Tamil Nadu

ரோஹித் வெமுலா – முற்றுப்பெறாத ஓவியம்

Written by : TNM

By சுதிப்டோ மோண்டல்

(தமிழில்: கவின் மலர்)

(This is a translated version of Sudipto Mondal's article 'Rohith Vemula- An unfinished portrair' that appeared in Hindustan Times).

குண்டூரில், 1971 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் ரோஹித் வெமுலா பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையின் பின்னணிக்கதை தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ரோஹித்தின் வளர்ப்புப் ‘பாட்டி’ அஞ்சனி தேவியின் சில செயல்களால், அந்த அறிஞன் பின்னாளில் தன் தற்கொலைக் குறிப்பில் ”மரணத்தையொத்த விபத்து என் பிறப்பு’ என்று எழுதும்படி நேர்ந்தது.

”அது ஒரு மதிய உணவு நேரம். நல்ல வெயில். பிரஷாந்த் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வெளியே சில குழந்தைகள் வேப்பமரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுள் உண்மையிலேயே மிக அழகான சிறிய பெண் குழந்தையைக் கண்டேன். அவளால் சரியாக நடக்க்க்கூட முடியவில்லை. ஒரு வயதுக்கும் சற்று அதிகம் இருக்கும் அவளுக்கு” என்கிறார் அஞ்சனி. அச்சிறிய குழந்தைதான் ரோஹித்தின் தாய் ராதிகா.

ரோஹித் தலித் அல்ல என்று கூறும் உள்ளூர் தெலுங்கு ஊடகங்களுக்கு சாபமிட்டபடி பிழையற்ற ஆங்கிலத்தில் அஞ்சனி கதையை சொல்லத் தொடங்கினார். “இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவருக்குப் பிறந்த குழந்தை அவள். எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த ரயில்வே தண்டவாளங்களில் அவளுடைய பெற்றோர் வேலை செய்தனர். என் பெண் குழந்தையை அண்மையில்தான் இழந்திருந்தேன். எனக்கு என் குழந்தையின் நினைவு வந்துவிட்டது” என்கிறார்.

ஆனால் விநோதமாக, நம்மோடு பேசிக்கொண்டிருந்த அஞ்சனியோடு அமர்ந்திருந்த ராதிகாவால் ஆங்கிலத்தில் ஒரு சொல்கூட பேசமுடியவில்லை. உண்மையில் அஞ்சனியின் ஆங்கிலம் ரோஹித்தின் ஆங்கிலத்தைவிட சிறப்பானதாய்த் தோன்றியது.

தொழிலாளர்களாயிருந்த அப்பெற்றோரிடம் அஞ்சனி அக்குழந்தையைத் ‘தருமாறு’ கேட்டதாகவும் அவர்களும் “மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்” என்றும் கூறுகிறார். இப்படி குழந்தையைப் பெற்றுக்கொண்டதற்கு எந்த ஆவணப் பதிவும் இல்லை. “மிக எளிமையாக நடந்துமுடிந்தது”. குட்டிக்குழந்தை ராதிகா அந்த வீட்டின் ”மகளானாள்” என்று கூறுகிறார் அஞ்சனி தேவி.

”சாதியா? சாதி என்றால் என்ன? நான் வடேரா சாதியைச் சார்ந்தவள் (பிற்படுத்தப்பட்ட சாதி). ராதிகாவின் பெற்றோர் மாலா(பட்டியல் சாதி). அவளுடைய சாதி குறித்து ஒருபோதும் நான் யோசித்ததில்லை. அவள் என் சொந்த மகள் போலத்தான். என் சாதியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அவளை மண்முடித்து வைத்தேன்” என்று கூறும் அஞ்சனி தேவி, ராதிகாவுக்கும் மணிக்குமாருக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்த சாதனையையும் விளக்கினார். ”மணியின் தாத்தா வடேரா சாதியில் மிகவும் மதிப்புமிக்க ஒருவர். அவருடன் நான் பேசினேன். ராதிகாவின் சாதியை மிகவும் ரகசியமாக வைக்கவேண்டும் என்றும் மணியிடம் அதுபற்றிக் கூறக்கூடாதென்றும் பரஸ்பரம் பேசிவைத்துக்கொண்டோம்” என்கிறார்.

