அதிமுகவின் வேட்பாளர் பொன்னையன் திருச்செங்கோட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்ற பிரச்சாரத்தையும் திமுக இந்த தொகுதியில் முன்வைக்கிறது

Tamil TN 2016 Thursday, May 05, 2016 - 14:06

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஒரு அரசியல் பேரணி, சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்களை தவிர்த்து மற்றெவருக்கும் நல்ல செய்தியாக இருப்பதில்லை. குறுகலான சாலைகளில் நிரம்பி வழியும் கூட்டம் அக்கம்பக்கத்தினருக்கு எப்போதுமே தொல்லை நிறைந்தது. கடந்த ஏப்ரல் 24 , ஞாயிற்றுக்கிழமையன்று சைதாப்பேட்டையை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும், திமுக பேரணிக்காக நிரம்பி வழிந்தன. அக்கட்சியின் தலைவர் கருணாநிதி 2016 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக இந்த தொகுதிக்கு வருகை தந்திருந்தார்.91 வயதிலும், தனது வீல்சேரில், அனைவரையும் கவரும் வகையிலான அவரது பேச்சை கேட்க எண்ணற்றோர் குவிந்திருந்தனர்.

சென்னையின் பரபரப்பான தெருக்களின் வழியே பேரணி நடக்கும் பகுதியை நோக்கி நடக்குகையில், தமிழகம் மற்றும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தை தெளிவாகவே காண முடிந்தது.தமிழில் ஹிட்டான சினிமா பாடல்களின் ராகத்தில் கட்சி பாடல்கள் அந்த அரங்கு முழுவதும் ஒலித்து கொண்டிருந்தது. திமுக தொண்டர்களும், திமுகவின் தொழிற்சங்கத்தில் இணைந்திருந்த அரசு ஊழியர்களும் வந்து கொண்டிருந்தனர். கட்சியின் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ண கொடியை வேன்களின் ஜன்னல் வழியே தொங்கப்பட்டபடி ஆதரவாளர்கள் அரங்கை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆரஞ்சு நிறத்தில், மா.சு என்ற மா.சுப்பிரமணியம் முன்னாள் மேயர் மற்றும் திமுக சைதாப்பேட்டை வேட்பாளர் என்ற பெயர் பொறித்த டீ சர்ட்கள், அவரது ஆதரவாளர்களால் அங்கே வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

களைப்படைந்த கேமராமேன்களும், பத்திரிக்கையாளர்களும் தகிக்கும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது தங்கள் மீது தூக்கி வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்களையும், ஜூஸ் பாட்டில்களையும் பெற்று கொள்ள முண்டியடித்து கொண்டிருந்தனர். திமுக தொலைக்காட்சியான கலைஞர் டிவி, நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்ப பிரமாண்ட கேமரா ஒன்றை பொருத்தியிருந்தது. கட்சி உறுப்பினர்கள், ‘மாவட்டம்’, ‘வட்டம்’, ‘தொகுதி’ என அவர்களது பதவிக்கு தக்கவகையில் நின்று, தங்கள் தலைவர்கள் வரும் வரை பரஸ்பரம் கிண்டலடித்து கொண்டிருந்தனர். திமுக உறுப்பினர்களை தவிர, கூட்டணி கட்சிகளான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர். அரசு துறையில் திமுக தொழிற்சங்கத்தில் இருப்பவரை போல தோன்றிய நீல நிற சட்டை அணிந்த ஒருவர், அருகிலிருந்த ஒருவரிடம் அசட்டு சிரிப்புடன் “ மது குடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏதேனும் உண்டா என கேட்போமா ? “ என கேட்டார்.

