2014 மக்களவை தேர்தலில், தேமுதிகவின் கூட்டணி கட்சியாக இருந்த பிஜெபி பெற்ற வாக்குகளால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

Vernacular Wednesday, March 30, 2016 - 08:55

தமிழக அளவில் ஒரு மாநில கட்சியின் தலைவரான விஜயகாந்த் தனது கட்சி  தேமுதிக, வேறு சில சிறு மாநில கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியாக தேர்தலை சந்திக்கும் என அறிவித்துள்ளார் . வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த வானவில் கூட்டணியானது, ஆளும் அதிமுகவிற்கும், அதன் முதன்மை எதிரியான திமுகவிற்கும் மாற்றாக, இருக்க போவதாக கூறியுள்ளது.

அதனை தொடர்ந்து, திமுகவும், பிஜெபியும் பணம் தருவது உள்ளிட்ட சில பேரங்களில்  தேமுதிகவுடன் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது விஜயகாந்த் தரப்பில் மறுப்பு எழுந்துள்ளது.இத்தகைய சூழலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவின் இந்த முடிவு, தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கும் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவின் தேர்தல் ஜனநாயக முறைகளில்,அநேகமாக தமிழகம் ஒரு முக்கிய படிப்பினையாகவே உள்ளது. பெரும்பாலும் மூன்று முக்கிய தலைவர்கள் மட்டுமே, அதிக அளவில் சர்வாதிகார தன்மையுடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்டுள்ளனர். (கருணாநிதி,எம்ஜிஆர், ஜெயலலிதா). 1971 முதல் அதன் தேர்தல்கள், இரு பெரும் தலைவர்களிடையே நடக்கும் அதிபர் தேர்தலை போன்றே நடந்தன. (கருணாநிதி எதிர் எம்ஜிஆர்) (கருணாநிதி எதிர் ஜெயலலிதா).

அரசுபணித்துறை, போலீஸ், ஊடகம், குடிமக்கள் என அனைத்துமே திமுக, அதிமுக என இரண்டு பிரிவாக  தமிழ் சமூகத்தின் முகமானது  பிரிந்து காணப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த ஆறு தேர்தல்களிலும், ஒவ்வொருமுறையும் இந்த இரு கட்சிகளே மாறி மாறி ஆண்டு வருகின்றன. ஒவ்வொருமுறையும், வெற்றி பெறும் போது, அந்த வெற்றி பெறும் கட்சியானது தனி மெஜாரிட்டியுடன் பிரமாண்ட வெற்றி பெறுவது என்பது, தற்போது தமிழக தேர்தலில் ஒரு வணிக குறியீடாகவே மாறியுள்ளது.

தமிழக அரசியலில், ஆதிக்கம் செலுத்த கூடிய சக்தி வாய்ந்த இருதுருவங்களுக்கு மத்தியில், மற்ற சிறிய மாநில கட்சிகளான தேமுதிக,விடுதலை சிறுத்தைகள்,பாமக, மதிமுக போன்ற கட்சிகள் மீது அப்படியென்ன “கொலவெறி” என்ற கேள்வியே எழுந்துள்ளது. அதிக வாக்குகளை பெறுபவர் தான் வெற்றி பெற முடியும் என்ற தேர்தல் முறைப்படி, எதிர்த்து போட்டியிடுபவர்களின் வாக்குகளை பிரிப்பதன் மூலம் ஒருவர் வெற்றியை பெற்றுவிட முடியும். உண்மையில் விஜயகாந்த் தலைமையிலான மூன்றாவது அணி, தமிழக அரசியலின் இந்த கட்டமைப்பை தகர்க்க கூடியதா ? இந்த முன்னணி அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வெற்றியில் கணிசமான தாக்கத்தை செலுத்துமா  ?