From Rohith Vemula's Facebook page

அவர்களின் மணவாழ்க்கையில் மூத்த மகள் நீலிமா, பின் ரோஹித், இளைய மகன் ராஜா என்று ஐந்து ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் பிறந்தனர். மணி ராதிகாவிடம் வன்முறையாகவும் பொறுப்பற்ற முறையிலும்தான் ஆரம்பத்திலிருந்து நடந்துகொண்டார். “அவர் குடித்திருந்தால் சில அறைகள் எனக்கு விழுவது சர்வசாதாரணமாக நடக்கும்” என்கிறார் ராதிகா.

திருமணம் முடிந்த ஐந்தாவது ஆண்டில் மணி ராதிகாவின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.

”பிரசாந்த் நகரில் உள்ள வடேரா காலனியில் இருந்த யாரோ ராதிகா மாலா சாதியைச் சேர்ந்தவரென்றும் அவர் வளர்ப்பு மகள்தான் என்றும் மணியிடம் கூறிவிட்டனர். அதன்பின் ராதிகாவை கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார்” என்கிறார் அஞ்சனி. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராதிகாவும் “மணி எப்போதும் தகாத சொற்களால் என்னை காய்ப்படுத்துவதுண்டு. அதிலும் என் சாதியைத் தெரிந்து கொண்டதுமுதல் அவர் மேலும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார். அநேகமாக எல்லா நாட்களிலும் அவர் என்னை அடிப்பதும், ஒரு தீண்டத்தகாதவளை ஏமாற்றி கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் கூறி தன் துரதிர்ஷ்டத்தை நொந்துகொள்வார்” என்கிறார்.

மணிக்குமாரிடமிருந்து தன் மகளையும் பேரக்குழந்தைகளையும் “காப்பாற்றியதாக” அஞ்சனிதேவி கூறுகிறார். “மணியைவிட்டு விலகி வந்ததும், 1990ல் அவர்களை மீண்டும் என் வீட்டிற்கு வரவழைத்தேன்” என்கிறார்.

ஆனால் ரோஹித்தின் பிறந்த ஊரான குண்டூருக்குச் சென்று ரோஹித்தின் நெருங்கிய நண்பரும் அவரது பி.எஸ்சி வகுப்புத் தோழருமான ஷேக் ரியாசை சந்தித்தபோது, வேறுமாதிரியான தோற்றமே கிடைத்தது. ராதிகாவும் ராஜாவும் தங்களைவிட ரோஹித் குறித்து ரியாஸ் அதிகம் அறிந்தவர் என்கிறார்கள்.

சென்ற மாதம் ராஜாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது, ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ரோஹித்துக்கு இருந்த சிக்கல் காரணமாக அவரால் வரமுடியாமல் போனது. அவருக்கு பதிலாக அவரிடத்தில் இருந்து அப்போது சடங்குகளைச் செய்தவர் ரியாஸ்.

ரோஹித் ஏன் தன் குழந்தைப்பருவத்தில் தனியனாய் இருந்தார் என்றும் தன் இறுதிக்கடிதத்தில் ” தவறு என்மீதும் இருக்கலாம்; உலகைப் புரிந்துகொள்வதில், அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தைப் புரிந்துகொள்வதில் நான் தவறிழைத்திருக்கக்கூடும்.” என ஏன் எழுதியிருந்தார் என்றும் தனக்கு மிகத் துல்லியமாகத் தெரியும் என்கிறார். 

