ஜீன்ஸ், ‘நாடகக் காதல்’ மற்றும் தமிழ்நாட்டின் மறைமுக சாதியப் போரின் தேர்தல் சீரழிவுகள்

மது ஒழிப்பும், இலவசங்களும் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இருக்கலாம். ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் மறைமுக யுக்தி உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அணிதிரட்டல்தான்.
ஜீன்ஸ், ‘நாடகக் காதல்’ மற்றும் தமிழ்நாட்டின் மறைமுக சாதியப் போரின் தேர்தல் சீரழிவுகள்
ஜீன்ஸ், ‘நாடகக் காதல்’ மற்றும் தமிழ்நாட்டின் மறைமுக சாதியப் போரின் தேர்தல் சீரழிவுகள்
Written by:

ரோஹினி மோகன்

தமிழில் : கவின் மலர்

This article was originally published in English on thewire.in

தர்மபுரி: வட தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமம். தாளமுடியாத வெப்பம் சுட்டெரிக்கும் ஏப்ரல் மாத மதிய நேரமொன்றில் திவ்யா தன் வீட்டின் வாயிற்கதவுக்கு அருகே தன் கண்களை அழுந்த தேய்த்துக்கொண்டே வருகிறார். வீட்டில் தொலைக்காட்சி அதிக இரைச்சலுடன் 90களின் தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சியின் உரையாடல்களைத் துப்பியபடி இருக்கிறது. அச்சப்தம் நான்கு அறைகள் கொண்ட அவ்வீட்டை நிரப்பிக்கொண்டிருக்கிறது. ”ஸாரி! நிறைய முறை அழைத்தீர்களா?” என்று கேட்கிறார். மங்கிய இளஞ்சிவப்பும் நீலமும் இணைந்த, பெரும்பாலான மத்தியத்தர பெண்களின் ஆடையான நைட்டியை அணிந்திருக்கிறார். மிகக் கச்சிதமாக வாரப்பட்டிருந்த தலையில் ஒரு முடி கூட கலையவில்லை. குட்டித் தூக்கம் கலைந்ததற்கான சாட்சியாக அவர் நெற்றியில் வைத்திருந்த பொட்டு மட்டும் சற்றே இடது நெற்றியின் மேற்புறத்திற்கு இடம் மாறியிருக்கிறது. கதவைத் திறக்குமுன், என்னைத் தாண்டி பார்வையால் தெருவை மிக வேகமாக ஆராய்ந்துவிட்டு “உங்களை யாரும் பார்க்கவில்லைதானே? தனியாக வந்தீர்களா?” என்று கேட்கிறார்.

தன் உறவினர்களின் ஒரு பகுதியினரிடமிருந்து, முடிவே இல்லாமல் துரத்திய ஊடகங்களிடமிருந்து, விவசாயக்குடிகளான வன்னிய சாதியைச் சேர்ந்த தன் சொந்த கிராமத்து மக்களிடமிருந்து விடுபட்டு ஒரு தனித்த வாழ்வை திவ்யா வாழத்தொடங்கி மூன்றாவது ஆண்டு நடக்கிறது. எனக்கு ஒரு சோடா வாங்கித் தரவேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் வீட்டை விட்டு அவரால் வெளியே செல்ல முடியாது.

“இங்குள்ளவர்கள் என்னை முறைப்பார்கள். அல்லது வசைபாடுவார்கள். அல்லது யாராவது என்னை புகைப்படம் எடுப்பார்கள்” எனும் 24 வயதாகும் திவ்யா “என் சகோதரன் கல்லூரியிலிருந்து திரும்பி வரும்வரை அறைக்குள்ளேயே நாள் முழுவதும் அமர்ந்து காத்திருக்கவேண்டும். அதன்பின் பணி முடிந்து வங்கியிலிருந்து என் தாய் வருவார்” என்கிறார்.

அவர் தொலைக்காட்சியை அணைக்கவில்லை. அதன் ஒலி அண்டைவீட்டுக்காரர்களிடமிருந்தும் “எண்ணங்களிலிருந்தும் ஞாபகங்களிலிருந்தும்” அவரைக் காக்கும் அரண் போல இருக்கிறது. கடந்து சென்ற நிழல்களைக் கண்டு மூன்று முறை உரையாடலின்போது பதட்டமானார்.

திவ்யாவை சமூகச் சிறைக்குள் தள்ளிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் நன்கறியப்பட்டவை: ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசித்த தலித் இளைஞன் இளவரசனை சாதி மீறி மணந்துகொண்டார் திவ்யா; இந்த ”புனிதங்கெட்ட திருமணத்திற்கு” எதிராக, பெரும்பாலும் வன்னியர்களைக் கொண்ட அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) திட்டமிட்ட ஆத்திரம், அவமானப்படுத்தப்பட்ட தந்தை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் தற்கொலை அதற்குப் பின் மூன்று தலித் கிராமங்களை வன்னியர் கும்பல் நவம்பர் 7, 2012 அன்று எரித்தது என எல்லாமும் நடந்தேறின. குற்றவுணர்வாலும், தந்தையை இழந்த துயரத்தாலும் சுழன்றடிக்கப்பட்ட திவ்யா மீண்டும் தாய்வீடு திரும்பியதை, இளவரசனை திவ்யா புறக்கணித்தார் என சாதிக்கும்பல் பெருமிதத்துடன் பிரகடனப்படுத்தியது. விஷயம் நீதிமன்றத்தில் இருக்க இளவரசனின் உடல் தண்டவாளத்தின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது, நீதிமன்றம் அம்மரணத்தை தற்கொலை என்றது. இளவரசனின் தாய் கிருஷ்ணவேணியோ அது கொலை என்கிறார்.

