கல்வியில் முதலிடம், பலமொழி புலமை என திறமைகளுடன் வலம் வந்த ஜெ.வின் ஆரம்ப கால பருவம்
கல்வியில் முதலிடம், பலமொழி புலமை என திறமைகளுடன் வலம் வந்த ஜெ.வின் ஆரம்ப கால பருவம்

கல்வியில் முதலிடம், பலமொழி புலமை என திறமைகளுடன் வலம் வந்த ஜெ.வின் ஆரம்ப கால பருவம்

நடிப்புடன் நாட்டிய மங்கையாக வலம் வந்த ஜெ. ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர் எனக் கூறுகின்றனர் அவரது வகுப்பு தோழர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு சிறந்த நடன மங்கையாகவும், பேரார்வமிக்க வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். தனது லட்சியம் எதுவாக இருப்பினும், ஒரு நடிகையின் மகளாக பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த இவர் திரைப்படத்துறையில் தனது தடத்தை பதிக்க துவங்கினார்.

 பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயில துவங்கிய அவர், பின்னர் சென்னையில் பிரபலமான சர்ச் பார்க்கில் உள்ள திருஇருதய மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கியதுடன், அதில் உயர் தரத்தையும் அடைந்தார்.

“அவர் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டாலும், பல வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு தெரிந்த , வகுப்பில் முதலிடம் பெற்ற அந்த பெண் தான் இவர் என்பதை நம்பமுடியவில்லை. நாவலாசிரியர் அலிஸ்டைர் மெக்லீனையும், இந்தி திரையுலகத்தையும் கூடவே படம் வரைதலையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.” என டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு சென்னை திருஇருதய சர்ச்பார்க் காண்வென்டில்  தன்னுடன் படித்த வகுப்புத் தோழியான ஜெயலலிதாவைப் பற்றி இந்த வருடத்தின் துவக்கத்தில் ஸ்ரீமதி கூறினார்.

அக்காலத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்ததாகவும், அங்கிருந்து அவரது நண்பர்கள் புத்தகங்கள் கடன் வாங்கி படித்ததாகவும் ஸ்ரீமதி கூறுகிறார்.

பள்ளிப்படிப்பில்  ஜெயலலிதா சிறந்து விளங்கியதால், தொடர்ந்து படிக்க அவருக்கு அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. 10 ஆம் வகுப்பில் மாநில அளவில்  முதலிடம் பெற்ற அவர், தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

“அவரது வீட்டில் அவருக்கென ஒரு அறை இருந்தது. அந்த அறையில் இருந்த அலமாரியில்  பலவகைப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. எங்களில் இந்தி தெரிந்தவர் அவர் ஒருவர் மட்டும் தான். எனவே அவர் எங்களை சினிமாவிற்கு அழைத்துச் சென்று அதில் வரும் உரையாடல்களை எங்களுக்கு மொழிபெயர்த்து கூறுவார்.” எனக் தொடர்ந்து கூறுகிறார் ஸ்ரீமதி. ஜெயலலிதாவிற்கு படம் வரைதலில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தான் வரைந்த படங்களை ஓய்வு நேரங்களில் தனது வகுப்பு தோழிகளிடம்  காட்டி மகிழ்வார்.

ஸ்ரீமதியும், ஜெயலலிதாவும் 5 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே நண்பர்கள். ஸ்ரீமதியின்  தந்தை ‘ஸ்டில்ஸ்’ சாரி என அழைக்கப்பட்ட ஒரு திரைப்பட புகைப்பட கலைஞராக இருந்தார்.  அவர் ராதா சில்க் எம்போரியத்திற்காக ஒரு  மாதிரி புகைப்படம் ஒன்றை ஜெயலலிதாவை வைத்து எடுத்தார். இந்த நிகழ்வு தான், அவர் விளம்பரம் மற்றும் சினிமாத்துறைகளில் நுழைவதற்கு காரணமாக அமைந்தது.  அந்த மாதிரி படத்தையே ஜெயலலிதா, அவருடன் இணைந்து நடித்தவரும், அரசியல் தலைவருமாக விளங்கிய எம்.ஜி ராமச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும்  கொடுத்தார்.

ஒரு இளம் மாணவியாக ஜெயலலிதாவின் கனவானது திரைத்துறையை நோக்கிய திசையில் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்தது. அவர் 10 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் தொடர்ந்து படித்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் அவரது அம்மாவின் வற்புறுத்தலை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவே, தனது சிவில் சர்வீஸ் கனவை கைவிட்டார்.

ஜெயலலிதா திரைத்துறையில் நுழைந்த போது, அவரது கல்வித் தகுதியை அறிந்த அவருக்கு நெருக்கமான பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சட்டம் படிக்க ஜெயலலிதா இணைந்தார். ஆனால் அவரது அம்மா சந்தியா, குடும்ப பொருளாதார நிலையின் நெருக்கடி காரணமாக படிப்பை நிறுத்தி, திரைத்துறையிலேயே தொடர்ந்திருக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த துறையில் தயக்கமிருந்த போதும் கூட, ஜெயலலிதா இந்த துறையில் இயற்கையிலேயே திறமைமிக்கவராக இருந்தார் என்றே கூற வேண்டும். தனது முதல் பரத நாட்டியக் கல்வியை பெறும் போது அவருக்கு வெறும் 3 வயது தான் ஆகியிருந்தது. அந்த காலத்தில் சிறந்த நடனக் கலைஞரும், நடன இயக்குனருமாக இருந்த கே.ஜெ.சரசத்தின் பயிற்சியின் கீழ், ஜெயலலிதா ஒரு சிறந்த கலைஞராக வேகமாக வளர்ந்தார்.

தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அவரது நடன அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் உட்பட எண்ணற்ற திரையுலகினர் கலந்து கொண்டனர். அப்போது, சிவாஜி கணேசன் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிடம்  அவரது மகள் புகழ்பெற்ற நடிகையாக எதிர்காலத்தில் வரக்கூடும் என கணித்துக் கூறினார்.

ஜெயலலிதாவின் முதல் திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. ஆனால் அவர் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற சினிமா மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் அவருக்கு சூப்பர்ஸ்டார் அந்தஸ்தையும் தந்தது.

வகுப்பில் முதல் மாணவியாக இருந்த ஜெயலலிதா, தமிழ் திரையுலகில் கோலோச்சி பின்னர் அரசியலில் வெற்றிகரமான சாதனைகள் மேற்கொண்டு ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com