திருச்செங்கோட்டு கோயிலில், கவுண்டர் ஜாதி பெண் ஒருவருடன் பேசியதற்காக, 21 வயது கோகுல்ராஜ் கொல்லப்பட்டதன் முக்கிய குற்றவாளியாக யுவராஜ் கருதப்படுகிறார்.

Tamil Tuesday, May 31, 2016 - 21:10

ஆறு  மாத சிறைவாசத்திற்கு பின் தலித் வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் யுவராஜ் வேலூர் மத்திய சிறையிலிருந்து செவ்வாய்கிழமையன்று வெளியேறினார்.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீனை கடந்த வாரம் அளித்திருந்தது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவராக இருக்கும் இவருக்கு சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரது ஆதரவாளர்கள், மாலையிட்டு வரவேற்பினை அளித்தனர்.

கைகளை அசைத்தபடி, சிரித்த முகத்துடன் வெளியே வந்த யுவராஜுக்கு, பட்டாசுகள் வெடித்தும், கோஷங்களை முழக்கியும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

 

 

இதனை தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய யுவராஜ், “ இந்த வழக்கு, கொலை இல்லை, தற்கொலை தான் என நிரூபிக்க என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களுக்கும் பொதுவான கோயிலாக நீதிமன்றம் உள்ளது. அனைவருக்கும் பொதுவான கடவுள் நீதிபதி. எனக்கு அவங்க மேல நம்பிக்கை இருக்கு. அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தின் மூலமா நான் வெளிக்கொண்டு வருவேன். அப்போது, தற்கொலை தான் என நிரூபிக்கப்படும். அதே போல விஷ்ணு பிரியாவின் மரணம் நிர்பந்த கொலை தான். திட்டமிட்ட நிர்பந்த கொலை. இப்போதும் சொல்கிறேன். அவங்க ரெண்டு பேரும் கட்டாயமாக நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கபடுவார்கள். “ என கூறினார்.

திருச்செங்கோட்டு கோயிலில், கவுண்டர் ஜாதி பெண் ஒருவருடன் பேசியதற்காக, 21 வயது கோகுல்ராஜ் கொல்லப்பட்டதன் முக்கிய குற்றவாளியாக யுவராஜ் கருதப்படுகிறார். கோகுல்ராஜின் உடல், ஈரோடு அருகே ஒரு ரயில்வே தண்டவாளத்தில் வைத்து கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து யுவராஜ் தலைமறைவிலிருக்கும் போதே இந்த வழக்கை விசாரித்து கொண்டிருந்த டிஎஸ்பி விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களால் இத்தகைய அதீத முடிவை எடுப்பதாக அவர் கூறியிருந்தாலும், அவரது மரணத்தின் பின்னணியில் பல திரைமறைவு வேலைகள் நடந்திருப்பதாக, யுவராஜ் தலைமறைவாகியிருக்கும் போதே வெளியிட்ட ஆடியோவில் கூறியுள்ளார்.

கடைசியாக, யுவராஜ் சிஐடி போலீசார்  முன், நாமக்கல்லில்  கடந்த அக்டோபர் மாதம் சரணடைந்த போதும், அவரது ஆதரவாளர்கள் இதே போன்றதொரு வரவேற்பை அவருக்கு அளித்தனர். சரணடைவதற்கு 3 போலீஸ் தனிப்படைகள் அவரை கைது செய்வதற்காக தேடியும், அவர்களிடம் சிக்காமல் தலைமறைவாக அவர் இருந்து வந்தார்.

யுவராஜுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கோகுல்ராஜின் அம்மா, நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், “ அவர்கள் எனது மகனை கொன்ற குற்றவாளியை சுதந்திரமாக விட்டுள்ளனர். அதிகாரமும், பண பலத்தையும் காட்டி எல்லாவற்றையும் நடத்துகின்றனர். இது தான் உயிருக்கு இருக்கும் மதிப்பா  ? உயிரை விட ஜாதி பெரியதா ? “ என கேட்டார் அவர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.