”ராதிகா ஆண்ட்டியும் அவருடைய குழந்தைகளும் அவருடைய தாய்வீட்டில் வேலைக்காரர்கள் போல்தான் இருந்தார்கள். வீட்டிலுள்ள அத்தனை வேலைகளையும் அவர்கள்தான் செய்யவேண்டுமென்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மற்றவர்கள் வெறுமனே அமர்ந்திருந்தாலும் இவர்கள்தான் வேலை செய்வார்கள். ராதிகா ஆண்ட்டி மிகச் சிறிய வயதிலேயே அங்கு வீட்டுவேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார்” என்று ரியாஸ் உண்மைகளை வெளிப்படுத்துகிறார். குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1970களில் நடைமுறையில் இருந்திருந்தால், ராதிகாவின் தாய் எனப்படும் அஞ்சனி தேவி, ஒரு குழந்தையை வீட்டு வேலைக்கு உதவியாளராக வைத்திருந்த்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பார்.

A clay bust of Rohith made at the Hyderabad University

1985ல் ராதிகாவுக்கு 14 வயதானபோது மணிக்குமாரோடு திருமணம் நடந்தது. அதற்கும் 50 ஆண்டுகளுக்கும் முன்பே குழந்தைத் திருமணம் சட்டவிரோதமாகிவிட்டது. தான் ஒரு வளர்ப்புக் குழந்தை என்றும் மாலா சாதியைச் சேர்ந்தவரென்றும் ராதிகாவுக்குத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தபோது அவருக்கு வயது 12 அல்லது 13 இருக்கும். ”அப்போது உயிருடனிருந்த அஞ்சனியின் தாய் ராதிகாவை அடித்து, தகாத சொற்களால் திட்டியிருக்கிறார். எங்கள் வீட்டுக்கு அருகே அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் கேட்டபோது பாட்டி தன்னை ‘மாலா தே........’ என்று வீட்டுவேலை செய்யாததற்காகத் திட்டியதாகவும், அவளை வீட்டிற்கு அழைத்துவந்ததற்கு அஞ்சனியை சாபமிட்டதாகவும் கூறினாள்” என்கிறார் 67 வயதாகும் உப்பலப்படி தனம்மா.

ரோஹித்தின் தாயை அவர் சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே பார்த்துவரும் தனம்மா அப்பகுதியில் உள்ள மூத்தவர்களில் ஒருவர். ஒரு தலித் தலைவரும் முன்னாள் முனிசிபல் கவுன்சிலரும் கூட. அவர் அண்மையில் புதிப்பித்துக் கட்டியுள்ள வீடு கூட மாலா தலித் குடியிருப்புகளையும் வடேரா குடியிருப்புகளையும் பிரிக்கும் இடத்தில்தான் உள்ளது.

வடேரா குடியிருப்புப் பகுதியில் பல அண்டைவீட்டுக்காரர்களும்கூட ராதிகா ஒரு வேலைக்காரப் பெண் என்றே தெரியும் என்கின்றனர். தலித்தாகிய ராதிகாவை வடேரா சாதியைச் சேர்ந்த மணிக்குமாருக்கு மணம் செய்துவைத்ததன்மூலம் ஒட்டுமொத்த வடேரா சமூகத்தையே அஞ்சனி ஏமாற்றிவிட்ட்தாக வடேரா குடியிருப்புவாசி ஒருவர் எரிச்சல் தொனிக்கக் கூறினார்.

”ஒவ்வொரு முறை பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதும் தன் தாய் ஒரு பணிப்பெண்ணைப் போல அங்கே வேலை செய்ய வேண்டியிருப்பதால் ரோஹித்துக்கு அங்கு செல்வதென்றாலே வெறுப்புத்தான்” என்கிறார் ரியாஸ். ராதிகா ஒருவேளை வீட்டில் இல்லையென்றால் அவருடைய குழந்தைகள் அந்த வேலைகளைச் செய்யவேண்டும். ஒரு கிலோமீட்டர் தொலைவில், ரோஹித்தின் குடும்பம் ஒரேயொரு அறைகொண்ட தனிவீடு பார்த்து சென்றபின்னும் அவர்களை வீட்டுவேலைக்கு அழைப்பது தொடர்ந்தது.