“என் மகன் வாழ விரும்பினான்” எனக் கூறுகிறார். “தற்கொலைக் கடிதம் கட்டாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்கிறார்.

திவ்யாவுக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. “இளாவின் உடலைக்கூட ஒரு முறை பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை” என்கிறார்.

இன்று 90க்கும் மேற்பட்ட வன்னியர்கள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தலித் மற்றும் வன்னியர் கிராமங்களில் ஒன்றாக வாழ்ந்துவந்த தன்மை மாறி, இன்று சரிசெய்யவே முடியாதபடி ஆகிவிட்டது. இதனால் இப்பகுதியில் புதிதாக நடக்கும் சாதி மீறி மணம் செய்துகொண்ட காதலர்கள் மறைவாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக வீடு வீடாக பரப்புரை செய்து மே 2014ல், ஒரு பேரணி நடந்தது. ஒரு காலத்தில் தர்மபுரி தொகுதியில் வாக்குகள் பெற போராடிய பாமக, வன்னியர்கள் அதிகம் வாழும் இந்நாடாளுமன்றத் தொகுதியை வென்றது. இங்கு வென்ற மத்திய சுகாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தான் தற்போது 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் கவர்ச்சிகரமான முதலவர் வேட்பாளர். இதே மாவட்டத்தின் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சாதியத் தொடர்புகள் பெற்றுத் தரும் வாக்குகள்

தமிழ்நாட்டு அரசியலில் சாதி முக்கியமாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் இப்போதைய வடிவில் இல்லை. தேர்தல்ரீதியாக, நேரடியாக சாதி பார்ப்பதற்கு கூச்சப்படுகின்றனர். பார்ப்பன மேலாதிக்கத்தையும் ஆரிய – இந்தி ஆதிக்கத்தையும் ஒழிக்க வந்த இயக்கம் தோன்றிய இடம் என்பதால், திராவிட அரசியலுக்கு பார்ப்பனரல்லாதோரின் ஒற்றுமை தேவையாய் இருந்தது. இட ஒதுக்கீடு கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நாட்டிலேயே அதிகளவாக 69% (தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெருமளவிலான பிற்படுத்தப்பட்ட சாதிகள்) என்று வரையறுக்கப்பட்டபோதுகூட, அது தமிழர் அடையாளம், திராவிட பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்ததே ஒழிய, சாதிய பெருமிதத்தை அடிப்படையாக்க் கொண்டிருக்கவில்லை. ”தொண்டர் பலம், கொள்கை, ஆளுமை மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றால்தான் வாக்குகளை வெல்ல முடிந்தது” என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ.அரசு. “அப்போதும் தலித்துகள் ஒடுக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேரடியான சாதிய மோதல் இப்போதுபோல சகஜமாக இருந்தது இல்லை. சாதியத்தை சாடுவது தேர்தல் முறையில் அப்போது வேலைக்காகவில்லை என்கிறார்.

கொள்கைகளின் படிப்படியான வீழ்ச்சி என ஆய்வாளர்கள் சொல்வது போலோ அல்லது அரசியல் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் சொல்வது போல “உள்ளார்ந்த தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியபோது” சாதி தலைகாட்டத் தொடங்கியது. ஆனாலும் திவ்யா-இளவரசன் வழக்கிற்கு முன்பு வரை சாதி காலூன்ற முடியவில்லை. அதன்பின்னரே ஆபத்தான போக்கான, வாக்குகளுக்காக, சாதியரீதியான அணிதிரட்டலை நிகழ்த்த முடிந்தது. 2014ல் சிறிய கட்சியான பாமகவுக்கு இந்த யுக்தி உதவியதால், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளும் இதைப் பின்பற்றின. வடக்கில் பாமகவும், மேற்கில் கவுண்டர் கட்சிகளும், 20% மக்கள்தொகையுள்ள தலித்துகளை மட்டம்தட்டி, இச்சாதிகளுக்கு தலித்துகள் மீதிருக்கும் ஒவ்வாமைக்கு தூபம் போடுகின்றன. இக்கட்சிகள் இட ஒதுக்கீடு, தொழிற்துறை மற்றும் விவசாய வளர்ச்சித்திட்டங்களில் பங்கு கேட்கின்றனா. ஆனால் தங்கள் ஆதரவைப் பெருக்க, தலித்துகளின் சாதிதாண்டிய உறவுகளை ‘லவ் ஜிகாத்’ என்று சித்தரிக்கின்றன.

இந்த வகையான பொறுப்பற்ற அரசியலுக்கு சாட்சிதான் திவ்யா தற்போது வாழும் வாழ்க்கை. “வேறென்ன செய்தேன்? ஒரு இளைஞனை காதலித்தேன். அவ்வளவுதானே? அது என்னவாகி இருக்கிறதென்று பாருங்கள்” என்கிறார் திவ்யா. இடது சாய்வுகொண்ட ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்ட கல்லூரிப்படிப்பு படித்த பெண்ணான திவ்யா இப்படியெல்லாம் ஆகும் என எதிர்ப்பார்த்திருக்கவில்லை. “இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், வெளியாட்களின் இடையீட்டால் பெரிதாக வெடித்துவிட்டது” என்கிறார். “யார் அவர்கள்? எங்கள் வாழ்க்கையையும் மரணத்தையும் ஏன் அவர்கள் முடிவு செய்யவேண்டும்?” எனக் கேட்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு நீடித்த கைமீறிப் போய்விட்ட விஷயங்களால் தான் மிகவும் நேசித்த இரண்டு ஆண்களையும், பணிபுரியும் வாய்ப்பையும், உயர்கல்விக்கான திட்ட்த்தையும் இழந்திருக்கிறார். எல்லாவற்றையும்விட அவர் இழந்திருக்கும் தனிமனித சுதந்திரம் குறித்து அவரால் பட்டியல் போட முடியும் என்றாலும் அவர் அதை புரிந்துகொள்ளவில்லை. தன் இளைய சகோதரன் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் திவ்யாவின் குரல் தணிகிறது, “நான் என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை  அவன் விரும்புவதில்லை. அவனுக்கும் சாதியக் காய்ச்சல் பிடித்துக்கொண்டது” என்கிறார்.

