Tamil

வான வேடிக்கை விழாவை நிறுத்த, புற்றிங்கல் கிராமத்தினர் மறுப்பது ஏன் ?

Written by : Dhanya Rajendran

கொல்லம் மாவட்டம் புற்றிங்கல் அம்மன் கோயிலில், ஞாயிறு அன்று நடந்த கோர வெடி விபத்தின் எச்சங்கள் எங்கும் நிறைந்து காணப்பட்டன. உடைந்த கட்டிடங்கள், சேதமடைந்த வீடுகள், எரிந்த நிலையில் கிடந்த துணிகள் என விபத்தின் கோர அடையாளமாக காணப்பட்டன.

டிவி நிருபர்கள் செய்திகளை சேகரிக்க மும்முரம் காட்டிய போது, குறிப்பிட்ட ஒரு  டிவி சேனல், விழாவை குறித்து பரப்பிய எதிர்மறை செய்திகளுக்காக உள்ளூர்வாசிகள் கோபப்பட்டனர். விரைவிலேயே, உள்ளூர் மக்கள் கூட்டமாக திரண்டு வந்து, விபத்து ஏற்படுவதற்கு காரணங்களை, அவரவர் வித்தியாசமான பார்வைகளில் சொல்ல துவங்கினர். ஆனால், கிட்டத்தட்ட அனைவரும் அம்மன் கோயிலில் நடக்கும் அந்த கம்பம் நிகழ்ச்சி ( வான வேடிக்கை ) நிச்சயம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றே கூறினர்.

“ இது அம்மனின் தவறல்ல. ஒவ்வொரு வருடமும் வெடிக்கப்படும் பட்டாசுகளின் அளவை கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பு போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ளது. அதை அவர்கள் ஒருபோதும் செய்யவில்லை. அதனால் மக்கள் இறந்துள்ளனர். இதற்காக ஏன் கம்பம் நிகழ்ச்சி நடத்த கூடாது ?” என கேட்கிறார். உள்ளூரில் கடை ஒன்றை நடத்தி வரும் ராமச்சந்திரன்.

இந்த கோயிலானது பல வருடங்கள் பழமையானது. இந்த கோயில் உருவாக்கம் குறித்த புராணகதையின் படி, பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏதேச்சையாக தனது கையிலிருந்த அரிவாளால் எறும்பு புற்று ஒன்றை சீவியுள்ளார். உடனடியாக அந்த எறும்பு புற்றிலிருந்து, இரத்தம் பீறிட்டு பாய்ந்ததை கண்டு பீதியடைந்த அந்த பெண், அருகிலிருந்த ஈழவ சமூக தலைவரை பார்க்க ஓடி உள்ளாள். இதனை தொடர்ந்து, அந்த ஈழவ தலைவர், அந்த எறும்பு புற்று, பத்ரகாளியின் உறைவிடம் என அறிவித்ததோடு அல்லாமல், அந்த பகுதியில் பத்ரகாளி சிலை ஒன்றினையும் வைத்துள்ளார். சில வருடங்களுக்கு பின் அங்கு புதியதொரு கோயில் ஒன்று கட்டப்பட்டது.

கோயிலுக்கு அருகில் வசிக்கும், அருண்லால் என்ற வழக்கறிஞர், கோயில் கமிட்டியில் ஈழவ சமூகத்தின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று போராடியவர். ஆனால் அவரும் கம்பம் விடுவதை (வான வேடிக்கை) தடை செய்ய வேண்டும் என்பதை விரும்பவில்லை.

“ நாங்கள் எப்போதுமே, அதிக சத்தம் எழுப்பும், பிரமாண்ட பட்டாசுகளை வெடிக்க வைப்பதை எதிர்க்கிறோம். ஆனால், கம்பம் விடுவதை நிறுத்த கூடாது. தேவி (அம்மன்) அதை விரும்புகிறார்.” என்றார் அவர்.

அப்பகுதியை சேர்ந்த ஷீபா என்பவரும், அருணின் இந்த கருத்தையே ஆமோதிக்கிறார். “ நான் அதிக சத்தம் ஏற்படுத்தும் கம்பங்களை விடுவதை விரும்பவில்லை. வெறும் ஒளியை உமிழும் வகையில் இருப்பதே நல்லது. ஆனால், இதனை தடை செய்ய கூடாது.” என்றார்.

சிலர், வழிபாட்டு தலத்தில் பட்டாசுகளை பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ செய்வதை தடுக்க வேண்டும் என கூறுவதை கூட பல உள்ளூர் மக்களும் ஏற்கவில்லை. பலர், கடந்த பல வருடங்களாகவே விழா எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுகிறது எனவும், நிர்வாகத்தின் தேவையற்ற தலையீடு தான் இந்த சோக நிகழ்வுக்கு காரணம் என்றும் கூறினர்.

இந்த கம்பம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, அரசு நிர்வாகம் தடைவிதிப்பதற்கு முன்னரே கோயில் கமிட்டி பட்டாசுகள் வாங்க பணம் கொடுத்து வாங்கி வைத்திருந்தது. கோயில் குழுவானது, அரசு அதிகாரிகள் இந்த பட்டாசுகளை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒரு இடத்தில் குவித்து வைத்திருந்தனர். “ இல்லாவிட்டால், இரு போட்டி குழுக்களின் பட்டாசுகளும் இரு குடிசைகளில் தனித்தனியே வைக்கப்பட்டிருக்கும்.” என்றார் 29 வயதான ஆனந்த்.

சைபல், என்ற உள்ளூர் ஒப்பந்தக்காரர், ஒரு முஸ்லீமாக இருந்தாலும், கோயிலின் பழம்பெருமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். “ நான் இங்குள்ள கோயில் விழாவை எனது சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். இந்த தேவியும் (அம்மனும்) அவரது கோயிலும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதற்காக, நாம் வெடி வழிபாட்டு விழாவை நிறுத்த வேண்டிய தேவையில்லை. அப்படி நிறுத்துவதை தேவியோ அல்லது, உள்ளூர் மக்களோ விரும்புவதில்லை.” என்றார் அவர்.

இறந்து போன 108 பலரும் அதே புற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. அதே பகுதியிலிருந்து இன்னும் பலரும் இறந்திருந்தால் என்ன செய்வது ? என கேட்டபோது  “ அது ஒரு பிரச்சினை அல்ல. பாரம்பரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும். மாறாக, அதன் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் உள்ளோம்” என்றார் அருண் லால்.

கோயில் கமிட்டி ஏதேனும் அரசியல் ஆதரவு பெற்றதா என்ற கேள்விக்கு “ ஏதேனும் பெயர்களை தொடர்புபடுத்தி சொல்வது ஊடகங்களுக்கு எளிது. ஆனால், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த விழாவை ஆதரிப்பார்கள் என நான் சொல்கிறேன்.” என்றார் அருண்லால்.

Being KC Venugopal: Rahul Gandhi's trusted lieutenant

Former PM Deve Gowda’s son Revanna and grandson Prajwal booked for sexual harassment

KTR alleges that Union govt may make Hyderabad a Union territory

BJP warned about Prajwal Revanna videos months ago, still gave him Hassan ticket

A day after LS polls, Kerala Governor signs five pending Bills