குண்டூரில் ரோஹித் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்த காலம் முழுவதும் வீட்டுக்குச் செல்வது மிகவும் அரிது. அவர் அதை அறவே வெறுத்தார். ரியாஸ் மற்றும் வேறு இரண்டு பையன்களுடன் ஒரு சிறிய பேச்சுலர் அறையில்தான் தங்கினார். கட்டடத் தொழிலாளியாகவும், கேட்டரிங் வேலை செய்தும் அதற்கான தொகையைத் தந்தார். துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்; பொருட்காட்சிகளில் வேலைபார்த்தார்.

***
அஞ்சனிக்கு அவருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகள் உண்டு. இரண்டு மகள்களும் ராதிகாவின் வருகைக்குப் பின் பிறந்தனர். ஒரு மகன் பொறியாளர்; இன்னொருவர் சிவில் காண்டிராக்டர். ஒரு மகள் பி.எஸ்சி – பி.எட்; மற்றொரு மகள் பி.காம்-பி.எட்.

சிவில் காண்டிராக்டரான அஞ்சனியின் மகன் நகரத்தில் வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் நன்கறியப்பட்டவர். தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான என்.ஹரிகிருஷ்ணாவுக்கு நெருக்கமானவர். தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரபலமும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா.

மகள்களில் ஒருவர் குண்டூரின் வெற்றிகரமான கிரிமினல் வழக்கறிஞருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். தான் பெற்ற மகள்களைவிட அஞ்சனிதேவி அதிகம் கல்விகற்றவர். எம்.ஏ. எம்.எட் முடித்து, முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவருடைய கணவர் அரசாங்கத்தில் தலைமைப் பொறியாளர். பிரசாந்த் நகரின் பழமையான பெரிய வீடுகளுள் ஒன்று அவர்களுடையது.

பதின்பருவ பள்ளிப் பருவத்து பெண்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் அஞ்சனிக்கு 14 வயது ராதிகாவை திருமணம் செய்துகொடுப்பது சட்டப்படி தவறு என்று தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கல்வித்துறையில் இருந்துகொண்டு, தன் ”சொந்த மகள்” என்று விவரிக்கும் ஒரு சிறுமிக்கு கல்வி மறுத்தவர். ஆனால் தான் பெற்ற மகள்களையும் மகன்களையும் தன்னால் இயன்றவரை படிக்கவைத்துள்ளார்.

Grafitti in Bengaluru 

அஞ்சனி ஏன் பிழையின்றி ஆங்கிலம் பேசுகிறார் என்பதையும் அவரது ‘மகளும்’ ‘பேரன்களும்’ ஏன் பேசவில்லை என்பதற்கான காரணத்தை இது விளக்குகிறது. ஒரு தலித் சிறுமி தன் வீட்டில் தங்கிக்கொள்ளவும், அச்சிறுமி தன்னை ‘அம்மா’ என்றழைக்கவும் அவர் அனுமதித்திருக்கிறார். ஆனால் அஞ்சனிதேவி ஓர் இரக்கமுள்ள எஜமானியாக உருவானாரேயொழிய அக்கறைகொண்ட தாயாக இல்லவே இல்லை.

ரோஹித் எம்.எஸ்சிக்காவும் பி.எச்டிக்காகவும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது தன் சொந்த வாழ்க்கை குறித்து ரகசியம் காத்தார். அனைவருக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் போல தெரியும். அவருடைய நெருக்கமான நண்பரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத் தோழருமான ராம்ஜிக்கு, ரோஹித் தன் செலவுகளை சமாளிக்க கடைநிலை வேலைகளை செய்திருக்கிறார் என்று தெரியும். ஆனால் ரோஹித்தின் “பாட்டி” வசதியானவர் என அவருக்குத் தெரியாது. ரோஹித்தின் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் பலருக்கு ரோஹித் தன் தற்கொலைக் குறிப்பில்கூட வெளிப்படுத்த விரும்பாத அவருடைய வாழ்வின் இருண்ட பக்கங்கள் எதுவும் தெரியாது.