திவ்யா சாதி குறித்து ஒன்றும் அறியாமல் இல்லை. “எங்கள் சமூகத்தில் உள்ள வரையறைகளை அறிவேன். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை அவருடைய சாதிய அடையாளத்தால் மேல்நிலையில் இருப்பதாக அவர் கருதவில்லை. தமிழ்நாட்டில் சாதிய அரசியல் மையக்கருத்தாக ஆகியிருப்பதாலும் தலித்துகளின் வீடுகளும் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளாவதாலும், சமத்துவம் குறித்து இப்படியான இயல்பான புரிதல் இருக்கிறது.

 “கோடு தாண்டுதல்

திவ்யாவின் வீடு இருக்கும் செல்லங்கொட்டாயிலிருந்து சில அடிகள் தொலைவில் இருக்கிறது இளவரசனின் கிராமமான நத்தம் காலனி. 2012 கலவரத்தில் வன்னியர்களைக் கொண்ட வன்முறைக் கும்பலால் கொளுத்தப்பட்ட மூன்று தலித் கிராமங்களில் ஒன்று இது. பெரும் போராட்டத்திற்குப் பின் அஇஅதிமுக அரசிடமிருந்து கிடைத்த 2.78 லட்ச ரூபாய் இழப்பீட்டில் பெரும்பாலான வீடுகள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன. நான் அங்கு சென்றபோது சில ஆண்களைக் காணமுடிந்தது. பெங்களூருக்கு கட்டட நிர்மாணப் பணிகளுக்காக பலரும் தொலைதூரம் சென்றுவிட்டனர். சிலர் மதிய வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வீடுகளுக்குள்  உறங்கிக்கொண்டிருந்தனர். தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலித் வேட்பாளருக்காக பரப்புரை மேற்கொள்ள சென்றிருந்தனர் சிலர். பரப்புரைக்காக சென்றிருக்கும் எல்லோரும் விசிகவின் ஆதரவாளர்கள் அல்ல என்று ஒப்புக்கொள்ளும் மாதவன் (30) “இங்கே பல கட்சிகளுக்கு வாக்களிப்போரும் இருக்கிறார்கள். தலித் வேட்பாளர் தனித்து விடப்பட்டதாக இருக்கக்கூடாது என்பதற்காக அவருடன் சென்றிருக்கின்றனர்” என்கிறார்.

வறண்ட மாவட்டமான தர்மபுரியின் ஆதிக்க சாதி, வன்னியர் சாதியே. இவர்களைத் தொடர்ந்து ரெட்டிக்களும், தலித்துகளும் குறிப்பாக பறையர் மற்றும் அருந்ததியரும் இருக்கின்றனர். மாநிலத்தில் மிகக் குறைவாக நிலம் வைத்திருக்கும் சாதிகளின் ஒன்று வன்னியர் சாதி. பிற வேளாண் சாதிகளோடு ஒப்பிடுகையில் சிறிய அளவிலான நிலப்பகுதிகளையே (ஒன்று முதல் ஐந்து ஏக்கர்கள் வரை)  வன்னியர்கள் வைத்திருக்கிறார்கள். இப்பகுதியின் தலித்துகள் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் அவர்கள் நிலமற்றவர்கள். வன்னியர்களின் பண்ணை நிலங்களில் பரம்பரை பரம்பரையாக வேலை செய்பவர்கள். மரவல்லிக்கிழங்கு, சிறுதானியங்கள், மஞ்சள் மற்றும் மாம்பழம் ஆகியவை இந்நிலங்களில் விளைகின்றன. 80களில் தர்மபுரி, மாநிலத்தின் நக்சல் செயல்பாடுகளின் மையப்பகுதியாக விளங்கியது.

”நிலவுடைமை தவிர்த்து, இச்சாதிகள் பொருளாதாரத்தில் ஒன்றுபோலவே இருப்பவை. அத்துடன் வன்னியர்களும் தலித்துகளும் இணைந்து நிலச் சீர்திருத்தம் கோரி அரசுக்கெதிராக போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்” என்கிறார் கலவரங்களின்போது உண்மை அறியும் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்த அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ். 2002ல் மிகப்பெரிய காவல்துறை நடவடிக்கை மூலம் இப்பகுதியில் நக்சல்களின் இயக்கம் முற்றிலும் நின்றுபோனது. பெங்களூரில் பணியாற்றும் துரைராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் ஓய்வில் இருந்தார். “பொதுவாக இடதுசாரி உணர்வு இங்கு இருந்தது” என்கிறார். சாதியத்தின் பழைய கட்டுமானம் நிலைபெற்று இருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருப்பதுபோல சாதியப் பாகுபாடுகள் இங்கு அரிதாகவே இருந்தன. மிக அண்மைக்காலம் வரை, சாதி மீறிய திருமணங்கள் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தன. இளவரசனின் எதிர் வீட்டில் சின்னத்தம்பி, வன்னியரான தன் மனைவியுடன் வாழ்ந்துவருகிறார். இருவருக்கும் 80 வயதுக்கு மேல் ஆகிறது. “எங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட திருமணம் ஆகிவிட்டது. யாரும் ஒரு வார்த்தை சொன்னதில்லை” என்கிறார் அந்த மூத்தவர்.

