.” என்றார்.

தலித்திய எழுத்தாளரான ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகையில், “ நாம் நமது நீதிபதிகளை, நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீதி வழங்குவார்கள் என நம்பிக்கை வைக்கிறோம்.இந்த விவகாரத்தில், ஒரு பொறுப்புள்ள நீதிபதியாக அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுடன், தனது ஆதிக்க அதிகாரத்தை ஒரு தலித் நீதிமன்ற ஊழியரிடம் காட்டியுள்ளார். அந்த பெண்மணியை வீட்டில் வேலை செய்ய வைப்பது தவறு, அதோடு அது சட்டத்திற்கு புறம்பானதும் கூட. அவர் ஒரு அரசு ஊழியர். அதுவும், அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கீழ்நிலை ஊழியர்.” என்றார்.

இதனிடையே, இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிமன்ற பணியாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.” நாங்கள் துணை நீதிபதியின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். அந்த ஊழியர் நீதிபதி மற்றும் அவரது மனைவியின் உள்ளாடைகளையும் துவைக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு, அந்த ஊழியருக்கு நீதி கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஊழியர்களை அலுவலக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதி மன்றத்தை கேட்டு கொண்டுள்ளோம்” என்றார் நீதித்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் கருணாகரன்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com