இரண்டாம் முறையாக அஞ்சனியிடம் பேசுவதற்கு முன், ராஜா வெமுலாவை இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதற்கான அனுமதிக்காக அணுகியபோது, அவர் முதலில் அதிர்ந்துபோனார். இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிய விரும்பினார். இந்தக் கட்டுரைக்காக குண்டூரில் யாரிடமெல்லாம் பேசனோம் என்று அனைவரின் பெயர்களையும் கேட்டபின் அவர் உடைந்துபோய் பின்னர் கூறினார் – “ஆம்! இதுதான் எங்களைக் குறித்த உண்மை. இந்த உண்மையைத்தான் என் சகோதரனும் நானும் எப்படியாவது மறைத்துவிட எண்ணினோம் நாங்கள் ‘பாட்டி’ என்று அழைத்த பெண்மணி உண்மையில் எங்கள் எஜமானர் என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டோம்”

ராஜா தன் சொந்த வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை விவரித்து ரோஹித் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவித்திருப்பார் என்பதை உணரவைக்கிறார். ஆந்திர பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்சி நுழைவுத் தேர்வில் 11ஆவது இடம் பெற்று வகுப்பில் சேர்ந்ததாகக் கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர அழைப்பு வந்தவுடன் இதைவிட அங்கு படித்தால் நல்லது என்றெண்ணி அங்கு சேர விரும்பினார்.

”ஆந்திர பல்கலைக்கழகம் இடமாற்ற சான்றிதழுக்கு 6,000 ரூபாய் கட்டச் சொன்னது. என்னிடம் பணமில்லை. என் பாட்டியின் குடும்பமும் உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் ஆந்திர பல்கலைக்கழக நண்பர்களிடம் உதவி கேட்டேன். அவர்களில் சிலர் 5 ரூபாயும் 10 ரூபாயும் தந்தனர். இது 2011ல் நடந்தது. அப்போது எந்த மதிப்புமில்லாத ஒரு பிச்சைக்காரனைப் போல என்னை வாழ்க்கையில் முதன்முறையாக உணர்ந்தேன்” என்கிறார் ராஜா வெமுலா.

அவர் பாண்டிச்சேரியில் கால்வைத்தநாள் முதல், கைவிடப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளுக்கான ஆசிரமம் ஒன்றில் கிட்டத்தட்ட 20 நாட்கள் இரவுகளில் தூங்கினார். “அதன்பின், பல்கலைக்கழகத்திற்கு வெளியே வசிக்கும் என்னுடைய சீனியர் ஒருவர் தனிவீட்டில் தங்கி இருந்தார். என்னை வீட்டு வேலைக்கு வரச்சொன்னார். வீட்டுவேலைகள் செய்துகொடுப்பதால் என்னை அவருடைய வீட்டில் உறங்கிக்கொள்ள அனுமதித்தார்” என்கிறார் ராஜா.

பாண்டிச்சேரியில் ஒருமுறை தொடர்ந்து ஐந்து நாட்கள் உணவில்லாமல் பட்டினியாய் இருந்தது குறித்துக் கூறுகிறார். “என் கல்லூரி நண்பர்கள் எல்லோரும் நல்ல வசதியுடையவர்கள். பீட்ஸாக்களும் பர்கர்களும் வளாகத்துக்கு வெளியேயிருந்து கொண்டு வருவார்கள். ஆனால் ஒருவர் கூட என்னிடம் நான் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று கேட்கமாட்டார்கள். நான் பட்டினியால் வாடுகிறேன் என அவர்களுக்குத் தெரியும்” என்கிறார்.

இத்தனை பட்டினியிலும் பற்றாக்குறையிலும் ராஜா எம்.எஸ்சி முதல் ஆண்டில் 65% மதிப்பெண்களும் இறுதியாண்டில் 70% மதிப்பெண்களும் எடுத்தார். ஆனால் ஏன் அவருடைய பாட்டி இவருக்கு உதவ முன்வரவில்லை? “இதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்” என்கிறார் ராஜா.

