Tamil

கலைந்து போன கனவு : சரவணனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக் கோரும் அவரது நண்பர்கள்

Written by : Anna Isaac, Sarayu Srinivasan

சரவணன் கணேசன் திருப்பூரை சேர்ந்த 26 வயது இளைஞர். தனது எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்த பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்த போது அவரது பெரிய கனவொன்று நிறைவேறியதை போன்று இருந்தது. வாழ்க்கையின் மிகப்பெரிய கனவுகளோடு தனது பட்ட மேற்படிப்பை தொடர டெல்லி எய்ம்ஸுக்கு சென்றார் சரவணன்.

ஆனால், சரவணனின் கனவு நெடுநாள் நீடிக்கவில்லை. திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞர் தெற்கு டெல்லியில் தான் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது அறையிலிருந்து பொட்டாசியம் குளோரைடை கண்டெடுத்த டெல்லி போலீசார், இது தற்கொலை தான் என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து, உள்ளூர் காவல் நிலைய விசாரணை அதிகாரி ஜிதேந்தர், மேற்கொண்டு இந்த மரணத்தின் பின்னில் வேறு காரணங்கள் உள்ளனவா ? என்று தாங்கள் விசாரிக்கவில்லை என நியூஸ் மினிட்டிடம் கூறுகிறார். “ சந்தேகப்படும்படியாக எதுவுமே அவரது அறையிலிருந்து கண்டெடுக்கப்படவில்லை.அவரது தற்கொலைக்கான காரணமும் இதுவரை  நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.” என கூறும் அவர், தற்கொலை குறித்து எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.

இதனிடையே, சரவணன் தற்கொலை செய்து கொண்டார் என்பதனை ஏற்க மறுக்கும் அவரது நண்பர்கள், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, நேர்மையான விசாரணை நடைபெற தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சரவணனுடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர். அரவிந்த் காந்தி கூறுகையில், “ ஞாயிறு நள்ளிரவு 12.30 மணி வரை சரவணன் பணியில் இருந்துள்ளார். அப்போது தான் கடைசியாக அவருடன் பணிபுரிபவர்கள் சரவணனை எய்ம்ஸில் பார்த்த்தாக கூறினர்” என்று கூறுகிறார். மறுநாள் காலை 8 மணிக்கு மீண்டும் பணிக்கு வரவேண்டிய சரவணனை காணாததை தொடர்ந்து, அவரது சீனியர்கள், அறைக்கு சென்று பார்த்துள்ளனர். “ அவரது அறையின் கதவு திறந்திருந்தது. அங்கு நுழைந்த போது, அவரது வலது கையில் ஊசி ஒன்று செருகப்பட்டிருப்பதையும் பார்த்துள்ளனர். “ என கூறுகிறார் டாக்டர் அரவிந்த். சரவணனின் நண்பர்களும், உடன் படித்தவர்களும் வலதுகைப் பழக்கம் உள்ள சரவணனால் எப்படி இடது கையை பயன்படுத்தி வலது கையில் ஊசியை செருக முடியும்  என கேள்வி எழுப்புகின்றனர்.

சரவணனுடைய அறையை திருநெல்வேலியை  அடுத்த பாபநாசத்தை சேர்ந்த முகம்மது ஜசீம் என்பவர்  பகிர்ந்து கொண்டிருந்தார். மருத்துவக் கல்லூரி மாணவர்களான இருவரும் கடந்த ஒரு மாதமாக தெற்கு டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று, முகம்மது ஜசீம் தனது சொந்த ஊரான பாபநாசத்தில் இருந்தார். சரவணன் மரணம் தொடர்பாக அவர் கூறுகையில், “ அவர் நலமாகவே இருந்தார். என்னிடம் ரம்சான் வாழ்த்துக்களையும் அவர் கூறினார், அப்போது தான் நாங்கள் கடைசியாக பேசிக்கொண்டோம்.” எனக் கூறுகிறார் ஜசீம், ஆறு வருடமாக சரவணனை அறிந்த டாக்டர் அரவிந்த், சரவணனின் தற்கொலை செய்யும் அளவு எந்தவித காரணங்களும் இல்லை எனக் கூறுகிறார். “ அவர் திறமைமிக்க நபராக இருந்தார். பொது மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்ற இலக்கில் அவர் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்தார்.” என விளக்கி கூறுகிறார்.

அரவிந்த் தொடர்ந்து கூறுகையில், “ சரவணன் எதிர்பாரதவிதமாக அட்மிஷன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார். கவுன்சிலிங் தினத்தன்று எங்களை அழைத்து கொண்டு ஒரு பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவளித்தார். முதல் சம்பளம் கிடைத்ததும், மிகப்பெரிய விருந்து வைக்கப் போவதாகவும் கூறினார்.” என தனது நினைவுகளை கூறினார். ஆனால் அந்த நாள் வரவேயில்லை.

செவ்வாய்கிழமையன்று, டெய்லர் வேலை செய்து வரும் சரவணனின் தந்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த அவரது உடலை பெற்றுக் கொண்டனர்.

ஆனால், சரவணனின் நண்பர்களை போல் அல்லாமல், அவரது குடும்பத்தினர் இந்த மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த விருப்பமின்மையை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சரவணனின் தந்தை கணேசன் இந்து நாளிதழிடம் கூறுகையில், “ டெல்லி போலீசாரால் விசாரிக்கப்படும் இந்த வழக்கு, நேர்மையாக நடைபெறும் என்று ஒரு நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. உண்மையை கண்டறிந்தால் கூட, எனது மகன் திரும்பி வரப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

From ‘strong support’ to ‘let’s debate it’: The shifting stance of RSS on reservations

When mothers kill their newborns: The role of postpartum psychosis in infanticide

Political manifestos ignore the labour class

‘No democracy if media keeps sitting on the lap’: Congress ad targets ‘Godi media’

Was Chamkila the voice of Dalits and the working class? Movie vs reality