1000 பேரில் 300 முதல் 400 பேர் வரை முறையாக கல்வி பெறாமல் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பதாக தகவல்

Tamil Tuesday, June 21, 2016 - 12:35

கடந்த மேய் மாதம் 20 ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் வாலிபர் ஒருவர் அக்குபஞ்சர் மருத்துவரின் அறிவுரையின்படி இன்சுலின் எடுப்பதை நிறுத்தியதை தொடர்ந்து மரணமடைந்தார்.

தமிழகம் முழுவதும், மருத்துவ உலகில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியதுடன், போலி மருத்துவர்கள் எந்த அளவு சமூகத்தில் ஊடுருவி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனை வெளிச்சம் போட்டு காட்டவும் செய்தது.

இத்தகைய போலி மருத்துவர்களை குறித்து அலபதி மருத்துவர்கள் மட்டுமல்லாது, அக்குபஞ்சர் அறிவியல் கூட்டமைப்பினரையும் கவலையடைய செய்துள்ளது. இந்த அமைப்பினர், அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிப்பவர்களை ஒழுங்கப்படுத்த வேண்டும் எனவும் அரசினை வலியுறுத்துகின்றனர்.

அக்குபஞ்சர் மூலம் சிகிச்சையளிப்பவர்களை கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

“அக்குபஞ்சர் மருத்துவம் உலகம் முழுமைக்கும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில் 1000 அக்குபஞ்சர் மருத்துவர்கள் இருந்தால் அவர்களில் 300 முதல் 400 பேர் போதிய பயிற்சி பெறாத தகுதியற்றவர்களாகவே இருந்து விடுகின்றனர். இந்த நிலைமையை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். “ எனக்கூறுகிறார் இந்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்படும் ஸ்ரீகுமார் என்ற அக்குபஞ்சர் நிபுணர்.

மேலும் அவர் கூறுகையில்,” ஜப்பான் போன்ற நாடுகளை பாருங்கள். அங்கே அக்குபஞ்சருக்கு என முறையான கல்வியும் அதற்கு ஏற்ற பாடத்திட்டமும் உள்ளது. அவர்களது கல்வி முடிந்ததும், இரண்டு ஆண்டுகள் சீனியர் அக்குபஞ்சர் நிபுணர்களிடம் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகே அவர்களுக்கு தனியாக மருத்துவம் செய்வதற்கான  உரிமத்தினை அரசு வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. யார் வேண்டுமானாலும் அக்குபஞ்சர் கிளினிக்கை தொடங்கவோ அதற்கான பயிற்சி நிறுவனத்தையோ துவங்க முடியும்.” என்றார் அவர்.

மேலும், அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு உரிமம் வழங்க எந்தவித அதிகாரப்பூர்வ அமைப்பும் இந்தியாவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு கூறினார்.

“அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிப்பவருக்கு ஊசிகளை ஒரு நபரின் உடலில் குத்துவதற்கும், எந்த இடத்தில் குத்தினால் சரியான விளைவை ஏற்படுத்தும் என்பதனை அறிய  உடற்கூறு குறித்தும் உடலமைப்பை பற்றியும் போதிய அறிவு வேண்டும்.” என்றார்.

இருப்பினும், திருப்பூரில் டீன் ஏஜ் வாலிபர் மரணத்துக்கு அக்குபஞ்சர் மூலம் சிகிச்சையளிப்பவர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஸ்ரீகுமார் மறுத்தார். அந்த வாலிபருக்கு சிகிச்சையளித்தவர் அக்கு தொடு சிகிச்சை முறையை பின்பற்றுபவர் மாறாக அக்கு பஞ்சர் சிகிச்சை அளிப்பவர் அல்லர் என கூறினார் அவர்.

இதனிடையே, இந்த கூட்டமைப்பினர், அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர்களை முறைப்படுத்த குழு அமைக்க கேட்டு ஆயுஷ் அமைச்சகத்துக்கும், சுகாதார அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.