பல பெண்களின் குடும்பத்தினர் , மனைவியின் மீது கணவர் வலுக்கட்டாயமாக உறவு கொள்வதை, கணவன் - மனைவி உறவை சொல்லி நியாயப்படுத்துகின்றனர்.

news பாலியல் வன்முறை Tuesday, March 22, 2016 - 20:21

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா ராமலிங்கத்தை, கணவனால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் சந்திக்க போயிருந்தார். அதற்கும் சில நாட்கள் முன்னர் தான், அந்த பெண் தனது கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தனது பிறந்த வீட்டிற்கு திரும்ப சென்றிருந்தார். ஆனால் அவர்கள் தம்மில் சட்டரீதியான பிரிவினை ஏற்பட்டிருக்கவில்லை.

தனது பிறந்த வீட்டிற்கு அந்த பெண் சென்ற சில நாட்களில், ஒரு நாள் அங்கு வந்த அவரது கணவர், அவரது அறையினுள் புகுந்து அவருடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துள்ளார். அந்த நேரம், அந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு தான் இருந்துள்ளனர். இருப்பினும் அவர்கள், அந்த பெண்ணுடைய  கணவரின் நடவடிக்கையை தடுக்கவில்லை. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற காரணம் கூறி ஒதுங்கி கொண்டனர்.

“ அந்த பெண்ணின் குடும்பத்தினர், இந்த சம்பவத்தை நியாயப்படுத்தினர். இருவரும் மீண்டும் ஒன்று சேர இது வழிவகுக்கலாம் என்று கூட கூறினர். “ என கூறும் சுதா, இது போன்ற எண்ணற்ற வழக்குகள் தன்னிடம் வருவதாகவும், பல பெண்களின் குடும்பத்தினர், இதனை அனுமதிக்கின்றனர் என்றும் கூறினார்.

சுதா ராமலிங்கம், ஒரு வழக்கறிஞராக, கணவன்கள் மற்றும் மனைவிகள் என இருவகைப்பட்டவர்களுக்கு வேண்டி எண்ணற்ற விவாகரத்து வழக்குகளில் வாதாடியுள்ளார். அது போன்றே, திருமண கற்பழிப்பு தொடர்பான வழக்குகளில் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட , அது சார்ந்த குடும்ப வன்முறை வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார். இருப்பினும், இது போன்ற சூழல்களில், கற்பழிப்பில் ஈடுபடும் கணவர், சமூக ஒப்பந்தத்தின் காரணமாக, தனக்கு சாதகமான சூழலை பெற்றுவிடுவதாக கூறுகிறார் அவர்.

சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள், திருமண கற்பழிப்பை குற்றம் என கருதி சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக சட்டம் இயற்றாமலிருப்பதை நியாயப்படுத்தி, அறிக்கை வெளியிட்டிருந்தனர்.  உடனடியாக, பல தரப்பிலிருந்தும் அதற்கான கண்டனங்கள் எழுந்தன. ஆனால், திருமண கற்பழிப்பு சட்டத்திற்கு எதிராக உள்ள இவர்கள், தீவிர வலதுசாரித்தன்மை கொண்ட ஆளும் தரப்பினர் என்பதுடன், கலாச்சாரம், குடும்பம், மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் ஆகியவற்றின் அடிப்படையை பாதுகாக்க வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளனர். இருப்பினும், இதற்கு அப்பால் கூட சில முக்கிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

அவற்றில், மூன்று பிரச்சினைகள் முக்கியமாக எழக்கூடியவை. முதலாவது, கணவருடனான, மன வேறுபாட்டின் காரணமாக, வஞ்சக  நடவடிக்கையாக இந்த சட்டத்தை மனைவிகள் பயன்படுத்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்குமா ?. இரண்டாவதாக, உண்மையில் கணவன் மனைவிக்கிடையில் நடந்த உடலுறவு கட்டாயப்படுத்தப்பட்டு நடந்தது தான் என்பதை ஒருவர் எப்படி நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் ? மூன்றாவதாக, குடும்ப வன்முறை சட்டத்தில் பாலியல் கொடுமை பற்றி விளக்கப்பட்டுள்ள நிலையில், திருமண கற்பழிப்புக்கு ஏன் தனியாக ஒரு சட்டம் தேவை ?

இதில் உள்ள கடைசி கேள்விக்கான விடையை எளிதில் கூறி கொள்ள முடியும். குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை பொறுத்தவரை, அது ஒரு சிவில் சட்டம். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு, பண இழப்பீடு கிடைப்பதையும், தொடர்ந்துள்ள பாதுகாப்பையும்  உறுதிபடுத்த கூடியது. ஆனால் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொண்டு, கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்கான வழிவகைகள் அதில் இல்லை.

திருமண கற்பழிப்பை, சிவில் வழக்காக நடத்தும்போது, அதனை ஏன் குற்றவியல் வழக்காக, விசாரிக்க கூடாது? என்ற மற்றொரு கேள்வியும் இதனுடனேயே எழுகிறது.

