கேரளாவிலிருந்து 4 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மலையாள சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளை கிண்டலடித்து வருகின்றன.

Tamil Wednesday, July 13, 2016 - 19:14

கேரளாவில் 21 மலையாளிகள் மாயமானதன் பின்னணியில், அவர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருப்பார்களோ என மத்திய, மாநில அரசுகளின் உளவு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

ஆனால், மலையாள சமூக வலைத்தள உலகமோ இதனை கிண்டலடித்து மீம்ஸுகளை பேஸ்புக்கில் உலவவிட்டு வருகிறது.

மலையாளிகள் ஐ.எஸ்ஸில் சேர்ந்து ஒரு மாதம் கழிந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் (எம்), ஐ.எஸ்.ஐ.எஸ் (ஜெ), ஐ.எஸ்.ஐ.எஸ்(கே) என கோஷ்டிகள் உருவாகி தங்களுக்குள் சண்டை போட வேண்டிய நிலை வரும் என கிண்டலாக ஒரு மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

<அடுத்து ட்ரோல் மலையாளம் என்ற குழு சார்பில் வெளியிடப்பட்ட மீம்ஸில், ஐ.எஸ் தலைவன்  “நான் இங்க வெச்ச ஏவுகணைய யாராவது பார்த்தீங்களா ?”  என கேட்க   ஐ.எஸில் சேர்ந்த மலையாளி தீவிரவாதி காலை உணவை தயாரிக்க அந்த ஏவுகணையை எடுத்து புட்டு அவிப்பதை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

அது போன்றே ஐ.எஸின் பதுங்கு குழியில் திருவோண பண்டிகையை ஒட்டி அத்தப்பூ கோலம் போடப்பட்டிருப்பதை கண்டு திகைத்து ஐ.எஸ் தலைவன் நிற்பதை போன்று மற்றொரு மீம்ஸும் வெளியிடப்பட்டுள்ளது.

 

காணாமல் போன 21 பேரில் 4 பேர் பெண்கள். அவர்களையும் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.எஸில் சேர்ந்த பெண்கள் அதன் தலைவரை பார்த்து “ இரவு 7 மணியானால் எங்களுக்கு டி.வி சீரியல் பார்க்கணும். பிரச்சினை ஒண்ணுமில்லையே ! “ என கேட்பது போல் மலையாள சிரிப்பு நடிகர் ஜகதி நடித்த ஒரு காட்சியை வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது.

 


அது போன்று, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை குற்றம் சொன்னதற்காக சக மலையாளி ஐ.எஸ் தீவிரவாதியை போட்டுத் தள்ளியதாக கிண்டல் அடிக்கும் மீம்ஸும் வெளியிடப்பட்டுள்ளது.


கடைசியாக ஒரு மீம்ஸ், அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தகூடியது. இன்டர்னேஷனல் சளு யூனியன் என்ற மீம்ஸ் குழிவினரால் வெளியிடப்பட்ட அந்த மீம்ஸில் பிரபல நடிகர் திலகன் பத்திரிக்கை செய்தி வாசிப்பது போன்றும், அவர் வாசிக்கும் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி

“குண்டு வெடிப்பு நடத்தி தரலாம் என வாக்குறுதியளித்து ஐ.எஸ் தலைவனிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து மலையாளிகள் ஓட்டம் .”   என்ற செய்தி வடிவிலான மீம்சும் மலையாலிகளின் கிண்டல் கலந்து மீம்ஸில் இடம் பெற்றுள்ளது.

எது எப்படியோ. ஐ.எஸில் மலையாளிகள் இடம் பெற்றால், இத்தகைய சம்பவங்கள் நடந்து ஐ.எஸ் இயக்கமே சின்னாபின்னமாகும் என இயல்பான கிண்டல் தொனியில் தீவிரவாதிகளை கிண்டலடித்து இன்னும் பல மீம்ஸுகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.

 

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.