***
அஞ்சனியை மீண்டுமொரு முறை சந்தித்தபோது அவர் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவரின் வீட்டில் ராதிகாவுடனும் ராஜாவுடனும் இருந்தார். ராஜா இந்த சந்திப்பின்போது உடனிருக்க விரும்பாததால் வெளியே காத்திருந்தார்.

அஞ்சனியிடம் எப்படி அவருடைய ‘மகளை’ விட அவர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் என்று கேட்டபோது ராதிகா ‘அவ்வளவு அறிவாளி இல்லை” என்று பதிலுரைத்தார். சொந்தக் குழந்தைகள் எல்லாம் பட்ட்தாரிகளாக இருக்க, ரோஹித்தின் தாய் மட்டும் ஏன் 14 வயதிலேயே மணம் செய்துவைக்கப்பட்டார் என்று கேட்டபோது “ஒரு நல்ல குடும்பத்திலிருந்து பணக்காரப் பையனுடைய வரன் வந்தபோது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம்” என்றார். ஆனால் மணிக்குமாருக்கு இத்தனை கெட்டபெயர் இருக்குமென தனக்குத் தெரியாது என்கிறார். ராதிகாதான் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை என்கிறார் அஞ்சனி.

ரோஹித் தன் உடன்பிறந்தோரோரும் தாயோடும் வாழ்ந்த ஒற்றை அறை வீட்டை ரியாஸ் காண்பித்தார். ரோஹித்தும் ராஜாவும் கல்வியில் சிறந்துவிளங்கும் அறிவாளிகளாக இருந்தாலும் தங்கள் தேவைகளுக்காக பிறர் உதவியை நாடவேண்டியிருந்தது. அவர்களுடைய பாட்டி குடும்பம் பண உதவி அளிக்க ஒருபோதும் முன்வரவில்லை.

ஆனால் இந்த முறை, ரியாஸ் நடந்தவை அனைத்தையும் போட்டு உடைத்தார். ”ராதிகா ஆண்ட்டி தன் பிள்ளைகளின் மூலமாக மீண்டும் கல்விகற்கத் தொடங்கினார். அவர்களுடைய பள்ளிப் பாடங்களைக் கற்றுகொண்டு அவர்களுக்கு கற்பித்தார்” என்கிறார். தன் மகன்களோடு தன் பட்டப்படிப்பையும் ராதிகா முடித்தார்.

”ரோஹித் பி.எஸ்சி இறுதியாண்டு படிக்கும்போது, ராதிகா ஆண்ட்டி, பிஏ இரண்டாம் ஆண்டு படித்தார். ராஜா பி.எஸ்சி முதலாண்டு படித்தார். முதலில் ரோஹித் தேர்வில் வென்றார். அடுத்த ஆண்டு ஆண்ட்டி, அதற்கடுத்த ஆண்டு ராஜா வென்றார். சில நேரங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பதுண்டு. ஒருமுறை எங்கள் எல்லோருக்கும் ஒரே நாளில் தேர்வு வந்தது” என்று நினைவுகூர்கிறார் ரியாஸ்.

எடுத்துக்காட்டாக சில சம்பவங்களைச் சொல்லி ஏன் அஞ்சனியும் அவருடைய குடும்பமும், கல்வியில் சிறந்துவிளங்கிய அறிவாளிகளான இரண்டு “பேரப்பிள்ளைகளுக்கும்” உதவவில்லை என்று அஞ்சனியிடம் கேட்டபோது அதிக நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு இறுதியாக ‘எனக்குத் தெரியாது” என்றார்.

ரோஹித் வெமுலாவின் குடும்பத்தை வீட்டில் வேலையாட்களைப் போல நடத்தினார்களா? “எனக்குத் தெரியாது” என்கிறார் அஞ்சனி மீண்டும். “யார் உங்களுக்கு இதையெல்லாம் சொன்னது. எனக்கு சிக்கல் உண்டாக்கவேண்டும் என்பதே உங்கள் திட்டம். சரியா?” என்கிறார்.

