இஸ்லாமிய விவகாரத்து முறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ பதர்சயீத்துடன் ஒரு நேர்காணல்

நாம் ஏன் மதத்தை இங்கு கொண்டு வர வேண்டும் ? மதமும், சட்டமும் இரண்டுமே தனித்தனியானது.
இஸ்லாமிய விவகாரத்து முறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ பதர்சயீத்துடன் ஒரு நேர்காணல்
இஸ்லாமிய விவகாரத்து முறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ பதர்சயீத்துடன் ஒரு நேர்காணல்
Written by:

இஸ்லாமியர் ஒருவர் தனது மனைவியிடம் மூன்று முறை ஒரு தலைபட்சமாக ‘தலாக்’ சொன்னாலே விவகாரத்து ஆகிவிடும் என ஷரியத் சட்டம் கூறுகிறது. இதனை எதிர்த்து, 70 வயதான வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பதர்சயீத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னர், மூன்று முறை தலாக் வழங்கும் முறையின், அரசியலமைப்பு சட்ட செல்லுபடியாகும் தன்மையை கேள்விக்குள்ளாக்கிய வழக்கான ஷயரா பானு வழக்கையும், பதர் சயீத் உட்படுத்தியுள்ளார்.

முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலான பதர்சயீத், முஸ்லீம் பெண்கள் மற்றும் ஆண்களிடையே விவகாரத்து விவகாரங்களில் சரியான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கும்படி, உச்சநீதிமன்றத்தை கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் சில இஸ்லாமிய மதப் பண்டிதர்கள், எந்தவித நீதிமன்ற அதிகாரமும் இல்லாமலேயே தன்னிச்சையாக விவகாரத்து வழங்குவதையும் உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இவரது இந்த நடவடிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், நியூஸ் மினிட் சார்பில் பதர்சயீத்தை நேரில் பேட்டி கண்டோம்.

கே. மூன்று முறை தலாக் சொல்லும் முறைக்கு தடைகோரி நீங்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதன் நோக்கம் ?

இரண்டரை ஆண்டுகளுக்கு முன், காசிக்களுக்கு விவகாரத்து அளிப்பதற்கான உரிமை இல்லை என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினேன். அவர்களுக்கு எந்தவித நீதிமன்ற அதிகாரமும் இல்லை. அவர்களின் இத்தகைய நடவடிக்கையால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஷயரா பானு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள சூழலில், நானும் ஒரு முஸ்லீம் பெண்ணும், ஆணும் விவாகரத்து பெற வேண்டுமெனில் நீதிமன்றத்திற்கு சென்று பெற வேண்டும் என வாதிடுகிறேன். ஏற்கனவே உச்சநீதிமன்றம் மூன்று முறை தலாக் சொல்லும் முறையை ஒழித்துவிட்டது. ஆனால் அதை யார் பின்பற்றுகிறார்கள் ?

கே. இத்தகைய நடவடிக்கையை எடுக்க பல பெண்களும் உங்களை அணுகினார்களா ? இதுபற்றி உங்கள் அனுபவம் தான் என்ன ?

பல பெண்கள் உதவி கேட்டு எங்களை நாடி வருகின்றனர். சட்டங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட, அவர்களுக்காக ஏதேனும் புதுமையாக செய்து நீதி கிடைக்கும் முயற்சியை நாங்கள் எடுத்து வருகிறோம். நான் ரோஷ்ணி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். ஏன் நாங்கள் எப்போதும் இவற்றுடன் போராடி கொண்டிருக்கிறோம் ? எங்கள் உரிமைகள் மீறப்படும் போதெல்லாம் எங்களால் ஏன் நீதிமன்றத்தை அணுகி உதவி கோர முடியவில்லை ?

எண்ணற்ற பெண்கள், எந்தவித காரணமும் இன்றி அவரவர் வீடுகளை விட்டு வெளியில் தூக்கிவீசப்பட்டுள்ளனர். சில வழக்குகளில் பெண், ஏதேனும் பிரச்சினை இருக்கிறது என சொன்னால், உடனே அந்த ஆண், தான் வேறொரு பெண்ணை மணந்து கொள்ள போவதாகவும், விருப்பம் உண்டு என்றால் என்னுடன் வந்து வாழ வேண்டும் என அலட்சியமாக கூறும் நிலை உள்ளது. ஒரு வழக்கில், கர்ப்பிணியான பெண்ணிற்கு மின்னஞ்சல் மூலம் தலாக் சொன்ன சம்பவமும் உள்ளது.

கே. நீங்கள் இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறும் விமர்சனங்களுக்கு எப்படி நீங்கள் பதிலடி கொடுக்கிறீர்கள் ?

