பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் மிக்க தேவி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ளார்.

 Image: C Devi
news TN2016 Wednesday, April 06, 2016 - 15:07

தேவிக்கு 33 வயதுதான் ஆகிறது. ஆர்.கே நகரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் காணும் வேட்பாளர் இவர். ஆனால் இவர் ஒரு திருநங்கை என்பது தான் கூடுதல் சுவாரசியமான தகவல்.

தேவி தான் தமிழக தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியத்தை கூறும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தேவியிடம் கேட்டால், நான் ஜெயலாலிதாவை எதிர்த்து நிற்கவில்லை என்று கூறுகிறார். “ ஜெயலலிதா, தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர். நான் அவரை எதிர்த்து நிற்கவில்லை, மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக நிற்கிறேன்” என்கிறார் தேவி.

சேலத்தை சேர்ந்த தேவி கடந்த 2004 முதல் பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள் மற்றும் திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடி வருகிறார். கடந்த 2009 இல் வீடில்லாதவர்களுக்காக, தாய்மதி என்ற இல்லத்தை துவங்கினார். அதில் தற்போது 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் குறித்து அவரிடம் பேசிய போது,” ஏழைகளின் வாழ்க்கையில் வளர்ச்சியை கொண்டுவர பாடுபட போகிறேன். கூடவே இந்த தொகுதி மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீர் கொடுக்கவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க செய்யவும் பாடுபடுவேன்.” என கூறினார்.

கடந்த மூன்று வருடங்களாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருக்கும் அவர், மக்களுக்கு அரசியல் மூலம் இன்னும்  வலுவாக சேவை செய்ய முடியும் என்பதால் அரசியலை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.

திருநங்கைகளுக்கு மக்கள் மத்தியில் போதிய அங்கீகாரம் கிடைக்காதது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கூறுகிறார் இவர்.

தொடர்ந்து, நடிகையும் , காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சுந்தர் சமீபத்தில் திருநங்கையினர் அரசியலில் எந்த வேலையும் செய்யாமலேயே உயர் பதவியைடைய விரும்புகின்றனர் என கூறியதை சுட்டிக்காட்டிய தேவி, நடிகை குஷ்பு அவ்வாறு பேசியிருக்க கூடாது என கூறினார்.

“மற்றவர்கள் அவ்வாறு வரவிரும்புகிறார்கள் எனில், ஏன் நாங்களும் அவ்வாறு வர கூடாது ? நாங்கள் அரசியலுக்கு வரலாமா ? வரக்கூடாதா என்பதை பற்றி கூற அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை.அவரது இந்த கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம். “ என்றார்.

தேவி 16 வயதான போது தான், தான் ஒரு திருநங்கை என்பதை அறிந்து கொண்டார். அதனை தொடர்ந்து பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பினார்.

தனது பெற்றோர் எதிர்த்த பின்னரும் கூட, தனது 17 வது வயதில் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்ய போனார்.” நான் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் என்பதை கேள்விப்பட்ட பின்னரே, எனது பெற்றோர் என்னை ஏற்று கொள்ள துவங்கினர்.” என தேவி கூறினார்.

தற்போது ஆர்கே நகரில் தனது தாயாருடன் வசித்து வரும் தேவி, தாய் மடி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.