ஆனால், முதல் இரு கேள்விகளுமே, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டின் காரணமாக, கலாச்சார ரீதியான தவறான எண்ணங்களால் உருவாகுபவை. இருப்பினும், சட்ட ரீதியாக தெளிவுடன் இந்த கேள்விகளை புரிந்து கொள்வது மிக அவசியம்.
 

மனைவியின் பழிவாங்கல் நடவடிக்கை 

திருமண கற்பழிப்புக்கு எதிரான சட்டம், வஞ்சகமான எண்ணங்கள் நிறைந்த மனைவிகளால், தனது கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு, அவரை சிறைக்கு அனுப்ப கூடும் என்ற வாதத்தை கவனிப்போம்.

“ இந்த நாட்டில், பொய் சாட்சிகளும், கோர்ட் அவமதிப்புகளும் அதிகம் கண்டுகொள்ள படாத நிலையில் தான் உள்ளது. பொய்யாக குற்றஞ்சாட்டுப்படுவது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் “ என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

ஆனால், பிரஜன்யா அறக்கட்டளையின், திட்ட அதிகாரி ராகமாலிக கார்த்திகேயன் கூறுகையில, “பொய் வழக்குகள் உள்ளன என்பதை யாருமே மறுத்து கூறவில்லை . ஆனால், உண்மையில் பொய் வழக்குகளின் எண்ணிக்கை என்பது  மிகைப்படுத்தபடுகிறது. அந்த சட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைபடுத்துவதற்கான காரணத்தை உறுதி செய்வதுடன், பொய் வழக்குகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். மிக முக்கியமாக, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதுடன், கற்பழிப்பு குற்றம் செய்தவர்களை,  தண்டனையிலிருந்து தப்பவும் விட கூடாது” என்றார்.

திருமண கற்பழிப்பின் உண்மைத்தன்மையை நாம் புறக்கணிக்க முடியாது. ஐநா சபையின் மக்கள்தொகை நிதியத்தின் படி, இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், குறிப்பாக 15 க்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களால், தாக்கப்படுவது, கற்பழித்தல் அல்லது கட்டாயமாக உடலுறவுக்கு நிர்பந்திக்கப்படுவது ஆகியவற்றிற்கு உள்ளாகின்றனர். இதுபோன்றே, தேசிய குடும்ப நல புள்ளிவிவரம், 10 இல் ஒரு பெண், தனது கணவரால், வாழ்நாளில் ஒருமுறையேனும் திருமண கற்பழிப்பு உட்பட பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கபடுகிறார் என கூறுகிறது.

 

திருமணத்தை புரிந்து கொள்ளுதல்

 

திருமண கற்பழிப்பை குற்றமாக்கும் சட்டத்தை எதிர்ப்பவர்கள், திருமணம் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ளாமல் துரோகம் செய்யப்படுகிறது  என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். சட்டரீதியாகவோ அல்லது வேறுவகையிலோ, திருமணம் என்பது ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணுடன் உடலுறவு வைப்பதற்கான உரிமம் அல்ல. பொதுவான விளக்கத்தின்படி பார்த்தால், திருமணம் என்பது இருவேறு பாலினத்தவர், கணவனாகவும், மனைவியாகவும் பரஸ்பர ஒப்புதலுடன், உறவை ஏற்படுத்தி, சட்ட அங்கீகாரத்துடன் ஒன்றிணைந்து வாழும் நிலை என்பதே ஆகும்.

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம். இதில் மனைவி, தனது உடலின் மீது சுயமான அதிகாரத்தை தொடருகிறார்.

இதிலிருந்து, திருமண கற்பழிப்பு எப்படி மற்ற கற்பழிப்புகளிலிருந்து வித்தியாசப்படுகிறது ? என மற்றொரு கேள்வியும் எழுகிறது.

கற்பழிப்பு என்பது ஒருவரது சம்மதம் இல்லாமல் பாலியல் உறவு வைப்பது. பெண்ணை, கணவனின் ஒரு சொத்தாக பாவிக்கப்பட்டதால், திருமண கற்பழிப்புக்கு இந்திய சட்டங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1600 கள் முதற்கொண்டு உள்ள இந்திய சட்டங்களின் வரலாற்று தடங்களும் அதனை மெய்ப்பிகின்றன. “ கணவன், தனது சட்டபூர்வ மனைவியிடம் கற்பழிப்பு செய்வதை வைத்து குற்றவாளியாக கூற முடியாது. அவர்கள் தம்மில் பரஸ்பர ஒப்புதல் அடிப்படையிலான திருமண பந்தம் மற்றும் ஒப்பந்தத்தின் காரணமாக மனைவி தன்னை கணவனுக்கு ஒப்படைக்கிறார். இதனை மனைவி திரும்ப பெற முடியாது.”  என இங்கிலாந்து தலைமை நீதிபதி மேத்யு ஹேல் கூறியுள்ளார்.

திருமணமான ஆணுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டபூர்வாக மனைவியை பிரிந்த கணவனுக்கு இது போன்ற குற்ற செயல்களுக்காக குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டது. உண்மையில், நாட்டில் குழந்தை திருமணம் ஒழிக்கப்பட்டாலும், 12-15 வயதுக்குட்பட்ட பெண்களை கற்பழித்தால் கூட அந்த நபர், அந்த பெண்ணை திருமணம் செய்தால் குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுகிறது.