குண்டூரிலிருந்து நாங்கள் சேகரித்த தகவல்களில் ஒரு தகவல்கூட உண்மையல்ல என்று அஞ்சனி கூறவே இல்லை. ஒரு கட்டத்திற்குப் பின் அவர் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களைத் தாழ்த்திக்கொண்டதன்மூலம் அந்த இடத்திலிருந்து நம்மை வெளியேறச் சொன்னார்..

ரோஹித்தின் மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் அவருடைய நெருங்கிய நண்பர் ரியாஸுடன் இருந்த பொழுதுகளே.

ரியாஸ் நம்மை அவர்கள் கூடிக் களித்த இடங்கள், சாகச இடங்கள் என அழைத்துச் சென்றார். ஆறு மணி நேரம் செலவழித்து குண்டூரில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்த சமயத்தில் ஒவ்வொரு தெருவிலும் ரோஹித்-ரியாஸ் கதையொன்று இருப்பதை உணரமுடிந்த்து.

பார்ட்டிகள், பதின்பருவ ஈர்ப்புகள், தோல்வியுற்ற காதலர் தின விருப்பங்கள் , பெண்களுக்கான சண்டைகள், சினிமா, இசை, பையன்களுடனான பார்ட்டிகள், ஆங்கில இசை, கால்பந்து வீரர்களின் சிகையலங்காரம் – இவையெல்லாம் ரோஹித் முதன்முறையாக பார்த்தவை.

தான் எப்போதும் இரண்டாவதுதான் என்றும் ரோஹித் தான் எப்போதும் கதாநாயகன் என்றும் கூறுகிறார் ரியாஸ். “ஒரு முறை வகுப்பில் அதிகமாக கேள்வி கேட்டான். ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை என்பதால் அவனை வெளியே அனுப்பிவிட்டார். ரோஹித்தின் புத்திசாலித்தனத்தை நன்கறிந்த பிரின்ஸிபால் இவ்விஷயத்தில் குறுக்கிட்டு ரோஹித் பக்கம் நின்று, வகுப்புக்குச் செல்லுமுன் கூடுதலாக தயார் செய்யுமாறு ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்” என்கிறார் ரியாஸ்.

ரோஹித்திற்கு இணையம் குறித்த நல்ல பரிச்சயம் இருந்தது. ஆசிரியர்களின் பாடத்திட்டம் எப்போதும் காலத்தில் பிந்தியிருப்பவை என அவன் அடிக்கடி அவர்களிடம் நிரூபிப்பான். ஆசிரியர்களுக்குக் கூட தெரியாத அறிவியல் இணையதளங்களை குறித்து அவன் அறிவான். வகுப்பில் மற்றவர்களைவிட எப்போதும் முன்னணியில் இருப்பான் என்கிறார் ரியாஸ்.

குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் ஒரு சிலர்தான் சாதியவாதிகளாக இருந்தனர் என்கிறார்.

”இந்த இடையீடுகள் எல்லாம் இருந்தாலும், ரோஹித்தின் வாழ்க்கை இரண்டு விஷயங்களைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. பகுதிநேர வேலை தேடுவது மற்றும் இணையத்தில் நேரம் செலவு செய்வது ஆகியவைதான். ஜூலியன் அஸாஞ்சேயின் மிகப்பெரிய விசிறி அவன் விக்கிலீக்ஸ் ஃபைல்களுடன் பல மணிநேரம் செலவு செய்வான்” என்கிறார் ரியாஸ். பி.எஸ்சி முடித்தபோது முதுநிலை படிப்புக்கான வாய்ப்புகள் ரோஹித்துக்குக் குறைவாகவே இருந்தன.

அவருடைய பி.எச்டி படிப்பு என்பது வெறும் சான்றிதழுக்காக அல்ல. அவருடைய ஆராய்ச்சி சமூக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதாக இருந்த்து. சமூக அறிவியலில் அவருக்கிருந்த அறிவு அவர் அங்கம் வகித்த அம்பேத்கர் மக்கள் இயக்கம் மற்றும் எஸ்.எஃப்.ஐ ஆகிய அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களுக்கு அரசியல் தத்துவங்களை கற்றுத் தந்ததால் ஏற்பட்டது என்கிறார் ரியாஸ்.

