மேய் முதல் வாரத்திலிருந்தே ஒருவன் தன்னை பின்தொடர்வதாக பல முறை தங்களிடம் சுவாதி கூறியதாக பிலால் கூறுகிறார்.

Tamil Sunday, July 03, 2016 - 11:54

கடந்த வாரத்தில் சென்னை ஐ.டி ஊழியர் சுவாதியின் கொலைக்கு பின்னர் பல வதந்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக, சுவாதியின் தனிப்பட்ட குணங்களை கேள்விக்குள்ளாக்கி வெளிவந்த வதந்திகள் பெண்கள் பாதுகாப்பு குறித்த வெளிப்படுத்தல்களை பலவீனப்படுத்தியது எனலாம்.

சுவாதியின் நெருங்கிய நண்பரான முகம்மது பிலால், ஊடகங்களும், பொதுமக்களும் இந்த கொலை தொடர்பாக தங்கள் கவனத்தை செலுத்தி வந்த நிலையில், போலீசார் விரைவான விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்ததற்காக நன்றியை கூறிக் கொள்வதாக நியூஸ் மினிட்டிடம் தெரிவித்தார்.

“சுவாதி இறந்த பின் வெளி வந்த பலவகையான வதந்திகள், விசாரணையை பின்னடைய செய்திருக்க முடியும். ஆனால் நல்ல வேளையாக அவ்வாறு நடைபெறவில்லை. குறைந்தபட்ச தகவல்களும், எண்ணற்ற வதந்திகளும் இருந்து வந்த நிலையில் தான் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளான். அதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்.” என்றார் அவர்.

சுவாதி பலமுறை தன்னை பின்தொடர்ந்த இந்த நபரை குறித்து கூறியதாக பிலால் கூறுகிறார்.” மேய் முதல் வாரத்திலிருந்து, நானும், சில நெருங்கிய நண்பர்களும் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் ஒருவன் தன்னை பின்தொடர்வதை போல் உணர்வதாக சுவாதி சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நபர், பலமுறை சுவாதியின் வீட்டருகிலும், அவர் வேலைக்கு செல்ல ரயில் ஏறும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலும் பல முறை தோன்றியுள்ளார். இது வெவ்வேறு நாட்களில் நடந்துள்ளது. சுவாதி இதுபற்றி எங்களிடம் 5 முறைக்கு மேல் கூறியிருந்தார் என நான் நினைக்கிறேன்.இருப்பினும், அந்த நபர் நேரடியாக தன்னிடம் பேச முயற்சிக்காத்தால், இது பற்றி பெரிய அளவில் தான் சிந்திக்கவில்லை என்றும் சுவாதி கூறியிருந்தார்.” என கூறிய அவர், “இதுகுறித்து, வீட்டில் சொல்லவோ அல்லது போலீசில் புகார் அளிக்கவோ செய்யும்படி நாங்கள் கூறிய போது, அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை என்றே நினைத்திருந்தார். ஆனாலும் அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுவாதியை பின்தொடர்வதை வழக்கமாக கொண்டிருந்தார்” எனக்கூறினார் பிலால்.

ஆனால் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் தன்னை கவலையடைய செய்ததாக பிலால் கூறுகின்றார். “ ஒவ்வொருவருக்கும், தாங்கள் விரும்பியபடி வாழ உரிமையுண்டு. நாம் எல்லாருக்கும் அடிப்படை சுதந்திரம் உண்டு. இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும்போது, பலரும் சமூகத்தை சோதிக்கும் வேலையில் இறங்கிவிடுகின்றனர். ஒரு சிலர் லவ் ஜிகாத் என்றும், வேறு சிலர் வகுப்புவாத நோக்கங்கள் கொண்டது எனவும் கோபத்துடன் உச்சரிக்க துவங்குகின்றனர். அதையும் தாண்டி, அந்த பெண்ணிற்கு கெட்ட சகவாசங்கள் இருந்திருக்கும் என கூறி கொலையை நியாயப்படுத்தும் போக்கும் நடைபெறுகிறது.” என அவர் கூறுகிறார்.

சுவாதி யாருடன் இருந்தார் என்றும், என்ன செய்து கொண்டிருந்தார் என்றும், தனக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரை எப்படி கோபத்தை தூண்டிவிட்டாரென்றும், எதோ அவரது தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தும் தெரிந்ததை போல் பலரும் நீண்ட பிரச்சாரத்தையே செய்து கொண்டிருந்தனர் என கூறுகிறார் பிலால்.

சுவாதியின் வாட்ஸ் அப் உரையாடல்களையும், நகைச்சுவை கலந்து பேச்சுக்களையும் ரசித்த பிலால் உட்பட அவரது நண்பர்கள் அனைவருக்கும், அவர் இறந்த பின் வெளிவந்த வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. “ அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே அவரைப் பற்றி தெரியும். இது போன்ற வதந்திகள், அவரைப்பற்றி தெரியாத, அவரை நேரில் கூட சந்தித்திராதவர்களால், பொருத்தமற்ற வகையில் வியூகத்தின் அடிப்படையில் பரப்பிவிடப்படுகின்றன.” என்றார் அவர்.

கடைசியாக தொழுகைக்கு போவதற்கு முன் அவர், “ சுவாதியின் அழகு அவரது சிரிப்பில் இருந்தது. கடினமான சூழலிலும், அந்த சிரிப்பு நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியது. அந்த நினைவுகளை அகற்ற எதனாலும் முடியாது. “ என கூறி விடைபெற்றார் பிலால்.

Show us some love! Support our journalism by becoming a TNM Member - Click here.