நான் மதத்திற்குள் நுழையவில்லை. ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதமானது சட்டத்திலிருந்து பிரிந்து தனியாக செயல்படுவது. நான் பாலின சமத்துவத்தை பற்றியே பேசுகிறேன். எனது மதம் எனக்கு எண்ணற்ற உரிமைகளை தந்துள்ளது. இடையில் சிலர் அவற்றிற்கு தவறான அர்த்தங்களை கற்பிக்கின்றனர். நான் பேசும் பாலின சமத்துவத்திற்கான தீர்வை நீதிமன்றம் வழங்கும் என நான் நிச்சயம் நம்புகிறேன்.

கே. 1980களில் இருந்த ஷா பானு வழக்குடன் இன்றைய ஷயாரா பானு வழக்கை எப்படி ஒப்பிடுவீர்கள் ?

பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு பெற்றவர்களாக உருவெடுத்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்புகிறார்கள். நாம் 20 ஆண்டுகள் முன்னோக்கி வந்துள்ளோம். பெண்களும் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளார்கள். தற்போது  பெண்கள் பலரும் முன்னுக்கு வந்துள்ளனர். முஸ்லீம் பெண்கள் கூட அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் கூட, தங்கள் குரல்கள் கேட்கும் அளவிற்கு முன்னுக்கு வந்துள்ளனர்.

கே. பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசியல் குறுக்கீடு ஏதேனும் இருக்கும் என கருதுகிறீர்களா ? இந்த வழக்கு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு தூண்டுகோலாக அமையுமா ?

எண்ணற்ற மதங்களும் பலவித கலாச்சாரங்களும் உள்ள மாநிலங்களும் உள்ளடக்கிய நாட்டில் பொது சிவில் சட்டம் ஏற்புடையதாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா ? எனக்கு தேவை நீதி தான். அதற்காக நான் காத்திருக்க முடியாது. அரசியல் தலையீடுகள் இருக்குமா என எனக்கு தெரியாது. நான் பாலின சமத்துவத்தை பற்றி தான் சிந்திக்கிறேன்.

கே. ஷயாரா பானு போன்ற முஸ்லீம் பெண்களுக்கு, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் அல்லது இஸ்லாமிய பெண்கள் (பாதுகாப்பு மற்றும் விவகாரத்துக்கான உரிமைகள்) சட்டம் 1986 உள்ளிட்ட சட்ட வழிகள் பல உள்ளன என சிலர் வாதாடுகின்றனர். உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லும் முறை செல்லாது என கூறும் கடந்த கால தீர்ப்புகள் கூட சில உள்ளன. இப்படியிருக்க,சொல்ல போனால் இஸ்லாமிய பெண்களின் உரிமைமையை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்கள் நெறிமுறைப்படுத்தவேண்டும் அதற்கு மாற்றாக பொது சிவில் சட்டம் கொண்டுவருவது தவறு என்ற வாதத்திற்கு உங்கள் கருத்து என்ன ?

நமக்கு ஒரு பொது சிவில் சட்டமும் தேவையில்லை. கடந்த 25 ஆண்டுகளாக சட்டங்களை நெறிமுறைப்படுத்த கேட்டு போராடுபவர்களில் நானும் ஒரு நபர். ஆனால் அது நடக்கபோவதாக தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு தேவை அவசர உத்தரவுகள். பல தார மணத்திலும், விவாகரத்து சட்டங்களிலும் ஏன் அதிக அளவில் பிரச்சினைகள் உள்ளன ? ஏனென்றால் ஆண்கள் தங்கள் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகின்றனர்.

கே. வெளியிலிருந்து அரசியல் தூண்டுதல் இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தினுள்ளேயே சீர்திருத்தம் ஏற்படுவது எவ்வளவு முக்கியமானது என கருதுகிறீர்கள் ?

நானும் அதே சமூகத்தினுள் தான் இருக்கிறேன். நாங்கள் சீர்த்திருத்தத்தை தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறோம்.

கே. இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, அது இஸ்லாமிய பெண்களுக்கு ஊறு விளைவிப்பதாக போய்விட்டது என நீங்கள் நினைக்கிறீர்களா ?

எனக்கு அது பற்றி தெரியாது. அப்படி ஒருவேளை நடந்திருந்தால் கூட அவற்றை நான் ஒதுக்கி வைத்து விடுகிறேன். எனக்கு நீதிமன்றத்தின் மேலும் பெண்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் நல்ல மாற்றம் உருவாகும்.

கே.இஸ்லாமிய தனிநபர் சட்டம் சட்டரீதியாக நிலைத்து நிற்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா ?

எனது சட்ட உரிமைகளை இதுவரை என்னால் பெறமுடியாமல் இருக்கும் நிலையில், எந்த சட்டம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை பற்றியோ அல்லது பாலின நீதி வியாபித்திருப்பதை பற்றியோ நான் கவனிக்க போவதில்லை. நாம் ஏன் மதத்தை இங்கு கொண்டு வர வேண்டும் ? மதமும், சட்டமும் இரண்டுமே தனித்தனியானது.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com