கையில் ஆழமான காயம் இருந்தபோதும், சிறுவன் மிகவும் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருந்தான்.

Vernacular அலட்சியம் Wednesday, February 10, 2016 - 19:03

ஹைதராபாத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஹார்த்திக் ஜெனா. இவன் ஐதராபாத்தில் சர்வதேச பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனது தந்தை ஆசிஷ் ஜெனா ஒரு தகவல் தொழில்நுட்ப கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி 27 இல் அந்த சிறுவன் தனது பள்ளியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடி ஒன்று உடைந்து சிறுவன் ஹார்த்திக்கின் கையில் குத்தி காயப்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நர்ஸ் அவனுக்கு முதலுதவி செய்து , ஐதராபாத் மேதிப்பட்டினத்தில் உள்ள ஆலிவ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்த தகவலை ஹார்த்திக்கின் தந்தை ஆசிஷ் ஜெனாவுக்கும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து ஹார்த்திக்கின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆலிவ் மருத்துவமனை டாக்டர்கள், சிறியதொரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என கூறவே, ஹார்த்திக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் கதி, சிறுவனுக்கு கையில் ஆழமான காயம் இருப்பதாகவும், ஆகவே அறுவை சிகிச்சை அவசியம் என கூறவே, ஹார்த்திக்கின் பெற்றோரும் சம்மதித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, அறுவைசிகிச்சை முடிந்த பின் சிறுவன் ஹார்த்திக்கினை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் மாற்றியுள்ளனர். ஆனால் சிறுவனின் உடல்நிலை முன்பிருந்ததைவிட மோசமாக துவங்கியது. பெற்றோர்கள் சிறுவனை பார்க்க அனுமதி கேட்டும் மருத்துவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். தொடர்ந்து, சில மணி நேரங்களில் சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் ஹார்த்திக்கின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

மகன் இறந்து போனதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹார்த்திக்கின் பெற்றோர், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் தங்கள் மகன் இறந்து போனதாக குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஆசிஷ் நியூஸ் மினிட்டிடம் கூறும்போது” கையில் ஆழமான காயம் இருந்தபோதும், எனது மகன் மிகவும் உற்சாகமாகவும் துடிப்பாகவும் இருந்தான். எனது செல்போனை மற்றொரு கையில் பிடித்து விளையாடினான்.அறுவைசிகிச்சையின் போது அவனுக்கு அதிகபடியாக மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இது மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் “ என கூறினார்.

மேலும் சிறுவனின் பெற்றோர், இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் அளித்துள்ளனர். சிறுவன் மரணத்தை தொடர்ந்து மருத்துவமனையின் அறிக்கையில் மயக்கமருந்து கொடுப்பதற்கு முன் ஏற்பட்ட மாரடைப்பால் சிறுவன் பலியானதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், அதனை டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிய கிடைக்கும் முடிவினை வைத்தே தக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

இதனிடையே, அப்பள்ளில் படிக்கும் பிற மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு போராட்டம் நடத்தினர். 

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.