விரைவிலேயே கருணாநிதி பளபளக்கும், அலங்கரிக்கப்பட்ட தனது பிரச்சார வேனில் கனிமொழி, தயாநிதி மாறன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் புடைசூழ அங்கு வந்தார். அவர் மேடையில் வந்ததும், ஏர் ரகுமான் இசையில் வெளிவந்து, தற்போது திமுகவின் பாடலாக மாறி போன தமிழ் செம்மொழி பாடல் போடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை சுக்கான் பிடித்து வழிநடத்தியவர் மா.சு என அழைக்கப்படும் மா.சுப்பிரமணியம். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான அவர் மேடையில் இருந்து, நிகழ்ச்சியை தொகுத்து கொண்டிருந்ததுடன், கட்சி தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டு கொண்டிருந்தார். கூடவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க உதவும்படி தனது ஆதரவாளர்களையும் கேட்டு கொண்டிருந்தார். மேடைக்கு அருகில் கூடிய கட்சி உறுப்பினர்களை, அவற்றிலிருந்து அப்புறம் செல்லும்படியும் கூறினார்.

திமுகவுக்கும், சைதாப்பேட்டைக்கும் சொல்லும்படியான அரசியல் வரலாறு உள்ளது. 1967 மற்றும் 1971 களில் திமுக தலைவர் இத்தொகுதியில் போட்டியிட்டு தான் முதலமைச்சர் ஆனார். “ சைதாப்பேட்டை திமுகவின் வலுவான ஒரு பகுதி என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இது அக்கட்சியின் கோட்டை. அவர்களுக்கு நல்ல ஆதரவு இங்கே உள்ளது “ என்கிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன்.

திமுகவின் வெற்றி பெறும் வேட்பாளர்கள் என கருதப்படுபவர்களில் மா.சுப்பிரமணியமும் ஒருவர். சைதாப்பேட்டை தொகுதியில் அவர் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. திமுகவின் சென்னை மாவட்ட செயலாளராக இருந்து கொண்டிருக்கும் இவர், வாக்காளர்களிடையே தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்.2006 லிருந்து 2011 வரை அவர் சென்னை மேயராக இருந்த போது மாநகர மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். முக ஸ்டாலின் ஆதரவாளராக இருப்பதால் கட்சியில் நல்ல ஒரு இடத்தை பெற இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சிக்கிடையே நியூஸ்மினிட்டிடம் அவர் பேசும் போது,” சைதாப்பேட்டையில் நடந்த அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக ஆட்சி காலத்தில் நடந்தவை. கடந்த 5 வருடங்களாக எதுவுமே இங்கு நடைபெறவில்லை. நாங்கள் பஜார் ரோட்டில் ஒரு பாலத்தை கட்டினோம். மிகப்பெரிய பயணிகள் நிழற்குடையை நாங்கள் கட்டினோம். எங்களது நிர்வாகத்தில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது.நாங்கள் கழிவு நீர் வடிகால்களை சரி செய்தோம். அதிமுக ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள் ? .

மா.சுப்ரமணியம் ஒவ்வொரு பேரணிகளிலும், நேர்காணல்களிலும் வளர்ச்சியை பற்றி பேசினாலும், கருணாநிதியின் பேச்சில் சென்னை வெள்ளபெருக்கின் போது சைதாப்பேட்டையின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை மையபடுத்தியே இருந்தது. “ சென்னையில் வெள்ளபெருக்கு ஏற்பட்ட காலத்தில் அதிமுக அரசு சைதாப்பேட்டை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களில், இந்த மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளோம்.” என்றார் கருணாநிதி.

“வெள்ள காலங்களில் திமுகவின் மீட்பு பணி சைதாப்பேட்டையிலும்  செயல்பட்டது. வெள்ளபெருக்கில் 10 க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்தனர்.பலர் தங்கள் வீடுகளையும், தொழில்களையும் இழந்தனர். மக்களிடையே அரசுக்கு எதிராக கோபம் உள்ளது.” என்றார் சுப்பிரமணியம். இவ்வாறு அவர் பேசி கொண்டிருக்கும் போது, திமுக கொடியை கையில் ஏந்திய ஒருவர் எங்களை பார்த்து உரக்க குரலில், “நான் எனது 40 லட்ச ரூபாய் மதிப்புமிக்க வீட்டை இழந்தேன். இந்த அரசு எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நான் என்ன செய்வது ? “ என கூறியவர் தனது பெயரை அப்துல் தஹெர் எனவும், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எனவும் கூறி கொண்டார்.

