கலாபவன் மணியின் மரணம் சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு 
Vernacular

கலாபவன் மணியின் மரணம் சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு

நடிகர் மணியின் உடலில் மீத்தைல் அல்கஹால் இருந்ததாக கூறப்படுகிறது

Written by : Dhanya Rajendran

கேரள மற்றும் தமிழக ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகரான கலாபவன் மணி, ஞாயிறு மாலை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து காலமானார்.

மணியின் மரணம் முதலில் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டது என கூறப்பட்டாலும், சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ளதாக  போலீஸ் அதிகாரிகள் நியூஸ் மினிட்டிடம் கூறினர். மேலும் இந்த மரணம் குறித்து சாலக்குடி போலீசார் இந்த மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

முதலில், உடலை, நடிகர் மணி மரணமடைந்த கொச்சி அமிர்தா மருத்துவமனையில் உள்ள சவகிடங்குக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் உடல் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கலாபவன் மணியின் சகோதரரான ராமகிருஷ்ணனின் புகாரின் பேரில் சாலக்குடி போலீசார், சிஆர்பிசி 174 பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

சாலக்குடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இதுகுறித்து விசாரணை செய்யும் அதே வேளையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சூர் ரூரல் எஸ்பி கார்த்திக் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில் “ முதல் தகவல் அறிக்கை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவர்களிடமும், மற்றவர்களிடமும் இதுபற்றி விசாரிப்போம். கூடவே, பிரேத பரிசோதனை அறிக்கையையும், மருத்துவ அறிக்கைகளையும் ஆய்வு செய்வோம்.” என கூறினார்.

சில ஊடகங்கள் அவரது உடலில் மீத்தைல் ஆல்கஹால் இருந்ததாக கூறுகின்றன.

கொச்சி போலீஸ் கமிஷனர் எம்பி தினேஷ் திருச்சூர் போலீசாரின் விசாரணையில், கொச்சி போலீஸ் இணைந்து செயல்படாது என கூறினார்.