இரண்டு நாட்களில் முதல்வரை தேர்வு செய்யாவிட்டால், காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுனரை கோர போவதாக அறிவிப்பு

Tamil Saturday, May 28, 2016 - 13:26

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியோ இன்னும் முதல்வர் யார் என முடிவெடுக்காமல் குழப்பத்திலேயே உள்ளது.

இதற்கிடையே அதிமுக எம்.எல்.ஏவான அன்பழகன், விரைவில் முதல்வரை தேர்வு செய்யாவிட்டால்,புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காங்கிரஸ் கட்சி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில் “ இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் அம்மாவின் (ஜெயலலதாவின்) அனுமதியை பெற்று, காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க கேட்டு துணை நிலை ஆளுநரிடம் முறையிடுவேன் “ என கூறியுள்ளார்.

இதனிடையே, முதல்வரை தேர்வு செய்வதற்கு தாமதம் ஏற்படுவதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான நாராயணசாமி முதலமைச்சர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது தான் என கூறப்படுகிறது. இது கட்சியில் தீர்மானம் எடுப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 15 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் வெறும் 5 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நாராயணசாமியை ஆதரிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“நாராயணசாமி தேர்தலில் கூட போட்டியிடவில்லை. மக்கள் அவரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கவும் இல்லை. அவர், டெல்லி தலைமையின் உதவியுடன் முதலமைச்சராகுவதற்கு முயற்சி செய்கிறார்.” என கூறுகிறார் அன்பழகன்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். வைத்தியலிங்கம் இருமுறை முதலமைச்சர் பதவி வகித்தவர். நமச்சிவாயமோ, வன்னியர் ஜாதியை சேர்ந்தவர். புதுவையில் மொத்த மக்கள் தொகையில், வன்னியர்கள் 30% பேர் உள்ளனர்.

அன்பழகன் மேலும் கூறுகையில்  “காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சிப் பிரச்சினைகள், அக்கட்சிக்கு வெளியில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அளிப்பதாக இல்லை. ஒட்டுமொத்த புதுச்சேரியின் நலனையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது அவர்கள், அரசு நிர்வாகம் சரியாக செயல்படாமல் செய்துவருகின்றனர்” என கூறினார்.

மேலும், அக்கட்சி கூறிய போலியான வாக்குறுதிகளை மக்கள் நம்பினர். எனவே தான் அவர்கள் தேர்தலில் வெல்ல முடிந்தது. “ இப்போது அந்த கட்சி தங்களுக்குள் பிரச்சினையை வைத்து கொண்டுள்ளனர். அதனால் தான் அவர்களால் அரசமைக்க முடியவில்லை” என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய நடவடிக்கை, தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாளாக்குவதற்கு சமம் என கூறிய அவர், “ தேர்தல் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நேரத்தில் தான் நடந்தது. ஆனால் சிறிய பகுதியான புதுச்சேரியில் இன்னும் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்று, எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுவிட்டனர்.” என கூறினார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.