வெள்ளபெருக்கால் உண்டான கோபம் கண்கூடாக தெரிந்தது.” அவர்கள் குறித்த நேரத்தில் எங்களுக்கு உதவ வரவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் எங்களை எச்சரித்திருக்கலாம்.” என்றார் அடையார் ஆற்றங்கரையில் வசிக்கும் செல்வம். ஆனால் அரசை அதிகளவில் திட்டுவது நியாயமற்றது என்கிறார் பஜார் தெருவை சேர்ந்த பாஷா. “ அவர்களால் என்ன செய்திருக்க முடியும் ? மழை அதிகளவில் பெய்தது. திமுக ஆட்சியில் இருந்தால் கூட, இதுதான் சம்பவிக்கும் “ என்றார் அவர்.

மதமும் இந்த தொகுதி தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கும். முஸ்லீம் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளதால், அதிமுகவைவிட திமுகவிற்கு சற்று சாதகமாக இருக்கும். “ பாரம்பரியமாக, மத சிறுபான்மையினரிடம் திமுகவுக்கு நல்லதொரு இணக்கம் உண்டு. சைதாப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் முஸ்லீம்கள் குறிப்படத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இது, திமுக அதிக அளவில் வாக்குகளை பெற உதவும் “ என்றார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன்.

மா.சுப்ரமணியனிடம் தன்னை எதிர்த்து சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சி.பொன்னையனை பற்றி கேட்டபோது அவரை விமர்சிக்காமல் சென்னை மேயர் சைதை துரைசாமியை விமர்சித்தார்.

சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியம் திமுகவின் முகமென்றால், சைதை துரைசாமி அதிமுகவின் முகம். கடந்த 4 வருடங்களாக சென்னை மேயர் என்ற அடிப்படையில், சைதை துரைசாமி மீது வெள்ளபெருக்கின் போது போதிய ஏற்பாடுகள் செய்யாமை உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் கூறப்பட்டன. “ அவர் மக்களுக்காக இங்கு எதுவுமே செய்யவில்லை “ என மீண்டும் கூறினார் மா.சு.

ஆனால் திமுக பொன்னையனையும் விமர்சிக்க துவங்கியுள்ளது. முன்னாள் நிதியமைச்சரான இவர் அதிமுக சார்பில் போட்டியிட மேற்கு தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் கூறுகின்றனர். “ மக்களுக்கு அவரை பற்றி எதுவும் தெரியும் என்றால், அவருக்கு வாக்களிப்பதை பற்றி யோசிப்பார்கள். ஆனால் அவர் இங்குள்ளவர் இல்லை. அவருக்கு சைதாப்பேட்டையை குறித்து எதுவுமே தெரியாது.” என்றார் மா.சு. “ ஆனால் நிதியமைச்சராக இருந்து கடந்த 2003 இல் ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் வேலையை விட்டு நீக்கியவர். அரசு ஊழியர்கள் அதனை எளிதில் மறந்துவிடபோவதில்லை” என்றார் அவர்.

ஆனால் ஊழல் கறை இன்னும் திமுகவை விட்டு போனதாக இல்லை.” இப்போது எல்லாரும் ஊழல்பேர்வழிகள் தான் என்பதை தெரிந்து கொண்டுள்ளோம். அதனால் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவே விரும்புகின்றனர்.” என்றார் ஒரு ஆட்டோடிரைவர். தனது பேரன் தயாநிதி மாறனை அருகில் வைத்து கொண்டு அதிமுகவின் ஊழலை விமர்சித்த கருணாநிதி தான் அந்த நேரத்தில் என் நினைவில் வந்து சென்றார்.

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.