சாதிமறுப்பு மணம் செய்துகொண்ட ஹரியும் கௌரியும் அதே கிராமத்தில் வசிக்கும் இளம் இணையர். வன்னிய சாதியைச் சேர்ந்த கௌரியின் பெற்றோர் இந்த உறவை ஆதரிக்கவில்லை. ஆகவே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். “கிராமங்களில் இது சகஜம். இதையெல்லாம் பெரிதாகப் பேசுவதில்லை. காதல்வயப்பட்டால் வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் உங்கள் குடும்பம் உங்களை கைகழுவிவிடும். ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு குழந்தை பிறந்தாலோ அல்லது வேறு ஏதாவது நிகழ்விலோ, அவர்கள் திரும்பி வருவார்கள். யாராவது சில வேலைவெட்டி இல்லாத உறவினர்கள் பிரச்சனை செய்வார்கள். அவ்வளவுதான” என்கிறார் கௌரி. ”மாநிலத்தின் வேறு சில பகுதிகளில் உங்களை அரிவாளோடு துரத்துவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை”  என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அவர்களுடைய அண்டை வீட்டுக்காரர். “ என்னுடைய வன்னிய சாதி நண்பர்கள் என் வீட்டில் உணவு சாப்பிடுவதோ அல்லது எங்களுடன் நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதோ முன்பு சகஜமாக இருந்தது” என்று நினைவுகூர்கிறார்.

அன்று மாலை, பாமகவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்காக குழுமியிருந்த வன்னிய சாதியினரும்கூட முன்பு தலித்துகளுடன் கிரிக்கெட் விளையாடி, உணவைப் பகிர்ந்து, நட்பு பாராட்டி, விழாக்களில் மகிழ்ந்திருந்ததை விவரிகின்றனர். “ஆனால் அவர்கள் தங்கள் எல்லையைத் தாண்டினர்” என்கிறார் 20 வயதாகும் நொச்சிக்கோட்டையைச் சேர்ந்த மாரியப்பன். ”அந்த இளைஞர்கள் எப்படி உடையணிகிறார்கள்? ஜீன்ஸ் பேண்ட், அதன் நிறம் எல்லாவற்றையும் பாருங்கள். எங்கள் பெண்களை மயக்கவே எல்லாம்” என்கிறார். நான் அவரும் ஜீன்ஸ் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டியபோது சுதாரித்துக்கொண்டார். “நாங்கள் எப்போதுமே இதை அணிந்துவந்திருக்கிறோம். ஆனால் இவர்கள் திடீரென்று கிடைத்த வசதியை பீற்றிக்கொள்கிறார்கள்” என்கிறார். உறுமும் சிங்கமும், குறுக்குவெட்டாக இருக்கும் இரு வாள்களும் கொண்ட லட்சினையால் அலங்கரிக்கப்பட்டு, ‘வன்னியகுல ஷத்ரியர்’ என்கிற சொற்களைக் கொண்ட மஞ்சள் நிற டீ-ஷர்ட் அணிந்திருக்கும் அவருடைய நண்பர் முருகன் உரையாடலில் இணைந்து, ”சாதி மறுப்பு திருமணங்கள் எல்லாம் எங்கள் சொத்துக்களை அபகரிக்க திருமாவளவன்(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்) செய்யும் யுக்தி” உறுதியாகக் கூறுகிறார். “நீங்களே சொல்லுங்கள், திட்டமிட்டு வேண்டுமென்றே எங்கள் பெண்களை அழைத்துச் சென்றால் நாங்கள் சும்மாவா இருப்போம்? எங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்வோம்” என்கிறார்.

ஒரு மூத்தவர் குறுக்கிட்டு முருகனின் கரங்களைத் தட்டிவிட்டு, “ஆனால் இதையெல்லாம் வைத்து அவர்கள் கிராமங்களை நாங்கள்தான் எரித்தோம் என்று அர்த்தம் அல்ல. அது வெளியாட்கள் யாரோ செய்தது. எங்களுக்குத் தெரியாது” என்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள், வாதங்கள் மற்றும் எதிர்வாதங்கள் எல்லாமே சில ஆண்டுகளுக்கு முந்தைய, 77 வயதாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் கூற்றுகளைப் போல்தான் இருக்கின்றன. 80களும் பிற்பகுதியில், மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் கீழ், வன்முறைப் போராட்டங்கள் மூலம் வன்னியர்களுக்கு 20%  பெற்றுத் தந்தவர். 1989ல் பாமகவை தன் சாதியினரின் மக்கள்தொகையை நம்பி  தொடங்கினார். தென் தமிழகத்தில் வேகமாக வளர்ந்துவரும் பட்டியல் சாதியினரான  தேவேந்திரர்களுடன் இணைந்து சாதியை அடிப்படையாக்க் கொண்ட கூட்டணியை உருவாக்க முயன்றார். ”பின் வட தமிழ்நாட்டில் விசிகவின் வளர்ச்சியை உணர்ந்து, தமிழ் தேசியத்தின் பெயரால் அக்கட்சியுடன் கைகோர்த்தார்” என்கிறார் தலித் வரலாற்று ஆய்வாளர் கார்த்திகேயன் தாமோதரன். வன்னியர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து தனி மாநிலம் உருவாகவேண்டும் என்று 2002ல் வைத்த ஒரு கோரிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டது. அதன்பின் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் 2004ல் சேர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை மத்தியிலும், ஒரு நாடாளுமன்ற மேலவை இடத்தையும் அன்புமணிக்காகப் பெற்றார். 2009ல் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தார். பின் மீண்டும் திமுகவோடும் விசிகவோடும் 2011ல் கூட்டணி.

