அண்ணா நகரில் சேரி மக்களின் வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்

65 % வாக்காளர்கள் சேரிகளில் வசிப்பவர்களாகவோ அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்களாகவோ இந்த தொகுதியில் உள்ளனர்.
அண்ணா நகரில் சேரி  மக்களின் வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்
அண்ணா நகரில் சேரி மக்களின் வாக்குகளை குறிவைக்கும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்
Written by:

நீங்கள் அண்ணா நகர் செல்வதற்காக, அண்ணா வளைவு வழியாக உள்ளே சென்று, அடுத்து வரும் அறிஞர் அண்ணா மருத்துவமனையும் கடந்து சென்றால், குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியை நீங்கள் காணலாம். அதனை தொடர்ந்து வரும் குறுகலான சந்து எம்.எம்.காலனியை நோக்கி செல்கிறது. அங்கு பெண்கள் தள்ளுவண்டி கடையில், அந்த கடைக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஆண்களுக்காக மும்முரமாக சூடான தோசைகளை போட்டு கொண்டிருந்தனர்.

பெரிய பங்களாக்களையும், உயர்தர கடைகளையும் தூய்மையாகவும் , சீராகவும் வைத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இந்த சந்தில் உள்ள சிறு,சிறு வீடுகளில் வசித்து வருகின்றனர். அண்ணா நகரில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில், இத்தகைய குறைந்த வருமானம்மிக்க  குடிசைவாசிகளின் வாக்குகளை பெறுவதில் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

“ஒவ்வொருவரும் அண்ணா நகர் உயர்குடி மக்கள் வசிக்கும் பகுதி என நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு அல்ல.” என்கிறார் மாநில கைத்தறி அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கோகுல இந்திரா. “சுமார் 65 % வாக்காளர்கள் சேரிகளில் வசிப்பவர்களாகவோ அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்களாகவோ இந்த தொகுதியில் உள்ளனர். 15 % பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் தான் வசதிபடைத்த மேட்டுக்குடி மக்கள். அதனால் தான் நான் சேரி பகுதிகளை நோக்கியும், குடிசைவாசிகளிடமும் கவனத்தை செலுத்துகிறேன்.” என்கிறார் கோகுல இந்திரா.

என்னிடம் பேசுவதற்கு சில நிமிடங்கள் முன்பு கோகுல இந்திரா, எம்.எம்.காலனியில் உள்ள சிறிய சர்ச் ஒன்றிற்கு சென்றிருந்தார். அதிமுக ராஜ்யசபா எம்.பி விஜிலா சத்யானந்த் புடை சூழ கோகுல இந்திரா அந்த சர்ச்சின் முன்பாகத்தில், தனது கையை உயர்த்தி, கண்களை மூடியபடி நின்று கொண்டிருந்தார். அவருக்காக தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்ட அந்த சர்ச்சின் பாதிரியார், “கடவுள் இயேசுவின் ஆசீர்வாதத்தால், அதிமுக இங்கு மட்டுமல்லாது, டெல்லியிலும் அதிகாரத்திற்கு வரும்.” என்று உரத்த குரலில் கூறினார். சென்னை வெள்ளபெருக்கு குறித்து, உடனடியாக களமிறங்க தவறியது ஏன் என்ற கேள்விகளுக்கு கோகுல இந்திரா எந்த பதிலும் கூறாமல் நகர்ந்தார். அவரது கவனம் முழுமையும், சேரி மக்களின் கோபத்தை தணிப்பதிலேயே இருந்தது.

அண்ணா நகரில் சுமார் 13 சேரிபகுதிகள் அமைந்துள்ளன. 7 வார்டுகள் உள்ள இந்த தொகுதியில் 3 வார்டுகளில் மட்டுமே வசதிபடைத்த பணக்காரர்கள் வசித்து வருகின்றனர். ஏழைகள் வாழும் வார்டுகளில் மக்கள் தொகை அதிகம் என்பதோடு மட்டுமல்லாமல், இங்குள்ள வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் மொத்தமாக வாக்களிப்பவர்கள்.

கூவம் ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள், ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்களோ தங்கள் மறுவாழ்வுக்காக போராடி வருகின்றனர். ஆற்றின் அருகில் இருக்கும் குடிசைகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போது, அது ஒரு சூடான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. “ இந்த பகுதியில் 60-70 வருடங்களாக வசித்து வரும் மக்கள் தொடர்ந்து தங்குவதற்கு இங்கே அனுமதிக்கப்படும் என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். சமீபத்தில், குடியேறிய ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமே இவ்விடத்தை விட்டு அகற்றப்படுவர்.” என கோகுல இந்திரா கூறினார்.

