15 நாட்களுக்கு முன்னர் கூட கௌசல்யாவின் வீட்டினர் வந்து மிரட்டி சென்றதாக சங்கரின் உறவினர் கூறுகிறார்

news Monday, March 14, 2016 - 09:27

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட 21 வயது வாலிபர் நடுரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஞாயிறு அன்று மதியத்திற்கு பின் நடந்த சம்பவத்தில் அவரது மனைவியும் படுகாயத்துடன் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உடுமலைபேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரும் பழனியை சேர்ந்த 19 வயது கௌசல்யாவும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் சங்கர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். கௌசல்யா உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி கம்பியுட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், அதுவும் கௌசல்யா உயர் ஜாதியை சேர்ந்தவர் ஆனதால் அவரது பெற்றோர் இந்த காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் இருவரும் உடுமலைபேட்டையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளனர். அப்போது மூன்று பேர் அடங்கிய கும்பல் ஒன்று பைக்கில் வந்துள்ளது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் தம்பதிகள் இருவரையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளது. இந்த காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த கும்பல் ஒரு பைக்கில் ஏறி தப்பியோடியள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கர் பலியானார்.

சங்கர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு கூலி தொழிலாளி.

இச்சம்பவம் குறித்து சங்கரின் ஒன்றுவிட்ட சகோதரர் கணேசன் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில் “ நாங்கள் பள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள். தேவேந்திர குல வெள்ளாளர் என அறியப்படுபவர்கள். அந்த பெண் உயர்சாதியை சேர்ந்தவர். இந்த திருமணத்திற்கு ஆரம்பம் முதலே அவரின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கூட வந்து மிரட்டி சென்றனர். ஆனாலும் அந்த பெண் போகவில்லை. இந்த ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தான் அவர்கள் கொலை செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறோம்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “ சங்கரின் அப்பா மிகவும் ஏழ்மையானவர். அவரிடம் கொஞ்சமும் பணம் இல்லை. கடன் வாங்கித்தான் கோயம்பத்தூருக்கு வந்துள்ளார்” என்றார்,.

போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.