“இந்த பத்தாண்டுகளில் விஜய்காந்தின் கட்சி வன்னியர் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. ஆகவே திமுக மற்றும் அதிமுகவுடன் பேரம் பேசும் தகுதியை பாமக இழந்தது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். “ஆகவே அவர் ஒரு பண்பாட்டுரீதியான, உணர்ச்சிவசப்படவைக்கும் பிரச்சனையைக் கையிலெடுத்து தன் சாதியினரை அணிதிரட்டத் தொடங்கினார்” என்கிறார்.

எஸ்.சி/எஸ்.டி சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி ராமதாஸ் அனைத்து இடைநிலை சாதிகளையும் அணிதிரட்ட முயன்றார். திவ்யா இளவரசனை அக்டோபர் 12, 2012ல் மணந்துகொண்டு நத்தம் காலனியில் அவரோடு வாழத் தொடங்கியதால் ஏற்கனவே சாதிய வெறுப்பு உருவாகத் தொடங்கியிருந்தது. ஒரு மாதம் கழித்து, திவ்யாவின் தந்தை அதிகமாகக் குடித்துவிட்டு வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டதைத் தொடர்ந்து வன்னிய இளைஞர்கள் 268 தலித் வீடுகளை கொள்ளையடித்து சூறையாடி எரித்தனர். இதன்பின், ராமதாஸ் சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக பரப்புரை செய்யவும் தொடங்கினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராமதாஸ் 14 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 27 பொதுக்கூட்டங்கள் நடத்தினார். இக்கூட்டங்கள் அனைத்தும் ‘தலித் அல்லாதோர் பேரவை’ என்று அவர் பெயர் சூட்டிக்கொண்ட இடைநிலை சாதிகளை ஒரு கூரையின் கீழ் அதிகாரபூர்வமாக்க் கொண்டு வரும் முயற்சிகளே. சாதி மீறிய திருமணங்களை தடை செய்யவேண்டுமென்று கோரினார். அத்துடன் எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தாதவாறு சில திருத்தங்கள் செய்யவேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டி-ஷர்டுகளும் கூலிங் கிளாஸும் அணிந்து பிற சாதிப் பெண்களை மயக்கி ‘நாடகக் காதலில்’ ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். தன் சொந்த கட்சியின் ரகசியமான கருத்துக்கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், முறிந்த திருமணங்களை சுட்டிக்காட்டிய அவர் அவையெல்லாம் காதல் அல்ல, வெறுமனே சாதியக் கட்டமைப்புக்கு வெளியேயான திருமணங்கள் என்றார். இதற்கிடையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாமகவின் இன்னொரு முக்கியத் தலைவர் காடுவெட்டி குரு வன்னியப் பெண்களைத் தொடும் எந்த ஆணின் கரங்களையும் வன்னிய ஆண்கள் வெட்ட வேண்டும் என்று பேசியதாக செய்திகள் வெளியாயின.

இன்று, சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் பாமகவுக்கு தன் பிம்பத்தை மாற்றுவது தேவையாய் இருக்கிறது. மிக இளைய முதல்வர் வேட்பாளராக எல்லோரையும்விட அதிகம் கல்வி கற்ற ஒருவரை முன்னிறுத்துகிறது. ஒபாமாவைப் போல லட்சினையும், மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி என்கிற முழக்கமும், பொருளாதார முன்னேற்றத்திற்கு துறைசார்ந்த தேர்தல் அறிக்கையும் என அன்புமணி ராமதாஸ் அடையாள அரசியலை பின்னுக்குத் தள்ள எத்தனிக்கிறார். இரண்டு நாட்கள் பரப்புரைக்குப் பின், அவருடைய தொகுதியான பென்னாகரம் தொகுதியில் சாதி குறித்த கேள்வியொன்றுக்கு குழப்பமாக பதிலளித்தார். “நாங்கள் சரியானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த சாதி பிம்பத்தை கடந்த காலமாக்கிவிட வேண்டும். நாங்கள் எல்லா சாதியினருக்கும் பணியாற்ற விரும்புகிறோம். எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் என்னுடைய ஆதரவாளர்களான இளைஞர்களிடம் நான் பேசுகிறேன். நாம் நவீனத்துவத்தையும் வளர்ச்சியையும் குறித்து யோசிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறேன்” என்றார்.

ஆனால் அன்புமணியின் பொதுக்கூட்ட மேடைக்கு அருகேயிருந்த கூட்டத்திலுள்ள வன்னிய இளைஞர்கள் தரும் சித்திரமோ வேறு மாதிரி இருக்கிறது. 2012ல் தலித்துகளின் குடியிருப்புகளை எரித்ததையோ அல்லது தலித்துகளை அச்சுறுத்தியதையோ எச்சரிக்கையாக மறுக்கிறார்கள். ஆனால் ராமதாஸ் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களான தலித்துகளின் ‘நாடகக் காதல்’ குறித்து வாய் ஓயாமல் பேசுகிறார்கள். இலவசங்களையும் ஊழல்மிக்க திராவிடக் கட்சிகளின் தலைவர்களையும் விமர்சிக்கும் மென்மையான பரப்புரைப் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, பாமக இளைஞர்கள் தலித்துகளுக்கு வேலை வாய்ப்புகளில் அரசு முன்னுரிமை அளிப்பதை குற்றஞ்சாட்டுகின்றனர். இருபத்தி நான்கு வயது எச். பிரபு, பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவர் வேலையின்றி இருப்பது ‘தலித்துகள் எங்கள் பணியிடங்களைப் பிடித்துக்கொள்வதால்தான்” என்கிறார்.

“அவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. அவர்கள் எல்லா வேலைகளுக்கும் சென்று செல்வந்தர்களாகி விட்டனர். அவர்கள் எங்கள் பெண்களை கவர்வார்கள், எங்கள் நிலங்களை அபகரிப்பார்கள், அடுத்து எங்கள் தலைகளையும்” என்கிறார்.

அன்புமணி ஆட்சிக்கு வந்தால் முதல் காரியமாக மது விலக்கை நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்தவுடன் குடிப்பதை நிறுத்திய அவர் அந்தக் கூட்டத்திற்கு வந்த இளைஞர்களில் குடிக்காத வெகுசிலரில் ஒருவர். கூட இருந்த இளைஞர்களும் வேலையின்மையையும், விவசாயம் சரியாய் செய்ய முடியாமல் போவதையும் (விவசாயத் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்டதால், இந்த விஷயத்தில் தலித்துகள்) சுட்டிக்காட்டுகின்றனர். மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அதிக அளவில் இருக்கும் வன்னியர்களே சிங்கம் போல இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல பாமக ஆதரவாளர்களும், மற்ற 108 சாதிகள் இருப்பதால் தாங்கள் ‘தம்மாத்தூண்டு’ இடத்தை மட்டுமே பிடித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கூடுதல் உற்சாகத்தில் அன்புமணி படித்த இளைஞர்களுக்காக ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தபோது, அவர்கள் மகிழ்ச்சியாக குதூகலித்தனர். ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் சதீஷ் குமார், “சாதிப் பெருமிதத்தைத் தூண்டிவிடும் கட்சிகள் பிற முக்கியப் பிரச்சனைகளையோ, சமூகங்களுக்குள் இருக்கும் சிக்கலான பிரச்சனைகளையோ அல்லது இளைஞர்கள் மத்தியில் இருக்கும் சுணக்கத்தையோ குறித்து எதுவும் அக்க்றை கொள்வதில்லை” என விவரிக்கிறார்.

இருத்தலுக்கான போராட்டம்

சென்னை எம்.ஐ.டி.எஸ் - ல் பணிபுரியும் பொருளாதார நிபுணர் எம்.விஜயபாஸ்கர், மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்துள்ளார். நெடுங்காலமாக சாதிய வன்முறைகள் நிகழ்ந்து வந்திருந்தாலும், இந்த வன்முறைகளை முன்னின்று நடத்தியவர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இன்றைக்கு வேறு மாதிரி இருக்கின்றனர் என்கிறார். “உயர் சாதிகள் அல்லது பின்தங்கிய சாதிகள் குறித்தோ பெரிதாக கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால் வன்னியர்கள், தேவர்கள் போல எண்ணிக்கையிலும் பகுதிரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தும் இடைநிலை சாதிகள் குறித்துதான் அதிகம் கவலைப்படவேண்டியிருக்கிறது” என்கிறார்.

பொருளாதாரரீதியாக, இந்தக் குழுக்கள் எல்லாம் தலித்துகளைவிட ஓரளவு மட்டுமே மேலாக இருக்கின்றன. வடக்கிலும் மேற்கிலும், தலித்துகளும் இடைநிலைச் சாதி இளைஞர்களும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். உயர்கல்வியில் 40% இளைஞர்கள் சேர்ந்து, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதலிடத்தில் வைத்திருக்கின்றனர். ஆனால் 90 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். இதில் 13.5% பேர் முதுகலை பட்டதாரிகள். “இன்று துறைகளில் உள்ள பணியிடங்கள் எல்லாமே தற்காலிக இடங்கள்தான். மேலும் அவை சாதாரணமானவையும் கூட. ஆகவே உண்மையில் ஸ்திரத் தன்மை இல்லை” என்கிறார் விஜயபாஸ்கர். “கிடைக்கும் வேலைகள் படிப்புக்காக செலவு செய்த தொகையோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதாக இருப்பதாக பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே, குறிப்பாக விவசாயத்தைவிட்டு வெளியேறியவர்களிடையே ஒரு எண்ணம் உருவாகிவருகிறது” என்கிறார்.