வெள்ளபெருக்கில் எதையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு வேகமாக மறுத்து பேசினார்.” வெள்ளபெருக்கு வந்த அந்த நேரத்தில் மட்டும் தான் எங்களால் எதுவுமே செய்ய முடியாமல் போனது. அந்த நேரம் எவராலும் எதையுமே செய்ய முடியாது. வெள்ளபெருக்குக்கு பின் நாங்கள் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளோம்.” என்றார் அவர்.

“ சரியாக நானும் அதை தான் குறிப்பிடுகிறேன்.” என பதிலடி கொடுக்கிறார் திமுக வேட்பாளர் மோகன். “ மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போது அவர் எங்கே போனார் ? மக்கள் இறந்த பின் தான் அவர் வந்தார். எனது சொந்த செலவில் 26000 பாக்கெட் பாலை இந்த பகுதி மக்களுக்கு விநியோகித்தோம்.” என்றார் மோகன்.

முன்னாள் அண்ணா நகர் கவுன்சிலரான மோகன்,  முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தந்தை கோதண்டபாணி நாயுடு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து இதே பகுதியிலிருந்து இரண்டு முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர். அவரது குடும்பம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வருவதால் இந்த தொகுதியையும், மக்களை குறித்தும் நன்கு அறிந்தவர். அவரது குடும்பம் வலுவான பொருளாதார பின்னணியுடையது. 170 கோடிக்கும் மேல் சொத்துக்கள் வைத்துள்ளார் அவர். அண்ணா நகரை சேர்ந்த தெலுங்கு மக்களின் வாக்குகளையும் பெரிய அளவில் பெற்று விடலாம் என அவர் எதிர்பார்க்கிறார். வலுவான தெலுங்கு பின்னணியை கொண்டவர் என்ற அடிப்படையையும் , வெள்ளபெருக்கத்தையொட்டி எழுந்துள்ள கோபத்தையும், தான் வாக்குகளாக அறுவடை செய்து வெற்றி பெற முடியும் என கணக்கு போடுகிறார்.

நகர பகுதியில் அமைந்திருக்கும் தொகுதியாக இருப்பதால், மக்கள் பொருளாதார நெருக்கடியை உணர்கிறார்கள். “ எங்கள் கையில் ஒரு பணமும் இல்லை. வந்த வேகத்தில் அது செலவழிந்து போய் விடுகிறது” என்கிறார் முத்தம்மா. இவர் தோசை உணவு வியாபாரம் செய்து வருகிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், “ குறைந்த விலையில் இட்லி தோசை என கொடுத்தால், எங்கள் வியாபாரம் என்னாவது ? “ என அம்மா உணவகத்தின் வியாபாரத்தை குறிப்பிட்டு கூறினார்.

திமுகவின் பிரச்சாரத்தை, எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் தான் முன்னின்று நடத்தி வருகிறார். இளைஞரான கார்த்திக் வியாபாரம் செய்து வருகிறார். சென்னையின் வசதிபடைத்த மக்களுக்கே உரித்தான நடையில் பேசுகிறார். “ ஆனால் இந்த பகுதிகளில் பிரச்சாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல. நானும் எனது சகோதரியும் எனது தந்தைக்கு வாக்குகள் கேட்டு சென்ற போது, அவர்கள் எங்களை பின்னர் வரசொல்லி அனுப்பிவிட்டனர்.”  என கூறுகிறார் அவர். இருப்பினும் தனது கையில் நோட்டீசுகளை கொண்டு வாக்குகளை கேட்டு அலைகிறார்.

“எனக்கு எந்த வேட்பாளர்களை பற்றியும் தெரியாது. ஆனால் ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை நான் விரும்பவில்லை” என்கிறார் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வினீத் பலராமன். தொடர்ந்து அவர் கூறுகையில், “ கடந்த 4 வருடங்களாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஒட்டுமொத்த நகரமே ஸ்தம்பித்து போயிருந்தது. ஆனால் திமுக வந்தால், சிறப்பாக செயல்படுமா என எனக்கு தெரியாது. எனது வாக்கு, ஜெ.வை மீண்டும் அதிகாரத்தில் கொண்டு வரும் வகையில் இருக்காது.” என்றார் அவர்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com