கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், கொடியும் கட்சியின் பெயரும் அறிவிக்கப்படும் என அறிவிப்பு

Vernacular Sunday, February 28, 2016 - 19:50

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அரசியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் தமிழக அரசியலில் குதித்துள்ளார். இதனை அவர், விருதுநகரில் வைத்து நடந்த ஒரு பேரணியில் அறிவித்துள்ளார்.

புதிய கட்சியின் பெயர் மற்றும் அதன் கொடி, கலாமின் நினைவிடத்தில் தான் அஞ்சலி செலுத்திய பின் அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், பொன்ராஜின் சொந்த கிராமமான தொணுகலில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட பேரணியில், அரசியிலில் நுழையும் தனது விருப்பத்தை பொன்ராஜ் அறிவித்ததாக கூறுகிறது.

மேலும் பொன்ராஜ் கூறுகையில், புதிய அரசியல் கட்சி வெறும் மாற்றத்தை மட்டும் முன்னிறுத்தாமல், தமிழகத்தை வளர்ந்த மாநிலம் ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ், கட்சி விரைவிலேயே தனது இணையதளத்தை வெளியிடபோவதுடன் , இணையம் வழி உறுப்பினர் சேர்க்கையும்  முன்னெடுக்கும் என்றார்.

இருப்பினும், கிராம பகுதிகளில் மக்களை எளிதில் சென்றடைய வசதியாக மாவட்ட அளவிலான பிரிவுகள் துவங்கப்படும் எனவும் கூறினார்.

“நாங்கள் தொகுதிவாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தேர்தலை சந்திக்க செய்வோம். 60:40 என்ற விகிதத்தில் இளைஞர்களையும், பிறரையும் தேர்வு செய்வோம். பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என அனைவரையும் எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்” என்றார்.

ஏரோநெட்டிக்கல் வளர்ச்சி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பொன்ராஜ், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயத்தை கவனிக்க திட்டமிட்டிருந்தார். தமிழகத்தில் விவசாயம் அடைந்து வரும் வீழ்ச்சியை தடுத்து அவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வழிவகைகளில் கவனம் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.