தீவிரமான விவசாயச் சிக்கலிலும் (மாநிலத்தின் ஜி.டி.பியில் விவசாயத்தின் பங்களிப்பு 7 சதவிகிதத்தைவிட குறைந்துவிட்ட்து) ஏற்றத்தாழ்வுடைய நிலவுடைமையிலும் (இன்று சராசரி என்பது 2 ஏக்கர்கள், இதில் 90% சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள்) சிக்கிச் சுழலும் தலித்துகளாகவும் பிற்படுத்தப்பட்டோராகவும் உள்ள விவசாய வர்க்கம் பெரும் சிக்கலில் உள்ளது. அதே சமயத்தில், உணவு விநியோகத்தை பரவலாக்குவது போன்ற அரசின் சில நலத்திட்டங்கள், குறைந்த அளவிலாவது கிராமப்புற வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இவையெல்லாம் கிரமப்புற சமூக உறவுகளில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்கிறார் விஜயபாஸ்கர். கடந்த இருபதாண்டுகளாக, தலித் சமூகத்தினர் சென்னை, திருப்பூர் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். “உணவு, ஊதியம் போன்றவற்றின் மூலம் நிலப்பிரபுத்துவ வர்க்கம் தலித்துகளின் மீது காட்டி வந்த பழைய கட்டுப்பாடுகள் அண்மைக்காலங்களில் மாறியிருக்கிறது” என்கிறார். ”தலித் கட்சிகளின் எழுச்சியும் ஆதிக்க சாதிகளுக்கு சவால்விடும் மனரீதியான ஆற்றலைத் தந்திருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழ்நாட்டின் தலித்துகளில் 92% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மேலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைவிட 24% குறைவாகவே தலித்துகளின் வருமானம் உள்ளது. இது நாட்டு சராசரி இடைவெளியை விட இரு மடங்கு அதிகம். ஆனால், தங்கள் பொதுத்துறை பணி வாய்ப்புகளை தலித்துகள் பறித்துக்கொள்வதாக பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் நம்புகின்றனர்.  ”நகரங்களில் உள்ள சற்று முன்னேறிய தலித்துகளாகவே அவர்கள் இருக்கக்கூடும். கிராமப்புறங்களில் பக்கத்தில் வாழும் தலித்துகள் அல்ல என்பதை அவர்கள் பார்ப்பதே இல்லை” என்கிறர் சமூக வரலாற்று ஆய்வாளர் வ.கீதா. சாதி பெரும்பான்மைவாதம் இந்தக் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.

நத்தம் காலனியில், மர நிழல்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட்த்தின் கீழ், மழைநீர் தேக்க, குளங்கள் வெட்டும் பணியில் இடையில் சிறு ஓய்வுக்காக அவர்கள் அமர்ந்திருக்கின்றனர். “அச்சம்பவம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்கிறார் 40 வயதாகும் மூக்கம்மா. “அதன்பின் அவர்கள் யாரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை” என்கிறார். “சில மாதங்களுக்கு முன்னால், மரவள்ளிக் கிழங்கு அறுவடைக்காக எங்களில் சிலரை அழைத்தனர். ஆனால் எங்களில் இருவர் அங்கு சென்றபோது அவர்கள் ‘இங்கே பார்! வேறு வழியில்லாமல் வேலைக்கு இங்கேதானே வரவேண்டியிருக்கிறது’ என்று கூறினர். நாங்கள் இனிமேலும் அவமானப்பட விரும்பவில்லை. அதனால் போவதை நிறுத்திகொண்டோம்” என்கிறார் இருபது வயது தரணி.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலைகளும் கூட இப்போதெல்லாம் சாதிரீதியாக பிரிக்கப்படுகின்றன. “அவர்கள் ஒரு வாரம் வேலை செய்வார்கள். அதன்பின் நாங்கள் ஒரு வாரம்” என்கிறார் தரணி. அவர்களைப் பொருத்தவரை, அச்சம் என்பது அன்றாட யதார்த்தம். “நாங்கள் ஏதாவது பேசிவிட்டால் எங்கள் வீடுகள் எரிக்கப்படும் என்று எப்போதும் பயப்படுகிறோம்” என்கிறார் சாந்தா. இவருடைய அண்டைவீட்டிலுள்ள இளைஞர் ஒரு வன்னிய சாதியைச் சேர்ந்த பெண் மீது காதல் கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு முன் மொத்த குடும்பமும் ஊரைவிட்டு தப்பியோட வேண்டி இருந்தது.

இதற்கிடையில், 2014 தேர்தலில் பாமக பெற்ற 4.4% வாக்குகள் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள மற்ற இடைநிலை சாதிகளுக்கு முன்மாதிரியாகிவிட்டன. வணிகத்தில் கொடிகட்டிப் பறப்பவர்களைக் கொண்ட பல கொங்கு வேளாள கவுண்டர் கட்சிகளும் மேற்கு தமிழ்நாட்டில், ராமதாஸின் சாதிய அணி திரட்டல் சூத்திரத்தை பின்பற்றி சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராகத் திரும்பின. ஆண்டுமுழுதும் மரத்திலிருந்து தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் பழம் போல சாதி மீறிய திருமணங்கள் சாதியவாதிகள் பறிக்க வசதியாக இருக்கின்றன.

பாஜகவுடன் தேர்தல் கூட்டு வைத்திருக்கும் கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் ஜி.கே. நாகராஜ், “சாதி என்பது நம் பரம்பரிய முறை. வசதியாக வாழ்ந்த எங்கள் பெண்கள் யாரையோ மணந்துகொண்டு குடிசைகளில் வாழ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்கிறார்.

இவருடைய கூற்றை நிரூபிப்பதுபோல, சாதியப் படிநிலை கொங்குநாட்டில் ஆழமாக இருக்கிறது. ஊதிப் பெரிதாக்கப்படும் பதட்டங்கள் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் போய் முடிகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சாதிய சதியுடனான துயரமான காதல் கதை இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் தலித் இளைஞன் சங்கர் கௌசல்யா என்கிற தேவர் பெண்ணை மணந்துகொண்டதற்காக வெட்டிக்கொல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 23 வயது தலித் இளைஞனான வி.கோகுல்ராஜ், கவுண்டர் பெண்ணான ஸ்வாதி மீது காதல்வயப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்

விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிற சாதிப் பெண்களை கவர்ந்திழுக்க தலித் இளைஞர்களை ஊக்குவிப்பதாக பாமக தன் மீது குற்றச்சாட்டு கூறியபின், “மைய நீரோட்டத்தில் உள்ள திராவிடக் கட்சிகளும் ஒரு தலித் வெறுப்பை செயல்படுத்துவதைக் காணமுடிகிறது.  குறைந்தபட்சம் மாவட்ட தலைமை அளவில்” என்கிறார். விசிக ஆறு கட்சிகள் கொண்ட மூன்றாவது அணியில் ஒரு கட்சியாக இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவை பிற கட்சிகள். “மையநீரோட்டக் கட்சிகளுடன் இனியும் கூட்டணி வைக்கமுடியாது. ஒரு வகையில் திராவிட சட்டகத்துக்குள் தலித்துகளை விளிம்புநிலைக்குத் தள்ளியதுதான் எங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது” என்கிறார்.

