
ஒட்டு மொத்த உலகமும் குத்து சண்டை ஜாம்பவான் முகம்மது அலியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 1980 இல் சென்னை வந்த அவரை உங்கள் நினைவில் கொண்டு வருகிறோம். ஜிம்மி எல்லிஸ் என்பவருடன் மோதுவதற்காக அவர் அப்போது சென்னை வந்திருந்தார். நட்சத்திர அரசியல்வாதியும் அப்போதைய முதல்வருமான எம்.ஜி.ஆரும், உற்சாகமூட்டும் குத்துச்சண்டை வீரரான முகம்மது அலியும் தங்கள் கைகளை கோர்த்து, உயர்த்தி காண்பித்தபடி மேடையில் தோன்றியதை சென்னை ரசிகர்கள் காணும் வாய்ப்பை பெற்றனர்.
1980 இல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை காண கூட்டம் நிரம்பி வழிந்ததாக தி இந்து நாளிதழ் கூறுகிறது.இந்த போட்டியை தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த போட்டிக்கான டிக்கெட்களின் விலை ரூ.1௦௦, 7௦, 5௦, 20 மற்றும் 10 ஆகிய விலைகளில் விற்கப்பட்டன. கன்னிமாரா ஹோட்டல், இரு குத்துச்சண்டை வீரர்களுக்கும் சொகுசு அறைகளை தங்குவதற்காக வழங்கியதுடன், இரு வீரர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை போன்ற ஓவியத்தையும் விளம்பரமாக போட்டது.
இது குறித்து, சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராபு மனோகரிடம் நியுஸ்மினிட் சார்பில் பேசப்பட்டது. அவர் தனது 17 வது வயதில் நடந்த அந்த போட்டியில் பார்வையாளராக சென்றிருந்தார்.
“உண்மையில் நாங்கள் எம்.ஜி.ஆரை பார்க்க சென்றிருந்தோம். எம்.ஜி.ஆர் அப்போது எங்கள் நாயகனாக இருந்தார். முகம்மது அலியை பார்த்ததும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவர், ஸ்டேடியம் முழுவதும் ஒரு ஜீப்பில் சுற்றி வந்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது எல்லாரும் “ முகம்மது அலி கறுப்பு சூப்பர் மேன் “ என பாடினர்.” என கூறினார்.
மேலும் அவர், “ எம்.ஜி.ஆர் மேடையை நோக்கி செல்ல முற்பட்ட போது, அவரது வேஷ்டி கயிறுகளுக்கு இடையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் குதித்து உள்ளே செல்ல வேண்டியிருந்தது. அவருக்கு, முகம்மது அலியை விட அதிகம் இளம் ஆதரவாளர்கள் இருந்தனர்.” என கூறினார்.
சென்னையை சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர், அலி மற்றும் எல்லிஸ் ஆகியோருக்கு இடையே நடந்த போட்டியின் போது ஒரு யானையும் கொண்டுவரப்பட்டது என கூறினார். அப்போது தனக்கு 10 வயது இருக்கும் என கூறினார் அவர்.
அது போன்றே, முகம்மது அலி சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதும் அவரை காண கூட்டம் நிரம்பி வழிந்ததாக தி இந்து நாளிதழ் கூறுகிறது.
தி இந்து நாளிதழில் வெளியான செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் குத்து சண்டையில் இடது ஹூக் முறையில் இருக்கும் அவரது பலவீனத்தை குறித்து கேட்டார். அதற்கு, அந்த செய்தியாளரை களத்தில் மோதி பார்ப்போமா என சவால்விட்டார் அலி. மேலும், “ மகனே நான் கலந்து கொண்ட 49 போட்டிகளில் 32 போட்டிகளில் எனது எதிர் போட்டியாளர்களை போட்டியிலிருந்தே வெளியேற்றி இருக்கிறேன். நான் அதிகம் ஒன்றும் இதனால் கஷ்டப்படவும் இல்லை. எனது முகத்தை பாருங்கள். ஏதேனும் காயங்களையோ அல்லது தழும்புகளையோ பார்க்கிறீர்களா ? தெளிவாகவும் அழகாகவும் உங்களுக்கு தெரியவில்லையா ? அது தான் இது. அதனால் தான் நான் குத்து சண்டையில் சிறந்தவனாக இருக்கிறேன்.”
எல்லிஸ் மட்டுமல்லாது, ஒரு பள்ளி மாணவனும் அலியுடன் சிறிது மோதுவதற்காக அனுமதிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.