சனிக்கிழமையன்று குடும்ப நல நீதிமன்றம், அவரது மகனை அவருடன் ஒப்படைக்க சொல்லி கணவர் வீட்டாருக்கு உத்தரவிட்டது.

Tamil Wednesday, April 13, 2016 - 11:28

தனது மகனை, தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என  12 வயது சிறுவனின் தாய் தொடுத்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பின்னரும், கணவர் வீட்டார் ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.

சென்னை, வானகரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள், 39 வயதான இவருக்கு புரசைவாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடன் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

கடந்த 2009 இல் பேச்சியம்மாளின் கணவர் குடும்பத்தினர், அவருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுத்ததை தொடர்ந்து, பேச்சியம்மாள் வானகரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து, தனது மகனை தன்னுடன் சேர்த்து வைக்க கேட்டு, பேச்சியம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேச்சியம்மாள் கூறுகையில், “ நான் எனது குழந்தையுடன் நெருங்குவதற்கு கூட எனது கணவரின் குடும்பத்தினர் அனுமதித்தது கிடையாது. நான்,அவனுக்கு உணவு கொடுப்பதையோ அல்லது அவனை பள்ளிக்கு கொண்டு செல்வதையும் கூட செய்ய  விடாமல் என்னை அவர்கள் தடுத்தனர். எனது குழந்தையை தமிழில் பேசாதே, ஆங்கிலத்தில் பேசு என்றெல்லாம் நிர்பந்திக்கிறார்கள். “ என கூறினார்.

கணவருடன் தங்கி இருந்த போது, அவரது குடும்பத்தினர் பேச்சியம்மாளை கடுமையாக தாக்கியதாகவும், ஒரு அறையில் அவரை அடைத்து வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டுகிறார் பேச்சியம்மாள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் அவர்கள் “ நீ வீட்டை விட்டு போய்விட வேண்டும் “ என கூறியதாகவும் கூறினார்.

அதே நேரம், தனது கணவர், இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு மௌனமாக இருந்து வந்தார் என்றும் பேச்சியம்மாள் கூறுகிறார். “ அவரது சகோதரிகளும், அம்மாவும் என்னை அடிப்பதை பார்த்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை தடுக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்” என கூறினார் அவர்.

தனது கணவரின் சகோதரிகளான ரமிலா தேவியும், வசந்தகுமாரியும் தான், தன்னை அதிகம் தொந்தரவு செய்ததாக பேச்சியம்மாள் கூறினார்.

இத்தகைய துன்புறுத்தல்களை தொடர்ந்து, தனது வீட்டிற்கு சென்ற பேச்சியம்மாள் தனது மகனை தன்னிடம் சேர்க்க வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2010 இல் எழும்பூர் மஜிஸ்திரேட், இதனை விசாரித்து பேச்சியம்மாளுக்கு கணவர் வீட்டில் தங்குவதற்கான உரிமையையும், அவரது மகன் விஜய் ஆகாஷை அவரது கஸ்டடியில் வைத்து பராமரிப்பதை உறுதிப்படுத்தவும், அதற்கு தேவையான நிதியுதவியை அளிக்கவும் கணவருக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டார்.

“ இந்த உத்தரவை கொண்டு, நான் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றேன். அவர்கள் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக சொன்னார்கள். நான் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் போது, அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீலுக்கு சென்றிருந்தார்கள்.” என்றார்.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியன்று பேச்சியம்மாளின் கணவர் ராஜேந்திரன் இறந்த தகவல் பேச்சியம்மாளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. “ எனது கணவர் எப்படி இறந்தார் என்பது கூட எனக்கு தெரியாது. நான் அங்கு சென்ற போது, அவரது உடலை பார்க்கவோ அல்லது இறுதி சடங்கை செய்வதற்கோ என்னை அனுமதிக்கவில்லை.” என கூறினார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று குடும்ப நல நீதிமன்றம் பேச்சியம்மாளுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. அதில், தனது குழந்தையை பராமரிக்க, தாயாருக்கே உரிமையுள்ளது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது குழந்தையை அவரிடம் அனுப்பி வைக்க, பேச்சியம்மாளின் கணவர் குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர். போலீசாரிடம் இதுபற்றி கேட்டால், குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அது முடிந்த பின், குழந்தை யாரிடம் செல்ல விரும்புகிறதோ, அவர்களிடம் ஒப்படைப்போம் என கூறுகின்றனர்.

ஆனால், கணவர் குடும்பத்தினரின் வழக்கறிஞரோ, பேச்சியம்மாளின் கணவர் இறந்ததையொட்டி, அந்த வழக்கில் சனிக்கிழமையன்று ஆஜராக முடியாமல் போனது. இந்நிலையில் அதே நாள் இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது.எனவே இந்த தீர்ப்பினை ஏற்கமுடியாது என கூறியுள்ளார்.

இரு நீதிமன்றங்கள், பேச்சியம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய பின்னரும், அவற்றை நடைமுறைபடுத்த கேட்டு, பேச்சியம்மாள் முடிவில்லாமல் போராடி கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.