குறைந்து வரும் தொண்டர் பலத்தால் சிக்கலில் இருக்கும் இரண்டு பழம்பெரும் திராவிடக் கட்சிகளும் பகுதிரீதியான கூட்டணியையே தங்கள் வாக்குகளுக்கு நம்பியிருக்கின்றன. இதனால் விநோதமாக இச்சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர்களின் வரவும், சிக்கலான தேர்தல் முறையில் வாக்குகள் சிதறிவிடும் என்கிற அச்சமும் எல்லோரையும் ஒரே மாதிரியான முறையை கைகொள்ளச் செய்கின்றன. ஆகவே திமுகவும் அதிமுகவும் பாமகவோடு கூட்டணி அமைக்கவில்லையென்றாலும் அதை வீழ்த்த வன்னிய வேட்பாளர்களை களமிறக்குகின்றன. தர்மபுரியில் பாமக வலுவாக உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கில்  (ஐந்தாவது தலித்துகளுக்கான தனித் தொகுதி), இடது, வலது, தமிழ் தேசிய, திராவிட கட்சிகள் அனைத்துமே வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். ஒரு வகையில் வழக்கமாகவும் இன்னொரு வகையில் மிச்சமிருக்கும் ஒரே யுக்தியாகவும் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. “தமிழ்நாட்டில் அரசியல் என்பது எண் விளையாட்டாக இருக்கும் வரை, இதுவே தொடரும்” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

சாதி மறுப்புத் திருமணங்களைச் சுற்றிய பேச்சுகள், சாதிய அணிதிரட்டல் ஆகியவை தலித் ஆண்களை தவறாக சித்தரிப்பதையே நம்பியிருக்கின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்ட பெண்களையும் இது சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது. தலித் இளைஞர்களுக்கு எதிரான பேச்சுகளில் ஏறத்தாழ அனைத்துமே பெண்களை அறியாமை கொண்டவர்களாக, கற்றுக்குட்டிகளாக, ஜீன்சுக்கும் கூலிங்கிளாசுக்கும் மயங்கி பொறியில் அகப்பட்டு விடுவோராகவே சித்தரிக்கின்றன. “கல்லூரிகள் அதிகமாகிவிட்டபடியால் அதிகமான பெண்கள் இப்போது பிற்படுத்தப்பட்ட ஆண்களைவிட கல்வி கற்கின்றனர். விவசாய சாதிகளுக்கு கல்வி ஒரு கௌரவத்தின் அடையாள மூலதனமாகிவிட்ட்து. முன்னைவிட பல பெண்கள் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் சமூக அடுக்கில் அவர்களின் நிலை மட்டும் அப்ப்டியே இருக்கிறது” என்கிறார் வ.கீதா. பெண்கள் இப்போதும் தளிர்நடைப் பருவத்தில் முரண்டு பிடிக்கும் குழந்தைகள் என்பது போலவே பேசப்படுகிறார்கள்.

திவ்யா, சாதி மறுப்பு மணம் புரியும் தன் சாதியைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதைக் குறித்துப் பேசும்போது அவர்கள் சமூகப் பொறிக்குள் சிக்கிக்கொள்கின்றனர் என்கிறார். “தங்கள் உடன் படிக்கும் இளைஞனையோ அல்லது உடன் பயணிப்பவரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பல பெண்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அப்படி நினைத்துவிட்டால் வேறு யாருக்காவது மணம் முடித்து வைக்கும் அபாயமான மிரட்டல்கள் தொடங்கிவிடும். உங்களுக்கு இருக்கும் ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறிவிடுவதுதான். திருமணங்கள் தோல்வியடைவதற்கு எல்லாம் இந்தக் கட்சிகள் இப்படிச் செய்வதுதான் பாதி காரணம் என்பதை இவர்கள் பார்க்கவே மாட்டார்களா? உங்களைச் சுற்றியுள்ள அத்தனை பேரும், ஒருவர் விடாமல் நீங்கள் அறிந்த நம்பிய அத்தனை பேரும் அவ்வாழ்க்கை தோல்வியடையவேண்டும் என்று விரும்பினால் எத்தனை மண உறவுகள் நிலைத்துவிட முடியும்?” என்கிறார். வன்னியர் சாதியினர் பலர் திவ்யாவுக்கு தங்கள் சாதிக்குள் ஒரு மாப்பிள்ளை பார்க்க முயல்கிறார்கள். “இப்படியான ஒரு சூழலில், ஒவ்வொருவரும் நான் முக்கியம் என்பது போல நடிக்கிறார்கள். அதாவது என் எதிர்காலத்தை அவர்கள் பாதுகாக்கிறார்களாம். ஆனால் உண்மையில் என் விருப்பம் என்ன என்பதில் ஒருவருக்குக் கூட அக்கறை இல்லை. சாதி என்னை விழுங்கிவிட்டது” என்கிறார் திவ்யா.

This article was originally published in English on thewire.in

Image: Rohini Mohan

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com