 

ஆதாரங்களை பற்றி

ஆதராங்களை பற்றிய கேள்வி எழும்போது, நிரூபிப்பதற்கான பொறுப்பு குறித்த விவாதம் எழுகிறது. ஒன்றை நிரூபிப்பதற்கு கடினம் என்ற வாதத்தை வைத்தே  ஒரு குற்றத்தை புறக்கணித்துவிட முடியாது.

“ தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரின்,சாதாரண கற்பழிப்பு செயலை கூட நிரூபிப்பது கடினமான காரியம்.சந்தர்ப்ப சூழ்நிலை கொண்டு தான் கற்பழிப்பு நிரூபிக்கபடுகிறது.” என சர்வதேச குற்றங்கள் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் நல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரசன்னா கெற்று சுட்டிக்காட்டுகிறார். பொதுவான கற்பனையில் கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணின் மீதான வினோத தாக்குதல், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 96 %  கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள்  குற்றவாளியை தெரிந்து வைத்துள்ளனர்.

டாக்டர் பிரசன்னா மேலும் கூறுகையில்,” மற்ற கற்பழிப்புகளை போல் ஒரே நிகழ்வாக அல்லாமல், வித்தியாசமான சூழல்களை கொண்டது திருமண கற்பழிப்பு. அது தனிப்பட்ட சூழலில் இல்லாமல், அதற்கேயுரிய வன்முறை வரலாற்றோடு, உடல்ரீதியான தொடர் துன்புறுத்தல்கள் உட்பட பெருமளவு குடும்ப வன்முறையால் நிகழ்த்தப்படுவது. நாம் இதனை வித்தியாசமான கோணத்திலிருந்து பார்க்க வேண்டும்.” என கூறிய அவர், வேலை செய்யும் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் கூட நிரூபிக்க முடியாதவை தான். ஆனால் அவற்றுக்கு எதிராகவும் சட்டங்கள் உள்ளன என்று கூறினார்.

திருமண கற்பழிப்புகளை  குற்றமாக கருதுவதற்கு எதிரான வாதங்கள் கைரேகை ஆதாரங்களை அல்லது அதன் இல்லாமையோ சுட்டி காட்டுகின்றன. டிஎன்ஏ ஆதாரங்களை கொண்டு, எப்படி நீங்கள் சம்மதமில்லாமையை நிரூபிப்பீர்கள் ? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இதற்கான விடையை, உச்சநீதிமன்றம் ஷேக் சாகிர் எதிர் பீகார் மாநிலம் வழக்கில் கூறியுள்ளது. அதில், பிற ஆவணங்கள் நம்பத்தக்க நிலையில் இருக்குமெனில், மருத்துவ ஆவணங்கள் போதிய ஆதாரமாக இல்லாவிட்டாலும் கூட, அதிக விளைவை ஏற்படுத்தாது என கூறியுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அகிலா, திருமண கற்பழிப்புக்கும் கூட மருத்துவ ஆவண  ஆதாரங்களை பெற முடியும் என்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ உடல்ரீதியான தொடர் துன்புறுத்தல்கள், அதன் முடிவில் உருவாகும் கற்பழிப்புகள், மனைவியின் மருத்துவ பரிசோதனைகள், கணவரை எலக்ட்ரானிக் கம்யுனிகேஷனுக்கு உட்படுத்துதல், இவை எல்லாம், கணவரின் குற்றசெயல்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தான் “ என கூறும் அவர், கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளுவதையும், சம்மதத்துடன் உறவு கொள்ளுவதையும் குறித்த நேரத்தில் பரிசோதனை செய்தால் கண்டறிய முடியும் எனவும் கூறினார்.

மேலும் அவர் “ குற்றவியல் நீதிபரிபாலன முறைகளில் சில ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால், நாம் அதனை சரி செய்ய வேண்டியுள்ளது. குறைந்தபட்சம், போதிய ஆதாரங்கள் உள்ள திருமண கற்பழிப்புகளில், தவறு செய்யும் கணவர்களை தண்டிக்க அது உதவும்.” என்றார் அகிலா.

“நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திருமண கற்பழிப்பை குற்றமாக கருத வேண்டும் என கூறும் நாங்கள், திருமணமான பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் வேண்டுமென கேட்கவில்லை. மாறாக, சில கற்பழிப்பு குற்றவாளிகளை அகற்றுவதற்கு, சிறப்பு அந்தஸ்து  வேண்டும் என்றே கேட்கிறோம். நாம் நல்ல கற்பழிப்பு, கெட்ட கற்பழிப்பு என எதனையும் கூற முடியாது. அது போன்றே, பாதிக்கப்பட்டவருக்கும், குற்றம்புரிபவருக்கும் இடையே உள்ள உறவை கொண்டு அதனை தரம் பிரித்துவிடவும் முடியாது “ என்றார் ராகமாலிகா.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.