கேரளா மாணவி படுகொலையை கண்டித்து, பிரியாமணி கூறிய கருத்திற்கு டிவிட்டரில் எதிர்ப்பு

Tamil Tuesday, May 10, 2016 - 15:59

சமீபத்தில், கேரளா மாநிலத்தில் ஜிஷா எனும் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது, கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகை பிரியாமணி டிவிட்டரில் கூறிய கருத்து டிவிட்டர்வாசிகளை கோபமடைய செய்துள்ளது.

பிரியாமணி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜிஷா படுகொலை சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும், இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

பிரியாமணியின் இத்தகைய கருத்திற்கு, டிவிட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் பிரியாமணி, தனது சமீபத்திய சினிமாவை பிரபலபடுத்தும் நோக்கில் இவ்வாறு பதிந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு சிலரோ, அவரது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மற்றும் சிலர், சகிப்புத்தன்மையை குறித்து கருத்து கூறிய அமீர்கானின் சகோதரி என குற்றஞ்சாட்டியுள்ளனர். தொடர்ந்து பிரியாமணி நடித்துள்ள சில சினிமாக்களில் உள்ள படங்களை போட்டு, இதுபோன்று நடித்துள்ள இவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து கருத்துகூற எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ளனர்.

இதனிடையே, நடிகை பிரியாமணி நியூஸ் மினிட்டிடம் தனது நிலைப்பாட்டை குறித்து விளக்கியுள்ளார். “ நான் இதனை குறித்து பெருமைபடுகிறேன். சமூகத்தில் உள்ள சில தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், நான் தேச துரோகியாக கருதப்படுகிறேன். எனது டிவிட்டர் கருத்துக்களை யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அமீர்கானின் சகோதரி என அழைக்கப்படுவதை பெருமையாக கருதுகிறேன். ஒரு இந்திய குடிமகளாக, இந்திய பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க எனக்கு உரிமை உள்ளது.” என்றார் அவர்.

மேலும் அவர் , “ ஒரு நடிகையாக, அதுவும் சில குறிப்பிட்ட ஆடைகளை நான் அணிவதால் நான் இதுபோன்ற கருத்துக்கள் கூறக்கூடாது என என்னிடம் கூறுகிறார்கள். இவர்கள் கூட சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பு தான். நான் யாருக்கும் எதற்காகவும் கடன்பட தேவையில்லை “ என்றார்.

நடிகர் துல்கார் சல்மான், இதே போன்றதொரு கருத்தை ட்வீட் செய்த போது, அவருக்கு எதிராக கோபமான எதிர்வினைகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, பிரியாமணியை, அவர் இந்தியாவை வசைபாடுகிறார் எனகூறி, அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் டிவிட்டர் ட்ரோலர்கள் கூறியுள்ளனர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.