“எங்களை அமைதியாக சடங்குகளை செய்ய அனுமதியுங்கள்” சுவாதியின் சகோதரி வேண்டுகோள் 
Tamil

“எங்களை அமைதியாக சடங்குகளை செய்ய அனுமதியுங்கள்” சுவாதியின் சகோதரி வேண்டுகோள்

சுவாதியின் மரணத்தை தொடர்ந்துள்ள சடங்குகளை செய்ய சென்ற போது சில ஊடகங்கள் அவரது குடும்பத்தினரை கருத்து சொல்ல வற்புறுத்தியுள்ளன

Written by : TNM Staff

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் 22 வயதான கொலையாளி ராம்குமார் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுவாதி குடும்பத்தினரின் எதிர்வினை என்ன என்பதை ஊடகத்தினர் அறிய முற்பட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் சுவாதியின் மரணத்தை தொடர்ந்து சடங்குகள் நட்த்துவதற்காக அவரது குடும்பத்தினர் தற்போது சென்றுள்ளனர். இந்நிலையில், சடங்குகள் நடத்தும் நேரம், ஊடகத்தினர் கருத்துக்களை கேட்க வந்து தங்களை தொந்தரவு செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக சுவாதியின் தந்தை, சடங்குகளை செய்து கொண்டிருக்கும் போது, இரு செய்தி சேனல்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும் கூறுகின்றனர்.

சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே சில தமிழ் சானல்கள், கேமராக்கள் முன்னிலையில் தங்கள் கருத்துக்களை கூறும்படி முரட்டுத்தனமாக வலியுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை பொருட்படுத்தாமல், குடும்பத்தினர் கேமராவை விட்டு விலகிய பின்னரும் கூட, 24 மணி நேர செய்திச் சானல் நிருபர் ஒருவர் நேரலையிலேயே, சுவாதியின் குடும்பத்தினர் கருத்து கூறவில்லை என்றும், அவர்கள் கருத்து கூற வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளனர்.

இதனிடையே, ஊடகத்தினர் தங்களுக்குரிய இடத்தை தர வேண்டும் என சுவாதியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து நியூஸ் மினிட்டிடம் சுவாதியின் சகோதரி நித்யா கூறுகையில், “ தயவு செய்து இப்போதாவது, அமைதியாக எங்கள் சடங்குகளை செய்ய எங்களை அனுமதியுங்கள். நாங்கள் துக்கம் அனுசரிக்கவும், எங்கள் அந்தரங்கத்தை பாதுகாக்கவும் எங்களுக்கு அவகாசம் வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு மிகிழ்ச்சியான நல்ல செய்தியல்ல. பாரம்பரிய முறைப்படி அமைதியாக சடங்குகளை முடிக்க எங்கள் குடும்பத்தினருக்கு கால அவகாசம் தேவை. நாங்கள் மிகவும் மோசமாக காயம்பட்டு இருக்கிறோம். ஊடகங்கள் மேலும் எங்கள் காயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். இரு கைகூப்பி நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். நன்றி “ எனக்கூறினார் அவர்.