ரோஹித் மரணிப்பதற்கு ஒரு வாரம் முன்பு ரியாஸை அழைத்திருக்கிறார். “தன் பி.எச்டியை முடிக்க முடியாமல் போய்விடுமோ என தான் அச்சப்படுவதாக என்னிடம் கூறினான். எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவுடன் எதிர்நிலையிலிருக்கும் ஏபிவிபி, மிக பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும் கூறினான். தான் வெல்வோம் என்கிற நம்பிக்கையை இழந்திருந்தான்” என்கிறார் ரியாஸ்.

இரு நண்பர்களும் நீண்ட நேரம் பேசினர். குண்டூரில் உள்ள மூன்று நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து ஒரு தொழில் தொடங்கலாம் என்று ஆறு மாதங்களுக்கு முன்பாக ஏற்கனவே பேசிவைத்திருந்த திட்டம் குறித்து விவாதிக்கத் தொடங்கியபோது ரோஹித்தின் மனநிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. “ஒரு தொழில் தொடங்கி குண்டூரையே ஆளலாம்” என்று ரோஹித் அந்த உரையாடலில் தெரிவித்திருக்கிறார்.

அந்த உரையாடல் முழுவதிலும் பல முறை ரோஹித் தனக்கு கல்வித்தகுதி வேண்டும் என்பதால் மட்டும் பி.எச்டி முக்கியமில்லை, அந்த ஆராய்ச்சியினால் புதியனவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் சிலவற்றை உடைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்ததாக ரியாஸ் கூறுகிறார்.

பல்கலைக்கழகத்திலிருந்து நிலைமை போலவே வாழ்க்கை முழுவதும் சக மனிதர்களால் சம்மாக நடத்தப்படாமல் இருந்ததுதான் ரோஹித் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ள காரணமா?

“அவனுடைய குடும்பக் கதை அவன் வாழ்வு முழுவதும் அவனை துன்புறுத்தியது” என்கிறார் ரியாஸ். “அவன் வளர்ந்த வீட்டில் அவனிடம் சாதிப் பாகுபாடு காட்டினார்கள். ஆனால் அதற்கு அடிபணியாமல் அவன் அதை எதிர்த்தான். அவன் தன் பி.எச்டி என்கிற இறுதி இலக்கை எட்டுவதற்கு பல தடைகளை உடைத்தான். அதைத் தொடரமுடியாது எனும் நிலைமையை அவன் உணர்ந்துகொண்டபோது அவன் நம்பிக்கை இழந்துவிட்டான்” என்கிறார்.

ரோஹித் தன் அத்தனை யுத்தகளங்களுக்குப் பின்னும், நம்பிக்கை இழந்தது எப்போதெனில், அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால், “மனிதனின் மதிப்பு அவனுடைய உடனடி அடையாளமாக மட்டும் சுருக்கப்பட்டது. அண்மைய சாத்தியங்களாகிவிட்ட தேர்தல் வாக்காகவும் எண்ணாகவும் பண்டமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு மனிதன் ஒருபோதும் அவனுடைய மனமாகப் பார்க்கப்பட்டதில்லை. கனவுகளால் உருவான அற்புதமாகவும் கருதப்பட்டதில்லை. ஒவ்வொரு துறையிலும், கல்வியிலும், தெருக்களிலும், அரசியலிலும் அப்படியே. மரணிப்பதிலும் வாழ்தலிலும்கூட” என்பதை உணர்ந்தபோதுதான்.

The identity theft of Rohith Vemula’s Dalitness

Telangana police to reinvestigate Rohith Vemula case, says DGP

HD Revanna cites election rallies for not appearing before SIT probing sexual abuse case

A decade lost: How LGBTQIA+ rights fared under BJP govt and the way forward

In Holenarsipura, Deve Gowda family’s dominance ensures no one questions Prajwal