2005 இல் தேமுதிக உருவான பின், தமிழகத்தில் நான்கு தேர்தல்களை சந்தித்துள்ளது.சமீபத்திய மக்களவை தேர்தலில், தேமுதிக தலைமையிலான கூட்டணியில் பிஜெபி, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. அக்கட்சி 84 சட்டமன்ற தொகுதிகளுக்கு சமமாக 14 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 78 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் நேரடியாகவே தேர்தல் களத்தில் மோதியது. தேமுதிக போட்டியிட்டதால், திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிமுகவை விட 2.5 மடங்கு கூடுதலாக பாதிப்புக்குள்ளானது. இதை இன்னும் விளக்கமாக சொன்னால் தேமுதிக பெற்ற ஒவ்வொரு 100 வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், திமுக தனது வாக்குகளில்  25 வாக்குகளையும் , அதிமுக தனது வாக்குகளில்  10 வாக்குகளையும் இழந்துள்ளது.

2014 மக்களவை தேர்தலில் உண்டான மோடி அலை தேமுதிகவிற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கூட பயனளித்திருக்கலாம். இருப்பினும், தேமுதிகவினால் உண்டான எதிர்மறை தாக்கம் கூட, அதிமுகவை விட திமுகவிற்கே அதிகம் கைகொடுக்கவும் செய்துள்ளது. அதேவேளை, 2014 மக்களவை தேர்தலில்,திமுகவையும், அதிமுகவையும் பிஜெபி எதிர்கொண்ட போது, அந்த தேர்தலின் முடிவு தேமுதிக ஏற்படுத்திய தாக்கத்திற்கு நேரெதிராக அது அமைந்தது. அதாவது, திமுகவை விட அதிமுகவின் வாக்குகளில் பிஜெபி இரு மடங்கு கூடுதலாக  பாதிப்பை ஏற்படுத்தியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில்,கடந்த 2014 மக்களவை தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பெற்ற வாக்கு பங்கீட்டை தேமுதிக போட்டியிட்ட 78 தொகுதிகளில் பெற்ற வாக்கு பங்கீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படம், அதிமுக மற்றும் திமுகவின் வாக்கு பங்கீடுகளை அடிப்படையாக கொண்டு தேமுதிகவின் வாக்கு பங்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்கி கூறுகிறது. அதில் எப்படி திமுகவின் வாக்கு பங்கீடு அதிமுகவை விட கீழ்நோக்கி செல்கிறது என்பதை தெரிவிக்கிறது.

கடந்த 2006 மற்றும் 2009 தேர்தல்களை ஆய்வு செய்த போதும் இதே நிலைமை தான் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும், தேமுதிகவின் வாக்கு பங்கீடு, அதிமுகவை விட திமுகவை அதிக அளவில் பாதித்துள்ளது. 2006 தேர்தலில், தேமுதிக அதிக வாக்கு சதவீதத்தை பெற்றிருந்த போது, அது அதிமுகவை பாதித்த அளவை காட்டிலும் நான்கு மடங்கு கூடுதலாக திமுகவின் வாக்கு சதவீதத்தை பாதித்தது. இந்த  ஆய்வின் மூலம், அதிமுகவை விட திமுக, தேமுதிகவை பற்றி அதிகம் கவலைப்படுவதற்கு காரணம் என்ன என்பது நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆய்வு கடந்த கால தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டது. வரபோகும் சட்டமன்ற தேர்தலை குறித்த கணிப்பாக இதனை கூறவில்லை.இருப்பினும், வாக்காளர்கள் எத்தகைய மனநிலையில் தொடருகிறார்கள் என்பதனையும், தேமுதிக எந்த கட்சியை அதிகம் பாதிப்படைய செய்யும் என்ற கேள்விக்கும், பதிலாக இந்த ஆய்வினை கணக்கில் கொள்ள முடியும். எப்படியிருப்பினும், கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாக்குகளை தேமுதிக பெறும் என்பதனை இந்த ஆய்வு ஊகிக்கிறது. இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில் தேமுதிக வலுவான சக்தி என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது என்பதனை குறித்து எழுதியிருந்தேன். 2011 இல் 10% அளவில் இருந்த அதன் வாக்கு சதவீதம் தற்போது 3%-5% என்ற நிலையில் உள்ளது. அதன் வாக்கு சதவீதம் மேலும் குறையுமெனில், எந்த கட்சி அதிகம் பாதிக்கப்படும் என்ற கேள்விக்கான பதில் இன்னும் விவாதிக்க கூடியதாக இருக்கும்.

Topic tags,

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.